கதை சொல்லும் குறள் - 54: மகிழ்ச்சியால் வந்த மறதி!

""வத்சலா, காஸ் அடுப்பின் மெயின் இணைப்பை மூடிட்டியா பாரு''.
கதை சொல்லும் குறள் - 54: மகிழ்ச்சியால் வந்த மறதி!


""வத்சலா, காஸ் அடுப்பின் மெயின் இணைப்பை மூடிட்டியா பாரு''.

""மூடிட்டேங்க''ன்னு குரல் கொடுத்தாள் வத்சலா.

இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். கணவன் ஆதித்யாவுடனும், இரண்டு பிள்ளைகள் விக்னேஷ், ரமேஷுடனும் மேற்கொள்ளப் போகும், இன்பச் சுற்றுலா அது என்பதால் வத்சலா மகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டு இருந்தாள்.

பெரியவன் விக்னேஷ் ஒன்பதாவது முடித்திருந்தான். அடுத்த வருடம் அவனுக்குப் பொதுத்தேர்வு இருப்பதினால் இந்த வருடம் வத்சலா வெகுநாளாக ஆசைப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள ஆதித்யா முடிவு செய்திருந்தான்.

வத்சலா குடும்பத் தலைவி, ஆதித்யா பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளராக இருந்தான். கைநிறையச் சம்பளம்தான், ஆனால் இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, இதரச் செலவுகள் என்று கையில் மிச்சப்படுவது கொஞ்சமாகத்தான் இருந்தது.

வத்சலாவுக்குப் பயணங்களின் மீது அப்படி ஒரு மோகம். அதற்கு என்றே மாதம் நான்காயிரம் ரூபாயைப் பேங்கில் டெபாசிட் செய்து விடுவாள். வருடக் கடைசியில் அந்தப் பணத்தைக் கொண்டு உள்நாட்டில் சுற்றுலா செல்வார்கள்.

இந்த முறை வத்சலாவின் அப்பா, தான் ரிடையர் ஆன பிறகு வந்த பணத்தில் தன் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்தபொழுது வத்சலாவின் பங்காக ஆறு லட்ச ரூபாய் வந்தது.

பெருமகிழ்ச்சி அடைந்தாள் வத்சலா. கையில் வந்த பணத்தைக் கொண்டு ஐரோப்பியப் பயணத்திற்குத் திட்டமிட்டாள், இதோ இன்று பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மூலமாக லண்டனுக்குச் சென்று பிறகு யூரோ ரயில் மூலமாகப் பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சுவிஸ் சென்று பிறகு சென்னை திரும்புகிறார்கள்.

நான்கு பேர் பயணிக்கிறார்கள், அதற்கான டிக்கெட்டுகளைச் சென்னையிலிருந்தே ஆன்லைன் மூலமாக வாங்கிவிட்டனர். பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணத்திற்கு, தேவையான பணம் வேண்டுமே. சாப்பிட, நுழைவுக் கட்டணங்களுக்கு என்று ஒரு லட்ச இந்திய ரூபாயை, யூரோவாக மாற்றி எடுத்துக் கொண்டனர்.

முன் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணத்தில் செல்ல விரும்பாமல், தாங்களாகவே, வரையறுத்தபடி சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள விரும்பி அதற்கு ஏற்றாற்போல ஹோட்டல்களையும் ர் செய்திருந்தனர்.

ஒருமுறைக்கு, இருமுறை வீடு பூட்டியிருக்கா, ஜன்னல்கள் எல்லாம் மூடியிருக்கான்னு சரிபார்த்து, வீட்டின் மின் இணைப்பை நிறுத்தி, குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தமாகத் துடைத்து மூடி, வீட்டைக் கண்காணிக்க நண்பர் ஒருவரை நியமித்து, பிறகு நிம்மதி மூச்சுவிட்டு, படுஜாலியாக விமான நிலையத்தை அடைந்தனர்.

ஹீத்ரு விமானநிலையம். வத்சலா அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு பிரமித்துப் போனாள். பளபளக்கும் விளக்குகள், பளிங்குத் தரைகள், விதவிதமான கடைகள், உணவகங்கள் என்று தேவலோகத்தை ஒத்து இருந்தது. ஒரு வழியாக இமிகிரேஷன் எல்லாம் முடிந்து, தங்கள் ஹோட்டலை அடைந்தனர்.

