கதை சொல்லும் குறள் - 21: வேண்டாம் தீச்செயல் ! 

சுரேஷுக்கு, சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடுமோ என்கின்ற அளவுக்குப் பசியெடுத்தது.
கதை சொல்லும் குறள் - 21: வேண்டாம் தீச்செயல் ! 


சுரேஷுக்கு, சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடுமோ என்கின்ற அளவுக்குப் பசியெடுத்தது.

சனியன் புடிச்ச சுரம் நாலு நாளாய் முனியம்மாவைப் பாயிலே சாச்சிடுச்சு. அவ மட்டும் நல்லா இருந்தா ஒரே மவன் சுரேஷின் வயிறை இப்படி காயப்போடுவாளா? ""சுரேசு, சுரேசு''ன்னு தன் உதவாக்கரை மகனை உள்ளம் குளிர அழைத்து வேளாவேளைக்கு ஆக்கிப் படைப்பாள். மவன் பசிக்க அவள் விட்டதே இல்லை.

முனியம்மாவின் புருஷன் ஒரு பெயிண்டர். வேலைக்குப் போனா கைநிறையக் கூலி. சித்தாள் வேலைக்குப் போன முனியம்மா அவனை காதல் திருமணம் செய்து கொண்டாள்.  இதனால்,  இரண்டு குடும்பத்தாரும் அவங்களை ஒதுக்கி வெச்சாங்க. எதுக்கும் கவலைப்படாமல் அந்தக் காதல் ஜோடி தம்பதியராய் அழகாகக் குடும்பம் நடத்தினார்கள்.

யார் கண்பட்டதோ தெரியலை, விதி மிகக் கொடூரமாய் முனியம்மாவின் வாழ்க்கையில் விளையாடியது. ஏணியின் மீது ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபொழுது கால் தடுக்கிக் கீழே விழுந்து, பின் மண்டையில் பலமாக அடிப்பட்டு, மருவத்துவமனைக்குப் போகும் வழியிலேயே, ஐந்து மாதக் கர்ப்பிணியான முனியம்மாவைத் தவிக்க விட்டு அவன் போய்ச் சேர்ந்தான்.

கல்யாணம் ஆன ஒரு வருடத்துக்குள் அவ்வளவும் நடந்து முடிந்து போனது. சொந்த பந்தங்களின் சுய உருவம் அப்பொழுதுதான் வெளிவந்தது.

""மூதேவி, என்ன ராசியோ, எழவோ என் புள்ளையை முழுசா முழிங்கிட்டு மூலையிலே உக்காந்துட்டா'' என்று மாமியார் ஏசினாள். 

பெத்த தாயோ, ""எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு ஓடிப்போனே முழுசா வாழ்ந்தியா'' என்று ஏசி முனியம்மாவை மேலும் அழவைத்தாள்.

""சீ'', என்று அனைவரையும் ஒதுக்கித் தன் மகனைப் பெற்றெடுத்து, சுரேஷ் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தாள். தன் புருஷனின் அச்சாகப் பிறந்த பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்திலே சேர்த்தாள், டியூஷன் என்று வைத்து அவனைப் படிப்பாளியாக்கத் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தாள்.

ஆனால் சுரேஷுக்கோ படிப்பு என்பது எள்ளளவும் ஏறவில்லை. தன் ஏரியாவில் வாழும் விடலைப் பசங்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவது, டியூஷனுக்குப் போறேன் என்று சொல்லிவிட்டுச் சினிமாவுக்குப் போவது என்று முனியம்மாவை ஏமாற்றி அலைக்கழித்தான். அப்படி, இப்படியென்று அவன் பத்தாவது வருவதற்குள் முனியம்மா மூச்சு முட்டிப் போனாள்.

அரசாங்கப் பரீட்சையில் சுரேஷ் மூன்று முறை பெயிலாகி, அவமானப்பட்டு இனி பரீட்சைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்தான். பிறகு என்ன? தற்போது அவனுக்கு இருபத்தொரு வயதாகிறது, முனியம்மாவின் சித்தாள் வேலையில் கிடைக்கும் வருமானம் அவனை உல்லாச வாழ்க்கை வாழ வைத்திருக்கிறது.

