கதை சொல்லும் குறள் - 36:  புதிய மனிதன்! 

அருணாசலம் செட்டியாரின் கைகள் கட்டுக் கட்டாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய்க் கட்டுக்களை வகை வாரியாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன.
கதை சொல்லும் குறள் - 36:  புதிய மனிதன்! 


அருணாசலம் செட்டியாரின் கைகள் கட்டுக் கட்டாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய்க் கட்டுக்களை வகை வாரியாகப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தன. இப்படிப்  பண மூட்டைகளையும், சில்லரைக் காசுகளையும் சேமித்து வைக்கும் இடத்தில் தன்னுடைய மனைவி வள்ளியைக் கூட நுழைய விடமாட்டார்.
அருணாசலம் பண விஷயத்தில் மிகவும் கறார் பேர்வழி என்று பெயர் எடுத்தவர். பைசா பைசாவாக எண்ணித்தான் செலவிடுவார். பணக்கட்டுக்களை அடுக்கி அழகு பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒரு பிரியம்.
மகேஷ் என்று ஓர் ஆண் பிள்ளையும், வடிவம்மை, உமையாள் என்று இரண்டு பெண் பிள்ளைகளும் அவருக்கு வாரிசாகப் பிறந்திருந்தனர். இரண்டு பெண்கள் என்பது 
அருணாசலத்திற்குப் பிடிக்காமல் இருந்தது. செட்டியார் சமூகத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் பெரும் பணத்தை செலவு செய்ய வேண்டுமே என்பதுதான் அதற்குக் காரணம்.
அருணாசலம் பரம்பரைப் பணக்காரர் இல்லை. இவரின் தந்தை பழனிசாமி, வெறும் குமாஸ்தாவாக வாழ்ந்து 
முடித்தவர். வருமானம் சொற்பம்; ஆனால் ஆறு பிள்ளைகள் வயிறு அதில் நிறைய வேண்டி இருந்தது. எப்பொழுதும் வீட்டில் பற்றாக்குறைதான். இப்படிப்பட்ட வறுமையைச் சிறு வயதிலிருந்தே அனுபவித்ததினால், பிற்காலத்தில் தொழில் செய்து பெரும் பணம் ஈட்டியபொழுதும், அதைச் சரியாக சேமித்து வைக்காவிட்டால் அது கரைந்து போய்விடும், தன்னை மீண்டும் ஏழையாக்கி விடும் என்ற எண்ணம் அருணாசலத்தின் மனதில் வேரூன்றிப் போய் இருந்தது.
அருணாசலத்தின் படிப்பு வெறும் பத்தாம் கிளாஸ் வரைதான். படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, துணி மூட்டையைத் தன்னுடைய சைக்கிளின் பின்னால் ஏற்றிக் கொண்டார். அவர் வாழ்ந்த திருநெல்வேலியின் ஏழை மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வேகாத வெயிலில் சைக்கிளை மிதித்துப் பயணிப்பார். ரவிக்கைத் துண்டுகள், சின்னாளம்பட்டி புடவைகள், மதுரை சுங்கடிச் சேலைகள் என்று அவருடைய துணி மூட்டையில் இருக்கும்.
இப்படிப் பாடுபட்டுச் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தில், பஜார் பகுதியில் ஒரு சிறு கடையை வாடகைக்கு 
எடுத்துத் துணி வியாபாரம் செய்தார். வள்ளியைக் கைப்பிடிக்கும்பொழுது மாப்பிள்ளை துணிக்கடை வைத்திருக்கிறார் என்ற மரியாதை அவருக்குக் கிடைத்திருந்தது.