இரண்டு நாட்கள் லண்டன் பெருநகரத்தைச் சுற்றிப் பார்த்தனர். பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், பிக்பென், பக்கிங்காம் பேலஸ், நேஷனல் ஹிஸ்டரி மியூசியம், லண்டன் பிரிட்ஜ், வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்று பார்த்து மகிழ்ந்தனர்.

""ஆதி'' என்று தன் கணவரை அன்பொழுக அழைத்தாள் வத்சலா.

""என்ன?'' என்றான் கணவன்.

""நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா? இப்படி குடும்பத்தோடு, நான் சரித்திரப் புத்தகத்தில் படித்து கற்பனையில் பார்த்த இடங்களை நேரில் பார்ப்பது'' என்று முகம் முழுக்கப் பூரிப்பை ஏந்திச் சொன்னாள் வத்சலா.

""என்னுடைய உணர்வுகளும் உன்னை ஒத்ததாக இருக்கு'' என்றான் ஆதி.

""அப்பா, எங்களுக்கு பிக்பென் மணிக்கூண்டு போட்ட டி ஷர்ட்டுகள் வாங்கித் தாப்பா. நானும், தம்பியும் அதைப் போட்டுக்கிட்டு என் நண்பர்களிடம் காட்டிப் பெருமைப்படுவோம்'' என்றான்.
""வாடா, வாங்கித் தருகிறேன்'' என்று ஆதித்யா மகிழ்ச்சியோடு சொன்னான்.
மறுநாள் காலை மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியோடு, யூரோ ரயிலில் பிரான்ஸின் தலைநகரான பாரீஸூக்குக் கிளம்பிச் சென்றனர்.
பாரீûஸச் சென்று அடையவே நண்பகல் ஆகிவிட்டதால், பகல் மூன்று மணிக்கு ஈஃபில் டவரைப் பார்க்கக் கிளம்பினார்கள்.
வானுயர்ந்து நின்ற ஈஃபில் டவரைப் பார்த்த உடனேயே, இளைய மகன் ரமேஷ், “""அப்பா, இந்த டவர் முன்னால் என்னை மட்டும் நிற்க வைத்துப் புகைப்படம் எடுங்க'' என்றான்.”
இப்படி ஒவ்வொருவராகப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
ஈஃபில் டவரில் இயங்கும் லிஃப்டில் ஏறி அதன் உச்சிவரைச் செல்ல, டிக்கட்டுகளை வாங்க ஆதித்யா சென்றான்.
ஆதித்யாவின் சட்டைப் பையில் இருந்த யூரோக்கள் போதுமானதாக இல்லாததால் மனைவியின் பக்கம் திரும்பினான்.
""வத்சலா, ஒரு நூறு யூரோ நோட்டை உன் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடு'' என்றான்.
""இதோ'', என்ற வத்சலா தன் தோளில் கைப்பை இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள்.
"'ஐயோ ஆதி, என் கைப்பையைக் காணுமே'' என்று வீரிட்டாள்.
அவ்வளவுதான் மொத்தக் குடும்பமே பதட்டம் அடைந்தது.
""அம்மா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே உன் தோளிலே பை இருந்ததைப் பார்த்தேம்மா'' என்றான் விக்னேஷ்.
அப்பொழுதுதான் வத்சலாவுக்கு ஞாபகத்திற்கு வந்தது. புகைப்படங்களை எடுக்கும்பொழுது, தோளில் அந்தக் கனமான பை தொங்க வேண்டாம் என்று பக்கத்தில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் வைத்தாள், அதை எடுக்க மறந்து விட்டாள்.
வத்சலாவுக்கு, வயிறு கலங்கியது. நெஞ்சு அடைப்பதுபோல ஆனது. தலைச்சுற்றி விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
வத்சலாவின் நிலை கண்டு ஆதித்யா பயந்துப் போனான்.
""நிதானமாக யோசி'' என்றான்.
""அதோ தொலைவில் இருக்கும் பெஞ்சில், புகைப்படம் எடுக்கும் பொழுது வெச்சேன்''.
""திரும்ப எடுக்கலையா?'' என்று ஆதித்யா முனங்கினான்.
""மறந்துட்டேன்'' என்றாள் வத்சலா.
அடுத்த நொடி நான்கு பேரும் குறிப்பிட்ட இடத்தை நோக்கி விரைந்தனர்.
அந்தோ பரிதாபம்! அங்கே கைப்பையைக் காணவில்லை.
இப்பொழுது ஆதித்யாவுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
அந்தப் பையில்தான் நான்கு பேருடைய பாஸ்போர்ட்டுகளும் இருந்தன. ஹோட்டலில் ஐநூறு யூரோக்கள், சூட்கேஸில் உள்ளது. மீதிப் பணம் வத்சலாவின் கைப்பையில்தான் இருந்தது.