ஒரு ஆண்டு கூட  அனுபவிக்காத இல்வாழ்க்கை சுகத்தோடு, எத்தனையோ ஆண்கள் தனக்கு மறுவாழ்வு தரக் காத்திருந்தும், சுரேஷின் நலம் மட்டுமே தன்னுடைய எதிர்கால வாழ்வு என்று வாழும் முனியம்மா இதோ நான்கு நாள்களாக மலேரியா சுரத்தில் மல்லாடுகிறாள். 

பக்கத்து வீட்டு அங்கம்மாதான், அப்பப்ப கஞ்சி காய்ச்சித் தருகிறாள்.

முனியம்மாவின் கையில் சேமிப்பு என்று அதிகமாக இல்லை. இருந்த சொற்பப் பணமும் மருந்து, மாத்திரை என்று செலவாகிக் கொண்டு இருந்தது. கொடியில் தொங்கியச் சட்டையை உதறி மாட்டிக்கொண்டு சுரேஷ் வெளியே கிளம்பினான். அம்மா இப்படியே படுத்துக் கிடந்தால் தன்னுடைய இந்தச் சுகவாழ்வு பறிபோய்விடுமோ என்று பயந்தான். வேலைக்கு என்று இதுநாள் வரை போனதே இல்லை. இனிப் போனால்தான் வயிறு நிரம்பும் என்ற நிலைமையை நினைத்து நொந்தான்.

வழக்கமாகச் சந்திக்கும் நண்பர்களைப் போய்ப் பார்த்தான். ஒரு கப் டீ குடிக்கக் கிடைத்தது. அதுவே சத்தம் போட்டுக் கொண்டிருந்த வயிறைச் சிறிது நேரம் சாந்தப்படுத்தியது. இவனைப் போல பெற்றோர் காசில் வாழும் நண்பன் சங்கர், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்திருந்தான். அவனுடைய அப்பா மளிகைக்கடை வைத்திருந்தார். சங்கர் கைச்செலவுக்கு அளந்துதான் காசு கொடுப்பார்.

""டேய் சுரேஷ், ஏண்டா சோகமாக இருக்கே?''
""அம்மாவுக்கு நாலுநாளாக சுரம்; வேலைக்குப் போகலேடா.''
""என்ன சாப்பிடலயா? முகம் வாட்டமா இருக்கு''.
சுரேஷ் பதில் சொல்லலை.
""வாடா, ஹோட்டலுக்குப் போலாம்'' 
சரி, என்று சுரேஷ் அவனுடைய பைக்கில் ஏறி உட்கார்ந்தான்.

பைக் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியது. பகல் இரண்டு மணி என்பதால் சாலையில் ஈ, காக்கா கூட இல்லை. ஆனால் ஒரு நடுத்தர வயதுப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் செயின் ஒன்று பளபளத்துக் கொண்டிருந்தது. சுரேஷுக்கு மின்னல் வேகத்தில் ஒரு ஐடியா தோன்றியது. மறுகணம்...

""ஐயோ'', என்று அந்தப் பெண் அலறினாள்.
""சங்கர், வேகமாக ஓட்டுடா'' என்று சுரேஷ் கத்தினான்.
சங்கருக்கு விஷயம் புரியவே ஒரு நிமிடம் ஆனது.
""அடப்பாவி என்னடா செய்தே?''

""அந்தப் பொம்பளையின் கழுத்துச் செயினை அறுத்துட்டேன்டா'' என்று கையில் தொங்கிய செயினை சுரேஷ் காட்ட சங்கர் ஆடிப்போனான்.

பைக் வேகம் பிடித்தது. சந்து பொந்துகளைக் கடந்து, ஆள் அரவமற்ற இடத்தில் பிரேக் பிடித்து நின்றது.

