ஜோகடி  நிருத்யா நடனக் கலைஞருக்கு விருது!  

கர்நாடக அரசின் கிராமிய கலை வளர்ச்சித் துறையின் ஜனபதா அகாதெமியின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கையான மஞ்சம்மா ஜோகடி(64)க்கு, "ஜோகடி நிருத்யா' என்கிற பாரம்பரிய கிராமிய நடனக்கலை வளர்ச்சிக்காகப்
ஜோகடி  நிருத்யா நடனக் கலைஞருக்கு விருது!  

கர்நாடக அரசின் கிராமிய கலை வளர்ச்சித் துறையின் ஜனபதா அகாதெமியின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கையான மஞ்சம்மா ஜோகடி(64)க்கு, "ஜோகடி நிருத்யா' என்கிற பாரம்பரிய கிராமிய நடனக்கலை வளர்ச்சிக்காகப் பாடுபடுவதால் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

பல்லாரியில் கல்லுகம்பகிராமா என்ற ஊரில் பிறந்த மஞ்சுநாத். தன் தந்தை வேலை பார்த்து வந்த தாவண்கரே நகரத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். 10-ஆவது வகுப்பு வரை படித்த மஞ்சுநாத், தன்னுடைய 16-ஆவது வயதில் உடலில் பெண்மை தன்மை ஏற்படுவதை உணர்ந்தார். ஒருநாள் தன்னுடைய தாயார் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஒசப்பேட்டை சென்ற மஞ்சுநாத் தன்னுடைய பெயரை மஞ்சம்மா என மாற்றிக் கொண்டு திருநங்கையாகவே வாழத் தொடங்கினார்.

இட்லி விற்றும், குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தும் கிடைத்த பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். வடகர்நாடகாவில் கல்லல்வா ஜோகி என்ற அம்மனை வணங்கும் திருநங்கைகள் சமூகத்தினர் தங்களை கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொள்வதற்காக தலைமீது குடம் அல்லது கூடை வைத்து ஜோகடி நிருத்யா என்ற பாரம்பரிய கிராமிய நடனத்தை ஆடுவது வழக்கம். இந்த நடனத்தில் தேர்ச்சிப் பெற்ற கல்லவ்வா ஜோகடி என்ற திருநங்கையிடம் பயிற்சி பெற்ற மஞ்சம்மா, கூடவே அவர் நடத்தி வந்த நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். நாடகத்தில் பஸ்மாசூரன், கீசகன், நரகாசூரன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பையும், புகழையும் பெற்றார்.

கல்லவ்வா மரணத்திற்குப் பிறகு அவர் நடத்திய நாடகக் குழுவை தானே ஏற்று நடத்தியதோடு, நூற்றுக்கணக்கான ஜோகடிகளுக்கு ஜோகடி நிருத்யா நடன கலையை கற்பித்து வந்தார். ஒரு பாரம்பரிய கிராமிய நடனம் அழிந்து விடாமல் காப்பாற்றி வரும் மஞ்சம்மாவின் வாழ்க்கை வரலாற்றை, அருண் ஜோலட்குட்லிகி என்ற கன்னடப் பேராசிரியர் "நடுவே சுலிவ ஹென்னு' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

""ஜோகடிகளுக்கே உரிய ஒரு நடனத்தை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்ததை கடவுள் கொடுத்தவரமாக கருதுகிறேன். இதற்காக எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விருதை என்னுடைய திருநங்கை சமூகத்திற்கு அர்ப்பணிப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் ஜோகடி மஞ்சம்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com