அயராத உழைப்பு, இன்று திருநெல்வேலி, மதுரை, திருச்சியில் மகேஷ் ஜவுளி மாளிகை என்ற முத்திரையைப் பதித்திருக்கும் கடல்போல் விரிந்த துணிக்கடை. குளிர்சாதன வசதிகளோடு, பிறந்த குழந்தை தொடங்கி, இளைய தலைமுறையினர், நடு வயதினர், முதியவர் என்று அனைவரின் உள்ளம் கவரும் வகையில் விதவிதமானத் துணி வகைகள் மகேஷ் ஜவுளி மாளிகைகளில் கொட்டிக் கிடக்கும். அங்கு செல்வோருக்கு எதை வாங்குவது, எதைக் கைவிடுவது என்பதை 
நிர்ணயிப்பதே பெரிய சவாலாக அமையும்.
பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் போதும், மகேஷ் ஜவுளி மாளிகைகளில் கூட்டம் அலைமோதும். சுற்று 
வட்டாரக்        கிராமங்களில் இருந்து எல்லா மக்களும் துணி வாங்க இங்கே கூடிவிடுவார்கள். அருணாசலச் செட்டியாருக்குப் பணத்தை எண்ணிப் பார்த்து கைகள் வலிக்கத் தொடங்கி விட இப்பொழுது ரூபாய் நோட்டுக்களை எண்ணும் மிஷின்கள் நான்கு அவரின் கைவசம் இருக்கிறது.
""வள்ளி, இராவுக்கு என்ன பலகாரம் செய்து வெச்சிருக்கே?''
""அரிசி உப்புமாவும், இட்லி, மல்லி சட்னி, சாம்பாரும் இருக்குதுங்க. ஏங்க மணி நடுஜாமம் ஆகுது, இப்பத்தான் சாப்பிட வரீங்க. வயசு அறுபதைக் கடந்துடுச்சு இன்னும் எதுக்கு இப்படி உழைக்கறீங்க? இரண்டு பொண்ணுங்களைக் கட்டிக் கொடுத்தாச்சு. மகேஷுக்கும் புள்ள பொறந்தாச்சு. அவன்கிட்ட சில பொறுப்புகளைக் கொடுக்கலாம்தானே?''
""அடிப்போடீ, புரியாமப் பேசறே. அவனுக்கு இன்னும் வியாபார நுணுக்கம் எல்லாம் சரியாகத் தெரியாது. வயது முப்பதுதானே ஆகுது, இன்னும் சில வருஷம் போகட்டும்''
""பொறுப்பைக் கொடுத்தாதானே பொறுப்பு வரும். பெரிய இடத்திலே இருந்து பொண்ணை எடுத்திருக்கிறோம். அவ நம்ம புள்ளையை மதிக்கறதே இல்லை. மகேஷ் ஜவுளி மாளிகையின்னு பெரிய பேருதான்; கைச் செலவுக்கு அப்பா கையை எதிர்பார்க்கிறியேன்னு நம்ம பையனைக் கலாய்க்கிறாளாம்''
""வேணும்னா, அவ அப்பன் வீட்டுக்கு போகச் சொல்லு''
""அப்படிப் பேசாதீங்க, நல்ல பொண்ணு, புருஷனுக்குப் படிப்புக்கு ஏத்த வேலையை நீங்க கொடுக்கலையேங்கற ஆதங்கம்''.
""ஆமாம் பெரிய பி.காம்., எம்.பி.ஏ., படிப்பு, அதை வெச்சுக்கிட்டு ஆயிரக்கணக்கிலேதான் சம்பாதிக்க முடியும்; நான் வெறும் பத்தாங்கிளாஸ், பாடுபட்டு உழைச்சி இன்றைக்குக் கோடியிலே புரள்றேன்''.
""ஆமாம் நல்லா புரண்டீங்க. ஒரு ஊரு, நாடு பாத்திருக்கோமா. எப்பப்பாரு கடை கடைன்னு. என் தோழி கமலம், அவள் புருஷன் பாங்குலே வெறும் கிளார்க். அவ போயிட்டு வந்துட்டா, சிங்கப்பூர், மலேசியான்னு''.