""கீழே இறங்குடா'' என்று கத்தினான் சங்கர்.
""ஏண்டா இப்படிக் குடி முழுகிப் போறாப்போலக் கத்தற''.
""குடி முழுகித்தான் போகும். இப்படிப்பட்ட ஈனச் செயலைச் செய்ய எப்படிடா துணிந்தே?''
""அடச்சீ, சும்மா துள்ளாதே, வறுமையிலே வாடிப்பாரு, அப்போ புரியும். நாலு நாளா நான் சரியா சாப்பிட
வேயில்லை. ஏன்னு கேட்க நாதியில்லை. சித்தாள் வேலைக்குப் போயி நியாயமா உழைச்சி என் ஆத்தா என்னத்தக் கண்டா. புளியந்தோப்புலே சொந்தமா ஒரு குடிசை. மழைக்காலம் வந்தா, சேறும் சகதியுமா நினைச்சாலே வயத்தைக் கொமட்டுது. எப்ப உழைச்சு எப்ப உயரது? அதான் துணிஞ்சுட்டேன். உனக்கு என்ன? மளிகைக் கடை சொந்தக்காரனுடைய புள்ளை, மூணு வேளையும் வகை வகையாச் சாப்பாடு, சொந்த பைக்கு, கைச்செலவுக்குக் காசு, என்னப்போல அன்றாடங்காச்சியா இருந்தா புரியும்''.
"அப்பா, போதும்டா இன்றோட  உன்னுடைய சகவாசம் போதும். ஆள விடுடா சாமி''.
""டேய், இதைப் பற்றி வெளியிலே மூச்சு விட்டே...''
""உன்னோடப் பழகிய பாவத்திற்கு இதைக்கூடச் செய்யலைன்னா எப்படி? நீ போற வழி சரியில்லை. உங்க அம்மா நல்லவ. அவளுக்கு அவமானத்தைத் தேடித் தராதே. இன்றோடு நம் நட்புக்கு முழுக்கு'' என்று சொல்லியவாறு சுரேஷையும் நடுரோட்டில் விட்டுவிட்டுப் பைக்கில் சங்கர் சென்று மறைந்தான்.
முதலில் சற்றுத் தயங்கிய சுரேஷ் நாளாவட்டத்தில், செயின்களைப் பறிப்பதில் கைதேர்ந்தவன் ஆனான். கைகளில் ஆயிரத்தில் புழங்கிய ரூபாய்கள் பிறகு லட்சங்கள் என்று ஆயின.
முனியம்மா, ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள். ""ஏதுடா இவ்வளவு பணம்? என்றதுக்கு கடல்வாழ் உயிரினங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நண்பனோடு கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்ததில் வந்த பணம்'' என்றான். சொந்தமாகப் பைக் வாங்கி, அதில் லாகவமாகப் பயணித்து, மின்னல் வேகத்தில் செயின்களை அறுத்து அதே வேகத்தில் மறையும் கலையில் கைதேர்ந்தான்.
குடிசை வீடு, மாடி வீடானது. தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, குளிர்சாதனப் பெட்டி, கேஸ் அடுப்பு என்று முனியம்மாவின் வீட்டில் வசதிகள் கூடிப்போயின. சித்தாள் வேலையை முனியம்மா மூட்டைக்கட்டி வைத்து மாதங்கள் மூன்று ஓடி மறைந்திருந்தன. சின்னாளம்பட்டி புடவையில், கழுத்து, காது, கைகளில் தங்க நகைகளை அணிந்து, தலைநிமிர்ந்து நடந்தாள் முனியம்மா.
சுரேஷுக்கு நான், நீ எனப் பெண் கொடுக்க, பெண்ணைப் பெத்தவங்க போட்டி போட்டனர். காணாமல் போன சொந்தங்கள் எல்லாம் புது உறவாடின.
கடந்த சில மாதங்களாகச் சென்னையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. வீடுகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், தெருக்கள், வாகனங்கள் செல்லும் இடங்கள் என்று எங்கும், எதிலும் அவைகளின் ஆதிக்கம் தொடங்கியதில் இருந்து சுரேஷின் தொழில் சிறிது மந்த நிலையை அடையத் தொடங்கியது.
