யோகக் கலை மருத்துவம்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவு மெய்ப்படும் வரை அவர்கள் ஓய்வதில்லை.
யோகக் கலை மருத்துவம்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவு மெய்ப்படும் வரை அவர்கள் ஓய்வதில்லை. சிலருடைய கனவுகள் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பலன் தரும் வகையில் அமைந்து விடுவதுண்டு. தன்னுடைய கனவுகள் நனவாக உழைப்பை மட்டுமே நம்பி உழைத்துக் கொண்டே இருப்பவர் ராஜேஸ்வரி. யோகக்கலை மூலம் நோய்களுக்கு சிகிச்சை செய்து வருபவர். தான் மட்டுமல்லாது இளைய தலைமுறை சிறக்க தன்னாலான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் அனுபவங்களை இங்கே விவரிக்கிறார்...

""அம்மா நெசவாளர், அப்பா சிறுதொழில் செய்து வருகிறார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்றேன். சாப்பாடு எப்படி அன்றாடமோ அது போல அம்மா கதை சொல்வதும் நாள் தவறாமல் இருக்கும். சமயக் கதைகள் "ராமாயணம்', "மகாபாரதம்' என்று அம்மா சொல்லிக் கொடுத்தால் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாபெரும் தலைவர்கள் என்று வரலாற்று நாயகர்கள் பற்றிச் சொல்லிக் கொடுப்பார். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்ததால் நம்முடைய பாரம்பர்யம் புராதனம் இவற்றில் எனக்கும் ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. யோகக் கலை மீது ஆர்வம் ஏற்படவே பெங்களூருவில் ஐந்து ஆண்டுகள் யோகக்கலை மற்றும் அதன் வழியிலான சிகிச்சை முறைகளைப் பயின்றேன்.

யோகா கற்றுக் கொண்ட அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு மனிதரின் முழுமையான வளர்ச்சிக்கும் விடுதலைக்குமானது. உடல் -மனம் -அறிவு என்று எல்லா நிலைகளிலும் நம்மை சமன்படுத்திக் கொள்வதற்கான ஆரோக்கிய வழிமுறை. நம்முடைய சாஸ்திரங்கள் மனித வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுப்பார்கள். உலகம் முழுவதிலிருந்தும் யோகா கற்றுக் கொள்வதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் வருகிறார்கள். யோகா பயில்வதோடு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளோடும் நமக்கு பணி இருக்கும். கண்முன் எத்தனையோ அற்புதங்களை அங்கே கண்டிருக்கிறேன். நாள்பட்ட நோய்கள், சில நாள்களில் குணமாவதை பார்த்திருக்கிறேன். சாத்விக உணவு, மூச்சுப் பயிற்சி, ஆசன பயிற்சி என்று முற்றிலும் நம்முடைய உடலை மட்டுமே பயன்படுத்தி உடலை குணப்படுத்தும் முறை.  முடக்கு வாதம் போன்ற மருந்தில்லா நோய்கள் முதல் இதய நோய், புற்று நோய் போன்ற தீவிர நோய்களும் கட்டுக்குள் வருவதையும் முழுமையாக குணம் அடைவதையும் கண்டிருக்கிறேன். மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் அவர்களுடைய மனஅழுத்தத்தினால் ஏற்படுவது தான். அதை ஆதிஜ நோய்கள் என்கிறது நம் சாஸ்திரம். மனஅழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் சிறப்பு யோகப்பயிற்சியை நான் கற்றுக் கொண்டேன். 

உங்கள் ஸ்வதந்திரா ஸ்கூல் ஆஃப் யோகா பற்றி...

