உலகைக் கவர்ந்த சிங்களத்து சின்னக் குயில் யோஹானி
By - கண்ணம்மா பாரதி | Published On : 20th October 2021 10:00 AM | Last Updated : 21st October 2021 10:59 AM | அ+அ அ- |

உலகைக் கவர்ந்த சிங்களத்து சின்னக் குயில் யோஹானி
"சுராங்கனி.. சுராங்கனி..' சுரங்கனிக்க மாலுக்கனாவா...', "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ " போன்ற இலங்கை பாப் இசைப் பாடல்கள் தமிழகத்தை எழுபதுகளில் வளைத்துப் போட்டிருந்தன. இந்தத் தனிப்பாடல்களை பாடியவர் ஈழத்து தமிழரான "சிலோன் மனோகரன்' .
வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிங்களத்து சின்னக் குயில் ஒன்று தமிழகத்தை மட்டுமல்ல... இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதுவரை சிங்களப் பாடகி யோஹானி டில்வா பாடிய "மனிக்கே மகே கிதே...' பாடலை சமூக வலைத்தளங்களில் சுமார் 16 கோடி பேர்கள் பார்த்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தெருக்களில் வயலின்கள் இசைப்பவர்கள் இந்தப் பாட்டைத்தான் விரும்பி இசைக்கிறார்கள்.
1969 காலகட்டத்தில் தமிழகத்தில் ஹிந்திப் படங்களுக்கு வரவேற்பு இல்லாத சூழ்நிலை இருந்தது. ஹிந்திப் படமான "ஆராதனா' படத்தின் பாடல்கள் வெற்றி பெற .. தமிழகத்தில் இந்திப் படங்களுக்கு ஒரு தனி இடம் கிடைத்தது. பிறகு "பாபி' குர்பானி படப் பாடல்கள் தமிழகத்தைச் சொக்க வைத்தது.
சிங்களப் பாடல்களுக்கு இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் வரவேற்பு கிடைக்காது. தவிர, என்னதான் சிங்களப் பாடல்கள் ஹிட்டானாலும் அவை இலங்கைக்குள்ளேயே அடங்கிப் போகும். சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் சரி.. சிங்களர் வசிக்கும் பகுதியைத் தாண்டி.. இலங்கைத் தமிழர்களையும் கவர்ந்து.... இந்தியர்களையும் கவர்ந்து இழுத்து பல வெளிநாடுகளில் இந்தப் பாடல் டிரெண்டிங் ஆகியுள்ளது. ஒரு பாடல் மூலம் உச்சத்தைத் தொட்டிருக்கும் யோஹானி டி சில்வா இந்தியாவிற்கு வருகை தந்து டில்லியில் ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சிகளை சமீபத்தில் அரங்கேற்றியுள்ளார். "ஷித்தத்' ஹிந்தி திரைப்படத்திலும் யோஹானி பாட - பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் யோஹானி பாடிய பாடல் பழைய பாடல். சென்ற ஆண்டு ஆண் குரலில் பாடப்பட்ட பாடல். யோஹானி குரலில் மறு அவதாரம் எடுத்திருக்கிறது.
நடிகர் அமிதாப் பச்சனைத் தூங்கவிடாத "மனிக்கேமகே கிதே...' மனுஷன் "மனிக்கே மகே கிதே..' பாடலை லூப்பில் போட்டு இரவு முழுதும் கேட்டு நிறைவு கிடைக்கவில்லையாம். பேத்தி உதவியுடன் "மனிக்கே மகே கிதே..'
T 3998 - क्या किया .. क्या हो गया !
— Amitabh Bachchan (@SrBachchan) August 15, 2021
But truly an ode to that incredible Sri Lankan song ‘Manike Mage Hithe’ ..edited here to my KALIA song by the genius NAVYA NAVELI..BUT honestly Manike.. playing in loop whole night .. impossible to stop listening.. SUUUPPEEERRRBBB pic.twitter.com/va0kEUHHVq
பாடலை அமிதாப் சின்ன வயதில் ஆடிய பாடல் காட்சியில் இணைத்து, "மனிக்கே மகே கிதே..' பாடலுக்கு ஆடுவது போன்ற காணொலியை வெளியிட்ட பிறகுதான் அமிதாப் அமைதியானார். அமிதாப் காணொளி "மனிக்கே மகே கிதே..' பாடலுக்கு இலவச விளம்பரம் ஆகி பாடலை எங்கோ கொண்டு சென்றுவிட்டது.
அமிதாப்புடன், மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ராவும் சேர டிக்டாக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பாடலுக்கு ஆடி களேபரம் செய்து வருகிறார்கள். யோஹானி சிங்களத்தில் பாடிய பகுதிகளை வைத்துக் கொண்டு, தமிழ், தெலுங்கு, ஒடிசா, பெங்காலி, போஜ்புரி.. ஹிந்தி மொழிகளில் பாடத் தெரிந்தவர்கள் தங்கள் தங்கள் மொழிகளில் பாடி பதிவேற்றம் செய்ய "மனிக்கே மகே கிதே...' அகில இந்திய ஹிட்டாகியது. மாலத்தீவிலும், தாய்லாந்திலும் இந்தப் பாடலுக்கு சொக்கிப் போனார்கள்.
யோஹானி "மனிக்கே மகே கிதே...' பாடலை "இரவில் ஒன்றே ஒன்று மனதில் சென்றதென தேடி ...
உன்னைத் தேடி பறக்கும் பறவை ஒன்று விரியும் மலர்கள் இன்று போலி நீ என்தேவி..' என்று தமிழிலும் பாட.. இலங்கைத் தமிழர்களும் யோஹானியின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.
கொழும்பில் பிறந்த யோஹானிக்கு பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், இசையமைப்பாளர், யூடியூபர் என்று பல முகங்கள் உள்ளன. அப்படிப் பல முகங்கள் இருந்தும் சாதிக்காததை "மனிக்கே மகே கிதே..' என்ற ஒரு பாடல் மூலம் சாதித்துவிட்டார்.
"விளையாட்டாகப் பாடிய இந்தப் பாடல் சர்வதேச ஹிட்டாகும் என்று கனவு கூட காணவில்லை. இந்தியாவில் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்தப் பாடல் அந்தந்த மொழிகளில் ஒலிக்கிறது என்று செய்தி வரும் போது மனசு சிறகடித்துப் பறக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் பாட நான் வரவழைக்கப்பட்டேன்.
ஹிந்திப் படத்தில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பையில் இலங்கை நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்ஸூடன் சந்திப்பும் சாத்தியமானது. அப்பா இலங்கை ராணுவத்தில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். அம்மா விமானப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்தவர். இசையை அறிமுகம் செய்தவர் அம்மாதான். விரைவில் சென்னை, பெங்களூரு, கொச்சி நகரங்களில் பாடல் நிகழ்கிகளை நடத்த உள்ளேன்.. சிங்கள பாட்டிற்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை"" என்கிறார் யோஹானி டி சில்வா..