""ஏய், என் கோபத்தைக் கிளறாதே, அப்புறம் வீடு ரணகளமாயிடும். இன்னும் கொஞ்சம் சாம்பாரை ஊத்து. மனுசனை நிம்மதியா சாப்பிடக்கூட விடமாட்டே''.
இதுக்கு மேலே பேசினா, வேதாளம் முருங்க மரம் ஏறிடும்னு, இந்த முப்பத்து ஐந்து வருஷ தாம்பத்தியத்திலே வள்ளி நன்றாக அறிந்ததாலே வாயை மூடிக் கொண்டாள்.
படுக்கையில் வந்து படுத்த வள்ளிக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணி மனம் அலைபாய்ந்தது. பெரிய கோடீஸ்வரியாக இருந்து என்ன பயன்? கணவரோடு ஒரு சினிமா, டிராமா, கோயில் குளம் என்று சேர்ந்து போனது கிடையாது. விசேஷங்களுக்குக் கூட, "டிரைவரோடு காரில் போயிட்டு வந்துடு' என்பார் அருணாசலம்.
கோடை விடுமுறை என்றால் பெண் பிள்ளைகளும், பேரப்பசங்களும் திருநெல்வேலிக்கு வந்துவிடுவார்கள். 
""அம்மா, எவ்வளவு பேர் குடும்பங்களாகச் சுற்றுலா போறாங்க; ஏம்மா அப்பா எப்பப் பார்த்தாலும் கடைகளை விட்டு வரமாட்டேங்கறாரு' என்பார்கள். 
பாவம் வள்ளி என்ன பதில் சொல்வாள்? ""அப்பாவுக்கு வேலை அதிகம்மா'' என்று முடித்துக் கொள்வாள். 
""அப்பாவுக்குப் பணத்தைப் பெருக்குவதில்தான் இஷ்டம் அதிகம், செலவு செய்வதில் இல்லை'' என்று எப்படிச் சொல்லுவாள்'?
சித்திரை வெயில் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தது. திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு இட்டுச் செல்லும் தார் சாலையில் அந்த கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. 
மதுரையில் இருக்கும் மகேஷ் ஜவுளி மாளிகை பிராஞ்சுக்கு மேற்பார்வை இட அருணாசலம் சென்று கொண்டிருந்தார்.
ஏன் இப்படி வேர்க்குது? ""டிரைவர் கொஞ்சம் ஏஸியைக் கூட்டி வை'' என்றார்.
""மேக்ஸிமத்தில் தான் வெச்சிருக்கேன் சார்'' என்றான் டிரைவர்.
""ஐயோ, இடது பக்கம் மார்பில் அம்மாடி வலி தாங்க முடிய வில்லையே'' என்று அலறிச் சாய்ந்தார் அருணாசலம்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்துக் கொண்ட ஓட்டுநர், வேகமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையை நோக்கிக் காரை ஓட்டிச் சென்றான்.
மருத்துவமனையை அடைய நாற்பத்தைந்து நிமிடமானது. அவசர சிகிச்சைப் பகுதிக்கு அருணாசலம் எடுத்துச் செல்லப்பட்டார். குடும்பத்தினருக்குச் செய்தி போனது.
""டாக்டர், அவருடைய உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே'' என்று தேம்பினாள் வள்ளி.
""அம்மா, மாரடைப்பு ஏற்பட்டிருக்கு. ஆன்ஜியோ செய்து பார்த்தோம். இருதயத்தில் ரத்தம் எடுத்துச் செல்லும் மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருக்கு. உயிர் பிழைத்ததே பெரும் பாக்கியம்''.
""டாக்டர், இப்ப என்ன செய்யனுமோ அதைச் செய்து அப்பாவை பழையபடி ஆக்கிடுங்க'' என்றான் மகேஷ்.
""நாளைக்கே அவருக்குப் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எல்லாம் நல்லபடி நடக்கும் கவலைப்படாதீங்க''.
பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து வீடு வந்து சேர்ந்தார் அருணாசலம். பயத்திலும், நோயின் தீவிரத்திலும் ஆள் பாதியாக இளைத்து விட்டார். உடல் உபாதையினால் பட்ட அவஸ்தை அவரை சிந்திக்க வைத்தது.
தொழில், பணம் என்று எப்படி நாயாய், பேயாய் அலைந்தேன். உடல் நலனில் கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்ள வில்லையே. நேரம் தவறிய உணவு, எப்பொழுதும் தொழிலைப் பற்றிய மன உளைச்சல், அலைச்சல், சரியான உடற்பயிற்சியும் கிடையாது, குடும்பத்தோடு நேரத்தைச் செலவழித்ததே இல்லை. பேரப்பிள்ளைகளோடுக் கொஞ்சி விளையாடியது இல்லை.
எல்லாம் எதற்காக-? பணத்தின் மீதுக் கொண்ட பற்றுதல் காரணமாக அல்லவா நிகழ்ந்தது. அன்றைக்குச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றிருக்காவிட்டால் இந்நேரம் சாம்பலாய் கரைந்திருப்பேனே. கோடியில் புரண்டேன், மன அமைதியை இழந்தேன். உடல் நலத்தைப் பேண மறந்தேன். 
தொழில் செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க 
வேண்டும். அதோடு போதும் என்ற மனமும் வேண்டும். இனிமேலாவது நான் பணத்தின் மீது கொண்ட அதீதப் பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும். குடும்பத்தோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையின் அழகைக் கண்ணாரப் பருக வேண்டும், அவள் மடியில் சுகம் காண வேண்டும்.
""மகேஷ் இங்கே வாப்பா.''
""என்னப்பா, உடம்பு எப்படி இருக்கு?'' என்று மகன் அன்பொழுகக் கேட்டான்.
அப்பாவிடம், அன்பைக் காணாத மகன் அன்பு காட்டுகிறான். அருணாசலத்தின் உள்ளம் உருகிப் போனது.
""மகேஷ் இந்தா, கடைகளின் முழுப் பொறுப்பையும் உன்கிட்டே கொடுக்கறேன்''.
""அப்பா,''
""பயப்படாதே உனக்குப் பின்னால் நின்று நான் தோள் கொடுப்பேன். என் உயிர் உள்ளவரை உனக்கு வழிகாட்டுவேன்''.
""ஏம்பா திடீர்ன்னு?''
""ஆறு மாசமா நல்லா யோசிச்சு எடுத்த முடிவு. பாவம் உன் அம்மா வாழ்க்கையிலே குடும்பத்துக்காகவே உழைச்சவ, நான் தொழிலுக்காக அலைஞ்ச மாதிரி; எங்க இரண்டு பேருக்குமே கொஞ்சம் ஓய்வு வேண்டும்''.
""ஐரோப்பிய நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்க்க முடிவு செஞ்சு, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செஞ்சுட்டேன். நானும் அம்மாவும் அடுத்த மாசம் கிளம்பறோம். இதைப்பற்றி நான் உன் அம்மாவிடம் கூட சொல்லலே. நாளைக்கு விசாவுக்காகப் போகும்பொழுதுதான் சொல்லப் போறேன். உலகைச் சுற்றிப் பார்க்கணும் என்கின்ற உன் அம்மாவின் நெடுநாளைய ஆசையை நிறைவேற்றப் போறேன்''.
தன் அப்பாவை, புதிய மனிதனாக, துன்பங்கள் ஏற்படுத்துபவற்றைக் களைந்து, இன்பங்களை அனுபவிக்கக் கற்றவனாக உருப்பெற்றிருப்பதைப் பார்த்து மகேஷ் புளகாங்கிதம் அடைந்து நின்றான்.
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.  (குறள் எண் : 359)
பொருள் : துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ளப் பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com