மணக்கும் மெழுகுவர்த்தி! 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் குடும்பங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் ஜன்னல்கள், படுக்கை அறை, ஹால், சமையலறை என அனைத்து பகுதியிலும் மெழுகுவர்த்திகள் இடம் பெறாத இடமே இல்லை என்று கூறலாம்.
மணக்கும் மெழுகுவர்த்தி! 


காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் குடும்பங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் ஜன்னல்கள், படுக்கை அறை, ஹால், சமையலறை என அனைத்து பகுதியிலும் மெழுகுவர்த்திகள் இடம் பெறாத இடமே இல்லை என்று கூறலாம். அங்கு மின்சாரம் எப்போது போகும் ? வரும்? என்பது நிச்சயமில்லை என்பதால் வெளிச்சம் பெற மெழுகுவர்த்திகளை பயன்
படுத்துவது அவர்களுக்கு இன்றியமையாத பொருளாகிவிட்டது. இதனால் மெழுகுவர்த்தியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதை அறிந்து ஸ்ரீநகர் இல்லாஹிபாக் பகுதியில் வசிக்கும் மெஹாக்
பர்வேஷ் ( 25) காஷ்மீர் பள்ளத்தாக்கில் தனி ஒருத்தியாக சுயமாக உயர்ந்திருப்பதுடன், அப்பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் முதல் என்ஜினியரிங் பட்டதாரிப் பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். எப்படி?
""கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவித்தவுடன், வீட்டிலிருந்தபடியே வருமானத்துக்கு ஏதாவது செய்யலாமே என்று யோசித்தபோது, சிறு வயதிலேயே மெழுகுவர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டி வந்தவர், நாமே சிறிய அளவில் மெழுகுவர்த்தி தயாரித்து விற்பனை செய்யலாம் என்று தீர்மானித்தாராம். ஆனால் மெஹாக், மெழுகுவர்த்திகளை வழக்கமான வடிவத்தில் தயாரிக்க விரும்பவில்லை. புதுமையாக ஏதாவது செய்தால் தான் வாடிக்கையாளர்களை கவர முடியுமென்று நினைத்தார். மெழுகுவர்த்தி எரியும்போது வெளிச்சம் தருவதோடு அறை முழுக்க நறுமணம் வீசினால் எப்படி இருக்கும் என்று யோசித்த மெஹாக், உடனே அதை செயலிலும் காட்டினார். கூடவே மெழுகுவர்த்திகளை விதவிதமான டிசைகன்களில் நறுமணத்தை சேர்த்து தயாரிக்கத் தொடங்கினார்.
பொதுமுடக்கம் காரணமாக வெளிச்சந்தையில் விற்க முடியாது என்பதற்காக தன்னுடைய தயாரிப்புகளை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகப்படுத்தினார். எதிர்பார்த்தது போலவே நறுமணத்துடன் கூடிய விதவிதமான டிசைன்களில் உருவாக்கிய மெழுகுவர்த்திகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்தது. வீட்டுத் தேவைகளுக்காக மட்டுமின்றி திருமணம், பிறந்தநாள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்காக இவரிடம் மெழுகுவர்த்தி வாங்க மொத்தமாக வரும் ஆர்டர்களும் அதிகரிக்கத் தொடங்கின. தயாரிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பிரபலமாவோம் என்று மெஹாக் எதிர்பார்க்கவே இல்லை.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மெஹாக், உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை. இவர் ஒருவரே தனி நபராக மெழுகுவர்த்தி தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை வாங்கி வருவது, தயாரிப்பது, புதிய டிசைன்களை உருவாக்குவது, பேக்கிங் செய்வது என எல்லா பொறுப்புகளையும் ஏற்று செய்கிறார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மெழுகுவர்த்திகளில் நறுமணத்தை சேர்க்கிறார். இதனால் மெஹாக் நிர்ணயிக்கும் விலையைக் கொடுக்க வாடிக்கையாளர்கள் தயங்குவதில்லை.
ரூபாய் 35 முதல் ரூபாய் ஆயிரம் வரை ஒவ்வொரு டிசைனுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களுக்கு மின்தடை காரணமாக மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவது அன்றாட வழக்கமாகிவிட்டதால், சுமார் 1400 பேர் இவரது நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இரண்டாவது கரோனா அலை காரணமாக மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்திருப்பதால், தளர்வுகள் ஏற்பட்டவுடன் மெழுகுவர்த்தி தயாரிப்பை பெரிய அளவில் விரிவுபடுத்த மெஹாக் திட்டமிட்டுள்ளார்.
தற்சமயம் வீட்டிலேயே தயாரித்து வரும் மெழுகுவர்த்தி தொழிலை சிறிய தொழிற்சாலை ஒன்றை அமைத்து, கூடுதலாக ஆட்களை அமர்த்தி உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தற்போது உள்ளூர் தேவைக்கேற்ப தயாரித்து விற்பனை செய்யும் இந்த வாசனை மெழுகுவர்த்திகளை பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யும் முனைப்பில் இருப்பதாக மெஹாக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com