குழந்தைத் திருமணங்கள் வேண்டாம்!

""எங்கள் மாவட்டத்தில்  உள்ள பெண்கள்,  பெற்றோர்  சொல்வதை  கேட்டு அதை  மீறாமல்  அதன்படியே நடப்பதுண்டு.
குழந்தைத் திருமணங்கள் வேண்டாம்!

""எங்கள் மாவட்டத்தில் உள்ள பெண்கள், பெற்றோர் சொல்வதை கேட்டு அதை மீறாமல் அதன்படியே நடப்பதுண்டு. நான் அப்படிப்பட்டவள் அல்ல'' என்று கூறும் மஞ்சு பத்ரா (22) , தன் மாவட்டத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த குரலெழுப்பி வருகிறார். அண்மையில் நடத்திய ஆய்வில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கும் மாநிலங்களில் பதிமூன்றாவது இடத்தில் உள்ள ஒடிசாவில் நான்கு லட்சம் குழந்தைகள் 10 முதல் 19 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கலாஹந்தி மாவட்டத்தில் உள்ள போர்படா கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு பத்ரா, குழந்தைத் திருமணங்களை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். குறிப்பாக அங்கு வசிக்கும் பழங்குடி இனத்தவரிடையே இத்தகைய திருமணங்கள் நடைபெறுகின்றன. மஞ்சு பத்ராவும் கோண்ட் எனும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராவர் இவரது தாய்க்குத் திருமணம் நடந்தபோது 14 வயது. தந்தைக்கு 17 வயது. அவர்களுக்கு பிறந்த 14 குழந்தைகளில் மஞ்சு பத்ராவுடன் சேர்ந்து 4 குழந்தைகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

கலாஹந்தி மாவட்டத்தில் தான் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்பதால் 2017-ஆம் ஆண்டு இவரது கிராமத்திற்கு வந்த "ஆக்ஸ்பம் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப் பெண்களிடையே குழந்தைத் திருமணம் மற்றும் பாலின அணுகுமுறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. 2015 -16 ஆம் ஆண்டுகளில் தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு ஆய்வு நடத்தியதில் அந்த மாவட்டத்தில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 22.9 சதவீதத்தினர் 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 5.7 சதவீதத்தினர் ஏற்கெனவே திருமணமாகி ஆய்வின் போது கர்ப்பமுற்றிருப்பதும் தெரிந்தது. இந்த விவரங்களை கேட்டதும், இனி தன்னுடைய கிராமத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்.

பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் மேற்கொண்டு அருகில் உள்ள நகரத்திற்குச் சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க நினைத்தார் மஞ்சு. ஆனால், இவருடைய பெற்றோர் இவரை தனியாக அனுப்புவோ ஆண்களுடன் பேசவோ அனுமதிக்கவில்லை. அங்குள்ள மஞ்சுவின் மாமா வீட்டில் தங்கி படித்ததோடு, வீட்டு வேலைகளையும் கற்றுக் கொள்ளும்படி கூறினர். ஆனால், மஞ்சுவுக்கோ சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பது விருப்பமாக இருந்தது. இந்த காரணத்தால் உடனடியாக இவரால் கல்லூரியில் சேர முடியவில்லை.

ஆக்ஸ்பம் இந்தியா உறுப்பினர்கள் இவரது பெற்றோரை சந்தித்து சமாதானப்படுத்தி கல்லூரியில் படிக்க அனுமதி பெற்றனர். அங்கு ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்து பி.பி.ஏ பட்டம் பெற்றார். அதன் பின்னரே குழந்தைத் திருமணங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

ஆனால் காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் அந்த முறையை மாற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை. இது எங்கள் மகன், மகள் சம்பந்தப்பட்ட குடும்ப வாழ்க்கை. பரம்பரை வழக்கம். இதில் தலையிட வேண்டாம் என்று பெற்றோர்கள் மஞ்சுவை எச்சரித்தனர். சிலர் மஞ்சுவை பின் தொடர்ந்து கேவலமாக பிரசாரம் செய்ததோடு, மிரட்டவும் செய்தனர். இவரது பெற்றோரிடம் சென்று மஞ்சுவை அடக்கி வைக்கும்படி எச்சரித்தனர்.

கவிதை எழுதும் பழக்கமுள்ள மஞ்சு இதற்கெல்லாம் அஞ்சவில்லை. வாழ்வதற்கு எனக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அப்படி என் விருப்பப்படி வாழ்வேன் என்று எழுதியபடி, மஞ்சு தன்னுடைய கிராமத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்கவிடாமல் தடுக்க பெரு முயற்சிகளை மேற்கொண்டார். இவரது பெற்றோரும் இவருக்கு பெரும் துணையாக நின்றனர். கூடவே தீபாஞ்சலி பத்ரா என்பவரும் சேர்ந்து கொண்டதோடு, ஆக்ஸ்பம் இந்தியா உதவியுடன் இரண்டு குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியதை தன்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறார் மஞ்சு.

""பரம்பரை பழக்க வழக்கங்களை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. நீண்ட காலம் ஆகலாம். இதற்கு கல்வியறிவும் முக்கியம். முடிந்தவரை என்னுடைய மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்"" என்று உறுதியுடன் கூறுகிறார் மஞ்சு பத்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com