கடல் கடந்து ஆன்மிக பணி!

ஜெர்மனியில் முதன்முதலாக தமிழர்களின் இந்துக் கோயில்கள் 1990-இல் கட்டப்பட்டது.
கடல் கடந்து ஆன்மிக பணி!

ஜெர்மனியில் முதன்முதலாக தமிழர்களின் இந்துக் கோயில்கள் 1990-இல் கட்டப்பட்டது. இப்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட கோயில்கள் அங்கு இருப்பதாக தகவல். ஆனாலும் ஜெர்மனியின் நோட்றைன் வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் இடத்தில் ஐந்து நிலை கோபுரத்தோடு கூடிய ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரபலமான கோயிலாகும்.

ஜெர்மன் மக்கள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இருந்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோயிலுக்கு வருகின்றனர். அந்த கோயிலில் தன்னை முழுநேரமும் அர்பணித்துக் கொண்டு ஆன்மிக தொண்டுகளை செய்து வருபவர் மீனா உதயகுமார். மேலும், இவர் ஆன்மிக பாடல்களைப் பாடி குறுந்தகடு வெளியிடுவது, செஞ்சிலுவை சங்கம் மூலமாக நலத்தொண்டுகள் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து:

""இலங்கை வடபகுதியில் உள்ள அச்சுவேலி எனது ஊர். அங்கு தான் என்னுடைய தொடக்கக்கல்வியை கற்றேன். எனது தந்தையார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். தாய் ஆசிரியை.

தாய் கொடுத்த ஊக்கம் தான் இன்று வரை குடும்ப பெண்மணியாகவும் ஆன்மிக தொண்டராகவும் பாடகியாகவும் வாழ காரணமாக அமைந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் போர் சூழல் காரணமாக தென்னிலங்கையை நோக்கி புலம்பெயர்ந்து சிலாபம் என்னும் ஊரில் குடியேறினோம். அங்கு, கோயில் தொண்டுகள் செய்வது மற்றும் இந்து கலாசார அமைச்சகத்தின் கீழ் நடத்தப்பட்ட அறநெறி பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.

திருமணத்துக்குப் பின், புகுந்த வீடான ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தேன். கோயிலின் தொண்டினை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஐரோப்பியாவில் மிகப்பெரிய காமாட்சி அன்னையின் ஆலயமும் இருந்தது. அங்கு எனது தொண்டினை மேற்கொண்டு வருகிறேன்.

இங்கு ஜெர்மன் நாட்டவர்கள், நமது மொழி, கலாசாரம், பண்பாடு அனைத்துக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள்.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களை வாசித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இந்த கோயிலின் தலைமைக்குருக்கள் சிவஸ்ரீபாஸ்கர குருக்களும் அவரது துணைவியார் மதிவாணி அம்மாவும் என்னை மூத்த மகளாக ஏற்றுக் கொண்டு என் ஆன்மிக தொண்டுகளுக்கும், இசை பயணத்துக்கும் ஒத்துழைப்பு தருகின்றனர். ஜெர்மன் நாட்டில் முதன்முதலாக இல்லத்தில் நவராத்திரி கொலு வைத்தது எனக்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறு வயது முதல் சமூக நலத்திலும் ஈடுபாடு இருந்த காரணமாக செஞ்சிலுவை சங்கத்தில் இணைத்துக் கொண்டு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

இப்போது வறுமையில் வாடும் ஆப்ரிக்க குழந்தைகளுக்கு ஆடைகள், பாத அணிகள் சேகரித்து செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அளித்து வருகிறேன். ஆதரவற்ற செல்ல பிராணிகளுக்கு ஆதரவு கொடுத்து அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைக்கிறேன். மிருக வதைக்கு எதிராக போராடுகிறேன்.

அதுபோன்று, இலங்கையில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் கணவரை இழந்த பெண்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
இந்து கலாசார அமைச்சகத்தின் மூலமாக சிறந்த சைவ சமய ஆசிரியர் பட்டம், பல கோயில்களில் தொண்டு செய்தமைக்காக பாராட்டுகள் கிடைத்தது மறக்கமுடியாதது.

இலங்கையில் ஒருமுறை நடைபெற்ற மிகப்பெரிய பஜனையில் ஹிந்தி, தமிழ் போன்ற நான்கு மொழியில் தொடர்ந்து பாடியதற்காக மாத்தளை நகரத்தில் சின்னஞ்சிறு பாடகி என்னும் பட்டம் கொடுத்தனர்.

2018-ஆம் ஆண்டு நான் பிறந்த தாய் மண்ணில் இந்து சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆகம, சமூக சேவைகளைப் பாராட்டி முத்தமிழ் சைவ உபாசகி என்னும் பட்டத்தை; வழங்கினார். இந்தியாவின் "நந்தவனம்' அறக்கட்டளை நிறுவனத்தால் உலக சாதனை பெண்; விருது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com