திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை!

1989-ஆம்  ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக இடம் பெற்ற மித்தாலி ராஜூக்கு முதல் போட்டியிலேயே சதம் எடுத்திருந்தாலும், இனி தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற
திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை!

1989-ஆம்  ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக இடம் பெற்ற மித்தாலி ராஜூக்கு முதல் போட்டியிலேயே சதம் எடுத்திருந்தாலும், இனி தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்ததாம். ஆனால் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் வாய்ப்புகளைப் பெற்று தொடர்ந்து 22 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆடி வரும் மித்தாலி ராஜ். மீண்டும் 2021-ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை  போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மித்தாலி ராஜ்.

தன்னுடைய கடந்த கால அனுபவங்களையும், எதிர்காலத்தைப் பற்றியும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

கிரிக்கெட் வீராங்கனையாக நான் உருவெடுத்தது எதிர்பாராத நிகழ்வாகும். செகந்திராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த போது, என்னுடைய சகோதரன் மிதுன் கிரிக்கெட் விளையாடப் போவார். விமானப்படையில் பணியாற்றி வந்த எங்களுடைய தந்தை என்னையும் மிதுனுடன் போகும் படி கூறுவார்.

என்னுடைய ஒன்பதாவது வயதில் ஒரு நாள் என் சகோதரனின் பயிற்சியாளர் என்னிடம் ஒரு கிரிக்கெட் மட்டையைக் கொடுத்து அவர் வீசும் பந்தை பேட்டிங் செய்யும்படி கூறினார். அவர் சொன்னபடி அங்கிருந்த மற்ற சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து அதன்படியே ஆடினேன். இரண்டு மாதங்கள் கழித்து என்னுடைய தந்தையைச் சந்தித்த பயிற்சியாளர் உங்கள் மகனுக்கு கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. உங்கள் மகள் பிரமாதமாக பேட்டிங் செய்கிறார். அவளை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர்த்து விடுங்கள். நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.

என் பெற்றோரும் சம்மதித்தனர். எனது பள்ளியில் இருந்த கிரிக்கெட் குழுவில் சேர்ந்து கிரிக்கெட் பற்றி அடிப்படை விதிமுறைகளையும், விளையாட்டைப் பற்றியும் தெரிந்து கொண்டதோடு முழுமையாக கிரிக்கெட் பயிற்சிப் பெறத் தொடங்கினேன். 

அதன் பின்னர் கிரிக்கெட்டை நான் ஒரு பொழுதுபோக்காகவோ, வேடிக்கையாகவோ கருதாமல் தொழிலாகவும், போட்டியாகவும் நினைத்து விளையாடத் தொடங்கினேன். எனக்கு பயிற்சியளித்தவர் ஆண்-பெண் வித்தியாசம் பாராமல் பயிற்சியளித்தார். என்னுடைய 13-ஆவது வயதில் 25-28 வயதுள்ள ஆண் வீரர்களுடன் சரிசமமாக விளையாட முடிந்தது. பயிற்சியாளர் அதற்கான பயற்சிகளை எனக்கு தினமும் மணிக்கணக்கில் கற்றுத்தந்தார்.

கிரிக்கெட் எனக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தி தந்தது. எனக்காக என் பெற்றோர் பல தியாகங்களை செய்தனர். தொடர்ந்து கல்லூரி, பயிற்சி என இருந்ததால் வேளா வேளைக்கு எனக்குத் தேவையான உணவு அளிக்கவும், வீட்டு பாடங்களை செய்ய உதவுவதற்காகவும் என்னுடைய அம்மா, அவர் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு இல்லத்தரசியாக மாறினார். எனது தந்தையோ அவருக்குக் கிடைத்த பதவி உயர்வை உதறிவிட்டு, ஐதராபாத்திலிருந்து இடமாறுதல் பெற மறுத்துவிட்டார். காலையிலும், மாலையிலும் பயிற்சி பெறும் என்னை வண்டியில் அழைத்துச்செல்வார். திரும்ப அழைத்து வருவார். என் சகோதரனும் எனக்காக பல உதவிகளை செய்தார்.

1992-ஆம் ஆண்டு ஜலந்தரில் நடந்த யூ-16 நேஷனல் போட்டியில் முதல் முறையாக ஆந்திர மாநிலம் சார்பாக கலந்து கொள்ள நான் புறப்பட்ட போது, என் பெற்றோரை விட தாத்தா, பாட்டி தான் மிகவும் கவலைப்பட்டனர். கிரிகெட்டும் வேண்டாம். இப்படி ஊரைவிட்டு தனியாக செல்லவும் வேண்டாம். பேசாமல் அவளுக்கு கல்யாணம் செய்துவிடுங்கள் என்று அறிவுறுத்தினார். சுதந்திரமாக வெளியில் சென்றது அதுதான் முதல் முறையாகும்.

