சமையல்: ஆரோக்கியம் தரும் அருமையான பானங்கள்

செய்வதோ மிக மிக எளிது, ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருமையான பானங்கள்.
சமையல்: ஆரோக்கியம் தரும் அருமையான பானங்கள்
சமையல்: ஆரோக்கியம் தரும் அருமையான பானங்கள்

மிளகுப் பால்

தேவையானவை: 
பால் -  2  டம்ளர்
சர்க்கரை  -  2 தேக்கரண்டி
கிராம்பு  -  1
மிளகு  - 1  தேக்கரண்டி
மஞ்சள்பொடி  -  1 சிட்டிகை


செய்முறை:  மிளகு,  கிராம்பை லேசாக  வறுத்து ஆறியதும்  கரகரப்பாக  பொடிக்கவும்.  பின்னர்,  பாலில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து  கொதிக்கவிடவும்.  பால் கொதித்து வந்ததும்   அத்துடன் பொடித்து வைத்துள்ள  பொடியைச் சேர்த்து நன்கு காய்ச்சி ஒன்றரை டம்ளராக  வற்றவிடவும். பின்னர்,  சர்க்கரை,  மஞ்சள் பொடி  சேர்த்து வடிகட்டி சூடாக  குடிக்கவும்.  சுடச்சுட மிளகுப் பால் தயார்.

மின்ட்  ஜிஞ்சர்  ஜூஸ்
தேவையானவை: 
இஞ்சி  - ஒரு  அங்குலத் துண்டு
 புதினா - 10 இலைகள்
வெள்ளை மிளகுத்தூள்  -  1 தேக்கரண்டி
 தூதுவளை - 4 இலை
 துளசி  - 3, துருவிய வெல்லம் -  அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது, கிராம்பு  - 1


செய்முறை:  இஞ்சியைக் கழுவி தோல்  சீவி  தட்டிக் கொள்ளவும்.  அதனுடன்,  புதினா,  தூதுவளை, துளசி இலைகள்,  பட்டை,  கிராம்பு சேர்த்து  ஒன்றரை  டம்ளர்  தண்ணீர்  சேர்த்து  நன்கு  கொதிக்கவைத்து,  அனைத்து சாறும் நீரில் இறங்கி  நிறம் மாறியதும்  அடுப்பில் இருந்து  இறக்கி  வடிக்கட்டவும்.  பிறகு,  வெள்ளை மிளகுத்தூள்  தூவி,  வெல்லத்
துருவல்  சேர்த்துக் கலந்து  பருகவும்.  தொண்டைக்கு 
இதமான  மின்ட்  ஜிஞ்சர்  ஜூஸ் தயார்.

சுக்கு சூப்

தேவையானவை: 
சுக்குப்பொடி - 1 மேசைக்கரண்டி 
மிளகு - 1 தேக்கரண்டி ( ஒன்றிரண்டாக  உடைத்தது)
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று
துளசி, புதினா இலை - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி
வெள்ளைப் பூசணி  - 1 துண்டு
வெண்ணெய்  -  1 மேசை தேக்கரண்டி
உப்பு -  தேவைக்கேற்ப

செய்முறை:  அலங்கரிப்பதற்கு  சில புதினா  இலைகளை  தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிரஷர் பானில்  வெண்ணெயைச் சூடாக்கி  கொடுக்கப்பட்டுள்ள  மற்ற அனைத்துப் பொருள்களையும் ( உப்பு நீங்களாக) சேர்த்து  வதக்கி  தேவையான  அளவு தண்ணீர்,  உப்பு சேர்த்து  ஒரு  விசில்  நீங்கியதும்  பெரிய  கண்  உள்ள வடிகட்டியால்  வடிகட்டி  சூப்  கிண்ணத்தில்  ஊற்றி,  புதினா  சேர்த்துப்  பரிமாறவும்.  விரும்பினால்  வறுத்த  ரொட்டி  துண்டுகளை  மேலே  தூவிக்கொள்ளலாம்.

கற்பூரவல்லி  கஷாயம்

தேவையானவை:
கற்பூரவல்லி இலை - 10
துளசி இலை - 10
இஞ்சி - 1 சிறிய துண்டு ( தோல் நீக்கியது)
சுக்குப்பொடி , ஓமம்- தலா  அரை  தேக்கரண்டி
பனங்கற்கண்டு - 2  மேசைக்கரண்டி


செய்முறை:  பனங்கற்கண்டு  தவிர,  மற்ற  அனைத்துப்  பொருட்களையும்  ஒரு பெரிய  பாத்திரத்தில்  சேர்த்து  சூடாக்கி, 2 டம்ளர் தண்ணீர்  சேர்த்து  அவை ஒரு டம்ளராக  வற்றியதும் இறக்கி வடிகட்டவும். இத்துடன் பொடித்த பனங்கற்கண்டு சேர்த்து கரைந்ததும் குடிக்கவும்.  நல்ல மணத்துடன்  தொண்டைக்கு  இதமாக  இருக்கும்.

வெற்றிலை  கஷாயம்
தேவையானவை
வெற்றிலை - 5
நாரத்தம்  இலை  -  2
புதினா  இலை,  கொத்தமல்லித்தழை- சிறிது
முழு மிளகு  -  1 தேக்கரண்டி
அச்சு  வெல்லம் - 2 ( பாகு எடுத்து  ஆறவிடவும்)
 உப்பு  - 1 சிட்டிகை
செய்முறை:  ஒரு  பாத்திரத்தில்  வெல்லம் தவிர  மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.  ஆறிய வெல்லப் பாகு கலந்து  பருகவும்.  நோய்  எதிர்ப்புச் சக்தி  தரவல்ல  மூலிகைகள்  அடங்கிய  இந்த கஷாயத்தை வாரத்துக்கு ஒரு முறை  பருகுவது  
நல்லது. 

முருங்கைக் கீரை சூப்

தேவையானவை:
சாம்பார் வெங்காயம்  -  4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி  - 1 ( பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை  - 1 கைப்பிடி
 அரைப்பதற்கு: 
 மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி, தனியா  -  3 தேக்கரண்டி
இஞ்சி  - சிறிய துண்டு
பூண்டு  -  5 பல், மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு  -  தேவைக்கேற்ப


செய்முறை:   அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் அரைத்து எடுத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து  பச்சை  வாசனைப் போக கொதிக்க வைக்கவும்.  பிறகு,  நறுக்கிய  வெங்காயம்,  தக்காளி, முருங்கைக்கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும். 
( குறிப்பு: தண்ணீருக்கு பதிலாக  அரிசி கழுவிய இரண்டாவது  நீரை உபயோகப்படுத்தலாம்).
-ஏ.காந்தி,  செய்யாறு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com