முறையான பயிற்சி: சளைக்காத மனவுறுதி!

தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
முறையான பயிற்சி: சளைக்காத மனவுறுதி!

தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிலம்பக் கலையில் மையப்பாடம், உடற்கட்டு, மூச்சு பயிற்சி, குத்து வரிசை, தட்டு வரிசை, அடி வரிசை, வர்மம் உள்ளிட்டவை சிலம்பக் கலையின் மூலகூறுகளாகும். இந்த  அளவுக்கு பெருமை வாய்ந்ததும், சிறப்பானதுமான சர்வதேச சிலம்பப் போட்டியில். விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளான பி.திட்ஷிதா மற்றும் வி.பிரேமலதா ஆகியோர்  தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர். இது குறித்து மாணவிகள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""சிலம்பம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் என புத்தகங்களில் படித்திருந்ததால் சிலம்பம் மேல் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போது மற்ற பள்ளிகளில்  நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பின், தனியாரிடம் சிலம்ப பயிற்சி பெற்று வந்தோம். அதன்மூலம்தான் நாங்கள் இருவரும்  மாவட்ட  மற்றும் மாநில போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். 

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய போட்டியில் வெற்றி பெற்றதால், சர்வதேச சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றோம். பின்னர் இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேபாள நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நேபாள போகரா ரெங்கசாலா விளையாட்டு மைதானத்தில், இந்தோ-நேபாள சர்வதேச சிலம்ப போட்டியை  கடந்த செப்டம்பர் 14- ஆம் தேதி முதல் 18 - ஆம் தேதி வரை நடத்தியது.

இதில் இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும், நேபாள, கென்யா உள்ளிட்ட 4 நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் எதிராளியுடன் மோத வேண்டியதில்லை. ஆனால் எதிராளியுடன் மோதுவது போல கம்பை வைத்து பாவனை செய்ய வேண்டும். இதில் கம்பு வீச்சின் வேகம், உடல் அசைவு உள்ளிட்டவைகளை நடுவர்கள் கவனித்து தேர்வு செய்வார்கள்.

இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதன் மூலம் , ஆர்வம்,  முறையான பயிற்சி,  சளைக்காத மனம் ஆகியவை இருந்தால் போட்டியில் வெற்றி பெறலாம் என புரிந்து கொண்டோம். கல்லூரி மாணவிகள் சிலம்பத்தை கற்றுக் கொண்டால், நேர மேலாண்மையை கடைப்பிடிக்கலாம். உணவு மற்றும் உடல் பாதுகாப்பில் கவனம் செலுத்தலாம். சர்வதேச சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற எங்களை கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி, உயர்கல்வி இயக்குநர் ச.விஜயகுமாரி, பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்'' என்றார்கள்.  

இப்போட்டியில் பி.திட்ஷிதா 19 வயதுக்கு மேற்பட்டோர் மகளிர் பிரிவில் சுருள்வாள் மற்றும் நெடுங்கம்பு பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். 

வி.பிரேமலதா 19வயதுக்கு கீழ் உள்ள மகளிர் பிரிவில் நெடுங்கம்பு, இரட்டை கம்பு ஆகிய பிரிவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com