அதன் பின்னர் 1999-ஆம் ஆண்டு நான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் லண்டன் சென்ற போது எனக்கு வயது 16. வெளிநாடு செல்வது அதுவே முதல் முறை. கூடவே எங்கள் அணியில் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருந்ததால் தனிமை உணர்வு தோன்றவில்லை. முதல் போட்டியிலேயே நான் சதம் எடுத்திருந்தாலும், அந்த பயணத்தில் சரியாக விளையாடவில்லை என்றே எனக்குத் தோன்றியது. 90-களின் பிற்பகுதி வரை இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அணி என்று ஒன்று இருப்பது பலருக்குத் தெரிந்திருக்க வில்லை. 

நான் விளையாடத் தொடங்கிய போது ஏற்கெனவே இந்த விளையாட்டில் இருந்த சீனியர் வீராங்கனைகள் குறித்து எனக்குத் தெரியாது. சீனியர் மட்டத்தில் நானும் அவர்களுடன் விளையாடும் போது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியில் இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்ததே தவிர பணத்தையோ, புகழையோ எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எங்களுக்கு ஸ்பான்சர் செய்யவோ, பண உதவி அளிக்கவோ யாரும் முன்வரவில்லை. என்னுடைய முதல் லண்டன் பயணத்தின் போது எனக்கு பண உதவி செய்து அனுப்பியது என் தந்தை தான். 

2006-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணி பி.சி.சி.ஐயின்  கீழ் வந்த போது தான் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. மாநில அளவிலான கிரிக்கெட் அணிகள் முறைபடி வரையறை செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றன. தேசிய கிரிக்கெட் அகாதெமி உருவாயிற்று. ஆண்களுக்கு இணையான பயிற்சிகள் பெண்களுக்கும் அளிக்கப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டிற்காக தனிமைதானங்கள் உருவாயின. ஸ்பான்சர் செய்யவும், குத்தகை எடுத்து நடத்தவும் பிரபல தனியார் நிறுவனங்கள் முன் வந்தன. ஆண்களைப் போல் 
பெண்களுக்கும் நிலையான வருவாய் கிடைக்கத் தொடங்கியது.

2006-ஆம் ஆண்டு முதன் முறையாக நான் டி-20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக எங்கள் அணியுடன் களமிறங்கிய போது, புதிய ஆட்டம் என்பதால் ஆட்டத்தின் விதிமுறைகள் சரிவர தெரியவில்லை. இருந்தாலும் விளையாடி பார்க்கலாமே என்ற தைரியத்தில் விளையாடி வெற்றியும் பெற்றோம். அடுத்தடுத்து விளையாடி போது ஆட்டத்தின் சுவாரசியம் புரிந்தாலும், டி-20யில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால் டி-20 போட்டிகளில் ஆடிய போது என்னுடைய திறமையான ஆட்டத்தை ரசிகர்கள் வரவேற்று பாராட்டியதை மறக்க முடியாது.

பெயரும் புகழும் இருக்கும் போதே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று சில பெண்கள் விருப்பப்படுவதைப் போல் நானும் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் சில காரணங்களால் நிறைவேறவில்லை. என்னுடைய அம்மாவோ நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த சமயத்தில் நான் திருமணம் செய்து கொண்டிருந்தால் இவ்வளவு உச்சத்துக்கு வந்திருக்க முடியாது. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாட நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஒரு வேளை திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து விளையாட அனுமதிக்கும் கணவராக தேடுவதும் சிரமம்தான். மேலும் திருமணம் என்பது இயற்கையாக நடக்க வேண்டும். வற்புறுத்தல் கூடாது.

உண்மையில் 2009-ஆம் ஆண்டு நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று விரும்பியதுண்டு. அம்மாவிடமும் நல்ல வரனாக பார்க்க சொன்னேன். ஆனால் அந்த சமயத்தில் மகளிர் கிரிக்கெட் அணி உலக அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளையும், வரவேற்பையும் பெற்றிருந்தது. தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பை ரசிக்கும் கூட்டம் அதிகரித்தது. மகளிர் அணிகள் வலுப்பெறத் தொடங்கியது. 

அதனால் என் திருமணத்தைப் பற்றி யோசிப்பதை சில ஆண்டுகள் தள்ளி வைத்தேன். இப்போது தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறேன். இதனால் எனக்கு கூடுதல் வலிமையும் அனுபவங்களும் கிடைக்கின்றன. 

இப்போது 2021-ஆம் ஆண்டில் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று வருவது தான் எங்கள் லட்சியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com