'ஆனிசிவா' - ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதை!

பதிமூன்று  ஆண்டுகளுக்கு  முன் 18 - ஆம் வயதில்  காதலித்து மணந்து  பிறகு ஒரு  குழந்தைக்கும் தாயான நிலையில், கணவனால் நிராகரிக்கப்பட்டு  "நாளைக்கு  சாப்பிட என்ன செய்வது...'
'ஆனிசிவா' - ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதை!

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் 18 - ஆம் வயதில் காதலித்து மணந்து பிறகு ஒரு குழந்தைக்கும் தாயான நிலையில், கணவனால் நிராகரிக்கப்பட்டு "நாளைக்கு சாப்பிட என்ன செய்வது...' என்று கதிகலங்கி வீதியில் நின்ற 19 வயது இளம் பெண்... காவல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, அதே ஊரில் பணியில் அமருவோம் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை - என்கிறார் ஆனிசிவா.

கேரளம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் காஞ்சிராம்குளத்தைச் சேர்ந்தவர் ஆனி சிவா. ஆனிக்கு தற்போது வயது 31. கல்லூரியில் முதல் ஆண்டில் படிக்கும் போதே ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். காதலுக்கும், காதல் திருமணத்திற்கும் பெற்றோர் கடும் எதிப்பு தெரிவித்தாலும், ஆனி அதனை சட்டை செய்யவில்லை. காதல் திருமணம் இரண்டு ஆண்டுகள் வரை சீராகச் சென்றது.
கணவனுக்கும் ஆனிக்கும் இடையே பிரச்னைகள் எழ... எட்டு மாத கைக் குழந்தையுடன் ஆனி கணவன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், மீண்டும் ஆனி பெற்றோரிடம் போக முடியாத நிலை.
வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைமை. ஒருவழியாக பாட்டி ஒருவர், ஆனிக்கும் எட்டு மாத மகன் சிவசூர்யாவுக்கும் தனது குடிசையில் அடைக்கலம் கொடுத்தார். இரவில் தூங்க ஒரு கூரை கிடைத்ததே என்று ஆனி நிம்மதி அடைந்தார்.
""வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில், வர்க்கலாவில் சர்பத், ஐஸ்கிரீம் குளிர்பானங்களை விற்கத் தொடங்கினேன். என்ன வேலை கிடைத்தாலும் செய்தேன். பிறகு வீடு வீடாகச் சென்று மல்லி, மிளகாய், மஞ்சள் பொடிவகைகளை விற்கத் தொடங்கினேன். சில மாதங்கள் கழித்து வீடுகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கி விநியோகிக்க ஆரம்பித்தேன்.
பிறகு கொஞ்ச நாளில் காப்பீடு முகவரானேன். இந்நிலையில், நண்பர் ஒருவர், என் நிலையைக் கண்டு, " பாதியில் விட்ட படிப்பை முடிக்கும் வழியைப் பார்... கல்வி ஒன்றுதான் கை கொடுக்கும்' என்று மீண்டும் படிப்பை தொடர உதவினார். இதன் மூலம் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.
2014-இல் தேர்வு எழுதி கேரள காவல் துறையில் காவலராய் பணியில் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் பணி புரிந்ததும், உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வினை எழுதி வெற்றி பெற்றேன்.
2019-இல் உதவி ஆய்வாளரானேன். பிறகு நான் வருமானத்திற்காக கண்ணீரும், வியர்வையும் சிந்தி அலைந்து திரிந்த அதே வர்க்கலாவில் உதவி ஆய்வாளராக சென்ற ஜூன் 25 -இல் பொறுப்பு ஏற்றுள்ளேன். எனது உழைப்பால், சதி செய்த விதியை மாற்றி எழுதியிருக்கிறேன்'' என்கிறார் ஆனி சிவா.
கேரள மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஆனியின் வெற்றிக் கதையை ஆனியின் படத்துடன் பதிவேற்றம் செய்து ""இது ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதை.. வாழ்க்கையில் எழுந்த சவால்களுக்கு எதிராக எதிர்நீச்ச லை உறுதியுடன் போட்டு உயர்ந்த எங்கள் "சகா'வின் வாழ்க்கைக் கதை'' என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைப் போராளியான ஆனியின் எதிர்நீச்சலை, சாதனையை கேரளம் கொண்டாடி வருகிறது. ஆனி நலிந்தவர்கள், வாழ்வாதாரம் கேள்விக்குறியானவர்கள், பெற்றோர் - கணவன் ஆதரவை இழந்து நிற்பவர்கள், வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு ஆனி சிவா ஒரு முன்மாதிரியாகியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com