பணம், பாஸ்போர்ட்டுகள் என்று எல்லாமே போய்விட்டது.

வத்சலா கதறி அழத் தொடங்கினாள். யாரிடம் போய் என்ன கேட்பது? லண்டனில் எல்லோரும் ஆங்கிலம் பேசினர். இங்கே பிரெஞ்ச் மொழியைத்தான் எல்லோரும் பேசினார்கள்.

திரும்ப ஹோட்டலுக்குப் போகக்கூடப் பணம் இல்லை. யாரிடம் உதவி கேட்பது?
பிரான்ஸின் அதிமுக்கியமானச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடம் என்பதால் அங்கே கூட்டம் மிகுதியாக இருந்தது.

போலீஸ் உடையில் இருந்த இருவரிடம் விரைந்து சென்று, நடந்ததைக் கூறி உதவி கேட்டான் ஆதித்யா.

அவர்களுக்குப் பிரெஞ்ச் மொழியைத் தவிர ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

""டு யு நீட் எனி ஹெல்ப்'' என்று கேட்டபடி ஒருவர் வந்தார்.

ஆதித்யா குடும்பத்திற்கு அவர் கண்கண்ட தெய்வமாகவே தெரிந்தார்.

ஆங்கிலமும், பிரெஞ்சும் தெரிந்த நபர், தன் நண்பர்களோடு ஈஃபில் டவருக்கு வந்தவர். அவருடைய நண்பர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு பாரீûஸச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாராம்.

போலீஸாரிடம், பிரெஞ்சில் அவர் நடந்ததைக் கூற, அதற்கு அவர்கள், ""இங்கே பிக்பாக்கெட் அடிப்பவர்கள் பலர் உல்லாசப் பயணிகள் போல உலாவுவார்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம். இங்கே போய்  இப்படி அஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்களே‘‘ என்று எரிச்சல் பட்டார்கள்.

ஆதித்யா, போலீஸ் ஸ்டேஷனுக்கு குடும்பத்தோடு, போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே எழுத்து மூலம் புகாரைப் பதிவு செய்தனர்.

பிறகு அதே ஜீப்பில், அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இறக்கி விடப்பட்டனர்.
""கைப்பை கிடைக்கத் தங்களால் முடிந்ததைச் செய்வோம்'' என்று காவல்துறை உறுதி அளித்தது.

பார்க் போன்ற இடம் என்பதால் அங்கே சிசி டிவி கேமிரா பொருத்தப் பட்டிருக்கவில்லை. அதனால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை.

மூன்றே நாள்தான் சுற்றுப் பயணத்தை முடித்திருந்தனர். இன்னும் பார்க்க வேண்டிய நாடுகள் பல இருந்தன. ஆனால் கையில் வெறும் ஐநூறு யூரோக்களுடன், பாஸ்போர்ட்டுகள் இல்லாமல் எப்படிப் பயணிப்பது?
ஆதித்யா, இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடினான். அவர்களும் உதவ முன்வந்தனர்.

டூப்ளிகேட் பாஸ்போர்ட்டுகள் வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகின. பிறகு தன்னுடைய பேங்கின் மூலம் பணத்தை ஆதித்யா வரவழைத்தான். கைப்பை போனது போனதுதான். மூன்று நாட்கள் சரியாகத் தூங்காமல், சாப்பிடாமல் கவலைப்பட்டு, வாடி நின்றனர். பிறகு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி எவ்வளவு கொடுமையானது என்பதை வத்சலாவின் குடும்பம் புரிந்து கொண்டது. அவர்களுடைய இந்தத் தவிப்பும், கஷ்டமும் நமக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாதுதானே.

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

குறள் எண்: 531

பொருள் :

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com