இந்த நிலையில், சுரேஷுக்கு ஒரு பெரிய இடத்தில் பெண்ணைக் கொடுக்க முன்வந்தனர். பெண்ணின் அப்பா காய்கறிகளை, அவைகள் விளையும் இடத்திற்கே சென்று மொத்தமாகக் கொள்முதல் செய்து, பிறகு சிறிய வியாபாரிகளுக்கு விற்பவர். சுரேஷுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அடுத்த வாரம் நிச்சய தாம்பூலம் என்று முடிவானது.
""டேய் சுரேசு,'' முனியம்மா அன்பொழுகத் தன் மகனைக் கூப்பிட்டாள்.
""என்ன சொல்லு?''
""பொண்ணுக்கு நிச்சயதார்த்தப் புடவை எடுக்கணும், நாலு சவரனில் நெக்லஸ் வாங்கணும், அப்புறம் வரிசை சாமான்னு ஏகப்பட்ட வேலை இருக்கு, இதுக்கெல்லாம் பணத்தை ஏற்பாடு பண்ணு''.
""சரி'' என்று ஒத்த வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் மகனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் முனியம்மா.
சுற்றிச் சுற்றி அலுத்துப்போனான் சுரேஷ். சிசிடிவி இல்லாத சாலைகளாகப் பார்த்து, பிறகு தனியாகப் போகும் பெண்கள், அதுவும் அவர்கள் தங்கச் சங்கிலியை அணிந்திருக்க வேண்டும், ஆள் அரவம் இல்லாத இடத்தில் மாட்ட வேண்டும். பகல் மணி பன்னிரண்டைத் தாண்டியும், ஒருத்திக்கூட அப்படி மாட்டவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. இன்றைக்கு இதற்கு மேல் முடியாது; நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சுரேஷ் முடிவு செய்த வேளையில் ஒரு குறுக்குச் சந்தில் ஒரு பெண் வசமாக மாட்டினாள்.
சுரேஷின் பைக் வேகம் பிடித்தது. அந்தப் பெண்ணின் கழுத்துச் சங்கிலி அவன் கைகளிலும் மாட்டியது, மறுகணம் சுரேஷ் கனவிலும் நினைக்காத நிகழ்வு அங்கே அரங்கேறியது. சங்கிலியைப் பிடித்திருந்த அவன் கை தட்டி
விடப்பட்டது. தடுமாறி சுரேஷ் பைக்கோடு சாய, சரமாரியான குத்துகள் அவன் முகத்தில் விழுந்தன. ஒவ்வொரு அடியும், இடிகளாக அவன் முகத்தைத் தாக்க, முன் பற்கள் இரண்டு தடம் புரண்டு போயின. தன்னுடைய துப்பட்டாவை எடுத்து, ஒரே ஆளாக அவன் கைகளைப் பின்னுக்கு இழுத்து அந்தப் பெண் கட்டினாள். 
அதற்குள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து சத்தம் கேட்டு வந்தவர்கள், போலீஸூக்குத் தகவல் தர அடுத்த அரைமணி நேரத்தில் சுரேஷ் காவல்
நிலையத்தில், ஜட்டியோடு நிற்க வைக்கப்பட்டிருந்தான். போலீஸின் தனிக் கவனிப்பில் உண்மைகளைக் கக்கித்தானே தீரவேண்டும். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள். சுரேஷ், சங்கிலியைப் பறிக்க முயன்ற அந்தப் பெண் ஒரு கராத்தே பிளாக் பெல்ட் மாஸ்டர் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதானே.
சுரேஷ் தற்சமயம், ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். தீமையான செய்கைகளின் மூலம் அவன் சேர்த்த செல்வத்தோடு, அவன் தந்தை நியாயமாகத் தொழில் செய்து சம்பாதித்த சொந்தக் குடிசையும் பறிபோனது. முனியம்மா முன்புபோல சித்தாள் வேலை செய்கிறாள். அவளின் அருமை மகன் சுரேஷ் ஜெயிலில் கல் உடைத்துக் கொண்டிருக்கிறான். 
ஏழ்மையிலிருந்து விடுபட சுரேஷ் உழைப்பை நம்பி இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
இலன்என்று தீயவைசெய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
(குறள் எண்: 205)
பொருள் :
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com