ஸ்வதந்திரா ஸ்கூல் ஆஃப் யோகா கோவையிலிருந்து செயல்படும் ஓர் பாரம்பரிய யோக சிகிச்சை மையம். யோகக்கலை பயின்று திரும்பிய பிறகு சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்று முயன்றேன். பல மருத்துவமனைகளையும் அணுகினேன். ஆரம்பத்தில் ஒன்றும் பயன்தரவில்லை. பள்ளிக்கூடத்தில் யோகா வகுப்புகள் எடுத்துக் கொண்டே அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஒரு யோகப்பள்ளியைத் தொடங்கினேன். பலரும் யோகா கற்றுக் கொண்டார்கள். அதிலே ஒரு பெண்மணி வங்கி மேலாளர். யோகா கற்றுக் கொண்டு பயனடைந்தவர் எனக்கு வங்கிக்கடன் வழங்க முன்வந்தார். அந்த முயற்சியில் தான் இந்த சிகிச்சை மையத்தைத் தொடங்கினேன். பனிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நன்முறையில் மையம் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் பெரிய அளவில் பயனடைந்திருக்கிறார்கள். 

மறக்க முடியாத அனுபவம்...

பல அனுபவங்கள் இருக்கின்றன. ஒரு பள்ளியில் யோகா கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நிறைய மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு என்பதால் நானும் ஒப்புக் கொண்டேன். அங்கே குழந்தைகள் ஆர்வமாக கற்றுக் கொண்டார்கள். ஒரு பெண்குழந்தை எதிலும் ஆர்வமற்று இருந்தாள். பருமனான உடல், செவித்திறன் குறைபாடு இவற்றால் பொதுவாகவே அந்தக் குழந்தை சற்று மந்தமாகவே இருப்பாள். வற்புறுத்தித் தான் முதலில் அந்தக் குழந்தையை வகுப்பில் உட்கார வைக்க முடிந்தது. முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டால் மட்டுமே அவளால் நாம் பேசுவதைக் கேட்க முடியும். அவளுக்கு அந்த ஆண்டு முடிவதற்குள் சுறுசுறுப்பும் கேட்கும் திறனும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருந்தது. அந்தக் குழந்தை தனக்கு கேட்கும் திறன் அதிகரித்திருப்பதாக உற்சாகமாக சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

மற்றொருவர், இதய நோயால் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டவர் நம்மிடம் சிகிச்சைக்கு வந்தார். மூன்றே மாதங்களில் அவருடைய இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின் தெரிவித்திருக்கிறார்கள். கணிசமாக அவருடைய மருத்துவ செலவு குறைந்திருக்கிறது. தொடர்ந்து யோகப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இப்படி நூற்றுக்கணக்கான அனுபவங்கள் இருக்கின்றன.

உணவுப் பொருள் தயாரிப்புக்கு எப்படி ஒளவந்தீர்கள்?

இயற்கை முறை யோகா சிகிச்சை என்பதில் சாத்வீகமான உணவு முறை முக்கிய இடம் பெறுகிறது. மக்களின் உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பல சிக்கல்களுக்கு வழி செய்கிறது. அதனால் இயற்கை முறையிலான பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக உணர்ந்தேன். அதற்காக அமோக் புட்ஸ் என்று பிரண்டை, முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை போன்ற மூலிகையாலான உணவு தயாரிக்கிறோம். சிறு தானியங்கள் கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் என்று அறுபதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதனால் வறுமை நிலையில் இருக்கும் பத்துப் பெண்கள் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான சேவைகளிலும் இருக்கிறீர்களே...

ஆம். ஆத்மார்த்தமான வேலை இது. பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் என்று நாங்கள் யோகா கற்றுக் கொடுக்கச் செல்லும் பொழுது நம்முடைய பாரம்பரியமும் அதன் மதிப்பும் இளைய தலைமுறைக்கு சொல்லித் தர மறந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர்களுக்காக சிறிய ஸ்லோகங்கள், நன்னெறிக் கதைகள், எளிய யோகாசனங்கள் செய்வதற்கான பயிற்சி முறைகள், கல்வி மற்றும் செய்யும் வேலையில் கவனம் செலுத்துவதற்கான முறைகள் என்று சொல்லிக் கொடுக்கிறோம். இணைய வழியில் இயங்கும் இந்தக் குழுவுக்கு "குட்டி சொர்க்கங்கள்' என்று பெயர். அதோடு இசைக் கருவிகள் வயலின், புல்லாங்குழல், வாய்பாட்டு என்று வகுப்புகள் நடத்துகிறோம்'' என்கிறார் ராஜேஸ்வரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com