கதம்பம்!

கேரளாவின் முதல் பெண் விமானியாக பெருமை பெற்றிருக்கிறார் 23 வயதான ஜெனி ஜெரோம்.
கதம்பம்!

இளம் விமானி!


கேரளாவின் முதல் பெண் விமானியாக பெருமை பெற்றிருக்கிறார் 23 வயதான ஜெனி ஜெரோம். இவர் ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்த வணிக விமானமான ஏர் அரேபியா (எ9 449) விமானத்தில் இணை விமானியாக பணியாற்றியுள்ளார்.

பீட்ரஸ் - ஜெரோம் தம்பதியின் மகளான ஜெனி ஜெரோம் திருவனந்தபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான கொச்சுத்துறைப் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு, சிறுவயது முதலே விமானி ஆகவேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. எனவே, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்தார். தற்போது இவரது கனவு நனவாகியுள்ளது. இந்த இளம் விமானிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.


நாடாளுமன்ற உறுப்பினர்


பாம் கோசல், ஸ்காட்லாந்தில் வசித்து வரும் இந்திய பெண்மணி. வணிகத்தொழிலில் முக்கிய நபராக இருந்துவரும் இவர், சமீபத்தில், ஸ்காட்லாந்தின் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் எம்.பி. பதவி பெறும் முதல் இந்திய பெண்மணி ஆவார்.

- ராஜிராதா

அபுதாபியின் உயரிய விருது!


தகீரா குத்புதின், தலைசிறந்த கல்வியாளர்.

இந்தியாவில் பிறந்தவரான இவர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் அராபிய இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராக உள்ளார். இவருக்கு அபுதாபி அந்நாட்டின் சிறப்புமிக்க ஷேக் சையத் விருதை இவர் எழுதிய நூலுக்காக வழங்கியுள்ளது. நூலின் தலைப்பு "அராபிக் ஆரேஷன் : ஆர்ட் அண்ட் ஃபங்ஷன்" என்பதாகும்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்திய பெண்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த தீப்தி நர்குட்டி என்ற இளம் பெண் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் பெறும் வேலையைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் சியாட் நகரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் 2 பொறுப்பில் சமீபத்தில் பதவியேற்றுள்ளார் இவர்.

ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்து, 3 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்ஜினியராகப் பணியாற்றி வந்த தீப்தி, உயர்கல்வி கற்க, வேலையை உதறிவிட்டு புளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் (கம்ப்யூட்டர்ஸ்) சேர்ந்துள்ளார்.

அங்கு, நடைபெற்ற கேம்பஸ் இன்டெர்வியூவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தேர்வாகியுள்ளார். அதேசமயம், அமேசான், கோல்ட்மேன் சாச்ஸ் உள்ளிட்ட சில பிரபல நிறுவனங்களிடமிருந்தும் அவருக்கு வேலை வாய்ப்பு தேடி வந்துள்ளன. ஆனால் தீப்தி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறார்.

இதன்மூலம், புளோரிடா பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பேரில் தீப்தி மட்டுமே மிக உயர்ந்த வருடாந்திர சம்பளத்தைப் பெறுபவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இவரது தந்தை வெங்கண்ணா, ஹைதராபாத் போலீஸ் கமிஷனரேட்டில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார்.

- தவநிதி

நெகிழவைத்த இந்திய வம்சாவளியினர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா ஷா என்பவர், அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் லாட்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் , இவரது, கடைக்கு வந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய ஃபைகா என்ற அமெரிக்க பெண்மணி, அந்த லாட்டரி சீட்டை அங்கேயே வைத்து பாதி சுரண்டிய நிலையில், அதை அப்படியே கீழே போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, கடையை சுத்தம் செய்யும்போது, குப்பைத் தொட்டியில் முழுமையாக சுரண்டப்படாத அந்த லாட்டரி சீட்டைப் பார்த்து அதை எடுத்து தனது தாயார் அருணா ஷாவிடம் கொடுத்துள்ளார் அவரது மகன் அபிஷா.

அந்த லாட்டரி சீட்டை முழுவதும் சுரண்டிப் பார்த்தவோது, அதற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் அது 7.2 கோடி ரூபாய்). ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளதை அறிந்தனர் அருணா ஷாவும் அபிஷாவும்.

உடனே, அந்த டிக்கெட்டை கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளரான ஃபைகாதான் வாங்கினார் என்பதை நினைவு கூர்ந்து அவரைத் தேடிப்பிடித்து, அதை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ளஃபைகா, ""அன்று மதிய உணவு இடைவேளையின் போது வந்து அந்த லாட்டரி சீட்டை வாங்கினேன். பாதி சுரண்டிய நிலையில் அதிலிருந்த எண் பரிசு வெல்லாது என நினைத்து, திரும்ப பணிக்குச் செல்லும் அவசரத்தில் அப்படியே கீழே போட்டுவிட்டு சென்று விட்டேன். ஆனால், அதற்கு பரிசு தொகை கிடைத்திருப்பது தெரிந்தும் கடையின் உரிமையாளர்கள் அதனை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்து கண்ணீரை வரவழைத்துவிட்டது' என்று கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைத்தும், அதை தாங்களே வைத்துக்கொள்ள நினைக்காமல், வாடிக்கையாளரை தேடிப்பிடித்து அவரிடம் ஒப்படைத்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தினரின் செயல் மற்றவர்களை நெகிழவைத்துள்ளது. இதனால் அவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com