வலிகளைக் கடந்த வலிமை!

ஒரு சாதாரண தலைவலி என்றாலும் எல்லாப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வெடுக்கச் செல்வதுதான் நம் எல்லோருடைய பொதுவான வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.
வலிகளைக் கடந்த வலிமை!


ஒரு சாதாரண தலைவலி என்றாலும் எல்லாப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வெடுக்கச் செல்வதுதான் நம் எல்லோருடைய பொதுவான வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 12-ஆம் வயதின்போது தொடங்கிய வலியைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல்,  பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பையும் முடித்து, முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்பையும் முடித்து, இந்திய பொருளாதாரப் பணிக்கு (ஐஏஎஸ், ஐபிஎஸ் போல, அதே பிரிவில் இது ஐஇஎஸ்) தயாராகி வருகிறார் செந்தமிழ் வீணா.

பள்ளிப் பருவத்தில் நடனத்தில் மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தார் செந்தமிழ் வீணா. 2004-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் நாள் திருவள்ளுவர் தினத்தன்று குறள்நெறிப் பயிலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில், "ஆனந்த நடனமாடுவாய்' என்ற பாடலுக்கு ஊர்ப்பொது மேடையில் ஏறத்தாழ ஐந்தரை மணி நேரம் பரதமாடியிருக்கிறார். அதனைத் தொடரந்து,  குடியரசு தினத்தன்று கொடியேற்றும் விழாவில் நடனம்.

அதன்பிறகு உடல் நலக் குறைவு. ஒரு கட்டத்தில் பள்ளிக்குப் போக முடியாத அளவுக்கு கை, கால், இடுப்பு மூட்டுகளில் கடுமையான வலி. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, செந்தமிழ் வீணாவுக்கு "இளம்பிள்ளை முடக்குவாதம்' (ஜூவினைல் ரொமாட்டைடு ஆர்த்ரிட்டிஸ்) இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். எலும்பு மஜ்ஜையிலுள்ள வழவழப்புத் தன்மை காய்ந்து போய், வறண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசி - தேய்ந்து வலியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

உற்சாகமாய் சென்று கொண்டிருந்த இக்குடும்பத்தின் பயணத்தில் பெரும் சோகம் தொற்றிக் கொண்டது. ஆங்கில மருத்துவத்துக்கு இடையே ஆயுர்வேத மருத்துவ முறையையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். உடல் மெலிந்து வீட்டுக்குத் தூக்கி வந்ததுதான் மிச்சம்.

அப்போதெல்லாம் தினம் தினம் சொற்களால் வடித்திட முடியாத அளவுக்கு வலி இருந்ததாகவும் வலி நிவாரணியை எடுத்துக் கொண்டால் சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம் எனவும் விவரிக்கிறார் செந்தமிழ்வீணா.

தனது மகளின் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக டாக்டர் ரவீந்திரனும், இனி இவள் பிழைக்க மாட்டாள் என சந்திராவும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். 

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரவீந்திரனின் இரண்டாவது மகள் செந்தமிழ் வீணா. மூத்த மகள் முத்தமிழ் வீணா, மருத்துவர். தாய் சந்திரா ரவீந்திரன், பொன்மாரிக் கல்வி நிறுவனங்களின் தாளாளர், அம்பிகா அறக்கட்டளையின் நிறுவனர். பொது சேவைகளில் முன்னிற்கும் குடும்பம்.

உடல் வலியை மருந்துகளோடு சண்டை செய்ய விட்டுவிட்டு, கல்விப் புலத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் செந்தமிழ்வீணா. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை தனித்தேர்வராக வீட்டிலிருந்தே படித்து, உதவியாளரை வைத்து எழுதியுள்ளார். 438 மதிப்பெண்கள். அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு, 1139 மதிப்பெண்.

இளநிலை (பிஏ) பொருளியல், அரசு மகளிர் கல்லூரி. முதுநிலை (எம்ஏ) பொருளியல், மன்னர் கல்லூரி. இரண்டிலும் பல்கலைக்கழகத்தில் முதலிடம். தொடர்ந்து தேசிய தகுதித் தேர்வு, மாநிலத் தகுதித் தேர்வு... அயராத உழைப்பு. இடையிடையே கல்லூரிகளில் சுயமுன்னேற்றப் பயிற்சி, பொருளியல் உரை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  "சுகாதாரப் பொருளியல்' என்ற தலைப்பில் முனைவர் ஆய்வுப் பட்டத்தை இந்த ஆண்டு முடித்துள்ளார்.

யு.பி.எஸ்.ஸி தேர்வினை (இந்திய பொருளியல் பணி- ஐஇஎஸ்) இரண்டு முறை தொட்டுப் பார்த்து வந்திருக்கிறார். "மூன்றாவது முறை நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்கிறார் செந்தமிழ் வீணா.

தனது விடாமுயற்சி குறித்து நம்மிடம் செந்தமிழ் வீணா...

""எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது என்றால் அதையே யோசித்துக் கொண்டு, கவலைப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. இதைத்தான் நான் என் வாழ்வில் எடுத்துக் கொண்டேன். என் உடலில் இதுவரை 5 அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. அவைதான் என்னை இப்போது மெல்ல நடக்க வைத்திருக்கின்றன என்பேன்.

"அசோசியேஷன் ஆஃப் எக்கானமிஸ்ட் தமிழ்நாடு' என்ற அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, அது சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரெங்கராஜன் கையால் விருதையும் பெற்றிருக்கிறேன்.

"ஸ்கூல் எக்கனாமிக்ஸ்' என்ற பெயரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு யூடியுப் சானலைத் தொடங்கியிருக்கிறேன். பொருளியல், பொருளாதாரம் என்றாலே கல்விப் புலத்தில் பாகற்காயாய்க் கசக்கும் என்று கருதப்பட்டு வரும் இந்தக் காலத்தில், எளிமையாக பொருளாதாரப் பாடத்தை விளக்கத்தான் இந்தச் சானலைத் தொடங்கினேன்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான சமச்சீர்க் கல்வி மற்றும் சிபிஎஸ்ஸி பாடத் திட்டத்தில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் வரிக்கு வரி தமிழிலேயே விளக்கமளிக்கிறேன். இந்தச் சானலை டி.என்.பி.எஸ்.ஸி, யு.பி.எஸ்.ஸி படிக்கும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தளவுக்கு பொருளியலில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவரைப் பார்த்துதான் பொருளியல் மீது எனக்கு அளவு கடந்த பற்று ஏற்பட்டது. நாட்டின் எல்லா வகையான பிரச்னைகளுக்கும் பின்னணியில் பொருளியல் இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து இதே புலத்தில் பயணிக்கிறேன்'' என்கிறார் செந்தமிழ்வீணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com