வெற்றி நிச்சயம்!

கடந்த 2006-இல் சானிடரி நாப்கின் தயாரிப்புத் தொழிலைத் துவங்கி, தற்போது பல கோடி வர்த்தகம் நடைபெறும் நிறுவனமாக (பி ஷ்யூர்) மாற்றியுள்ளார், சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஆர். ஸ்ரீலேகா ரமணன்.
வெற்றி நிச்சயம்!

கடந்த 2006-இல் சானிடரி நாப்கின் தயாரிப்புத் தொழிலைத் துவங்கி, தற்போது பல கோடி வர்த்தகம் நடைபெறும் நிறுவனமாக (பி ஷ்யூர்) மாற்றியுள்ளார், சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஆர். ஸ்ரீலேகா ரமணன். சர்வதேச நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாப்கின் தொழிலில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியது எப்படி ? விவரிக்கிறார் ஆர்.ஸ்ரீலேகா ரமணன்.

""கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எனக்கு 1995-இல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் வீட்டில் முடங்கிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். தொழில் முனைவோராக சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் இருந்தேன்.

அதற்கேற்றாற்போல, எனது கணவர் கே.ஈ.ரமணன், மாமியார் கமலா ஈஸ்வரன், உறவினர்கள் போதிய ஊக்கமளித்தனர். கடந்த 2006 - இல், அதீத துணிச்சலுடன், பெரும் முதலீட்டில் சானிட்டரி நாப்கின் தொழிலைத் தொடங்கினேன். நானே நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றேன்.

சானிட்டரி நாப்கின் தொழிலில் சர்வதேச அளவில் விஸ்பர், ஸ்டேஃப்ரீ என்ற இரு பெரும் நிறுவனங்கள் கோலோச்சி வந்த நிலையில், நாம் எப்படி வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. ஆயினும், அனுபவத்தின் மூலம் சந்தையில் தனியிடம் பதிக்கவும், நிலையான வர்த்தகத்தில் சாதிக்கவும் முடிந்தது.

சானிட்டரி நாப்கின் பயன்பாட்டைப் பொருத்த வரை, பெண்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பிராண்ட் நாப்கினைத் தவிர்த்து, புதிய நாப்கினைப் பயன்படுத்த வைப்பதே பெரிய சவாலாகும்.

சர்வதேச நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தரத்தை உறுதி செய்ய வேண்டும். தவிர, அவர்களின் வியாபார உத்தியைப் போலவே உள்ளூரில் சந்தைப்படுத்தினோம். பெருமளவில் முதலீடு செய்தபோதும், உடனே வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று பேராசைப்படவில்லை.

வர்த்தகத்தில் கடன் கொடுப்பதில்லை என்பதிலும், பணம் கொடுத்தால் மட்டுமே சானிடரி நாப்கின் டெலிவரி செய்யப்படும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.

ஆரம்ப காலகட்டங்களில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்தன. அடுத்த 10 ஆண்டுகளில் வர்த்தகத்தில் அனைத்து நெளிவு, சுளிவுகளையும் கற்றுக் கொண்டேன். "பி ஷ்யூர்' என்ற பெயரில் 32 வகை சானிடரி நாப்கின்களை விற்பனை செய்து வருகிறோம்.

தொழிலைப் பொருத்த வரையில் நாணயம்தான் முக்கியம். தொழில் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்பமும் முக்கியமாகும். தொழிலையும் குடும்பத்தையும் ஒரே தராசுத் தட்டுகள் போலத்தான் பார்ப்பேன்.

இன்றைக்கு பெரும்பாலான மகளிர் புதிதாக தொழில் ஆரம்பித்து, எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லையெனில், அந்தத் தொழிலை உடனே நிறுத்தி விடுகின்றனர். ஆனால், தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமெனில், உடனே நிறுத்தக் கூடாது. தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நிலையான இடத்தைப் பெற முடியும்.

மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தொழிலாக மாற்றிவிட முடியும். தொழிலில் சாதிக்க நேர மேலாண்மை மிகவும் அவசியமானது.

நான் எப்போதும் தனித்துவமாக இருந்து செயல்படவே விரும்புவேன். நான் எடுக்கும் முடிவுகளில் யாரையும் சார்ந்திருப்பதில்லை. ஒருவரின் கருத்தை நாம் சார்ந்திருந்தால், அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அவரைச் சார்ந்து இருக்க வேண்டிவரும்.

சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும் நானேதான் முடிவெடுப்பேன். போராடும் திறன் வரும்போது தான் எல்லா விஷயங்களையும் கற்க ஆர்வம் வரும். எல்லாவற்றையும் எளிதாக முடித்துவிட முடியும்.

தொழிலைப் பொருத்தவரை வருமானத்துக்கு ஏற்ப செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பேன். லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதில்லை.

தற்போது எங்கள் நிறுவனம் கோடிகளில் வர்த்தகம் நடைபெறும் அளவுக்கு மாறியுள்ளது. சேலத்தில் இருந்து கர்நாடகம், கேரளம், குஜராத், ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆர்டர்கள் பெறப்பட்டு நாப்கின்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆர்டர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com