வாய்ப்புகள் தேடி வரும்: மனதைத் திறந்து வை!

பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்கள்.
வாய்ப்புகள் தேடி வரும்: மனதைத் திறந்து வை!

பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் பெண்கள் எப்படி உயர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் அகிலா. வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் வளமான சிந்தனை இவரை ஆராய்ச்சியாளராகவும் அறிவியல் கண்டுபிடிப்பாளராகவும் உயர்த்தியுள்ளது. ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். தான் கடந்து வந்த பாதையை அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.   

உங்கள் சிறுவயது நினைவுகள் பற்றி...

காரைக்குடியில் அப்பா அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தார். எனக்கு இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் நாங்கள் ஐந்து குழந்தைகள். அம்மா அப்பாவின் சொற்ப வருமானத்தில் எங்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டார்கள். அனைவருமே சிறப்பாகப் படித்தோம். மின்சார வசதி இல்லாத வீடு. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் என்னுடைய படிப்பு இருபது வயது வரை இருந்தது. பள்ளிக்கட்டணங்கள் கட்டுவதற்கும் வீட்டில் அதிகாலையில் நான்கு மணிக்கே எழுந்து டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். பிறகு பள்ளிக்கூடம் கல்லூரிக்கு புறப்பட்டுப் போக வேண்டும். தீபாவளிக்கு புதிய உடை என்று பள்ளி சீருடை தைத்துக் கொடுப்பார்கள். என்றாலும், படிப்பில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று அப்பா அம்மா இருவருமே எங்களை ஊக்கப் படுத்துவார்கள். 

உங்கள் மேற்படிப்பு அனுபவங்கள்...

பள்ளிக்கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். மருத்துவம் படிக்க ஆசை. மதிப்பெண்களும் அதற்கேற்ப இருந்தது. ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் மருத்துவக் கல்லுரிக்குப் போக முடியவில்லை. கலை அறிவியல் கல்லூரியில் வேதியியல் படிக்கத் தொடங்கினேன். அதிலே ஆர்வம் அதிகரித்தது. எம்எஸ்சி படிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். சரியான உடை கூட இருக்காது. கையில் பணமும் கிடையாது. என்னுடைய கிழிந்த உடையை தபால் பெட்டி என்று கிண்டல் செய்து விளையாட்டாக சக மாணவர்கள் சிரிப்பார்கள், நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொள்வேன். அதிலெல்லாம் எனக்கு கவனம் இல்லை. படிப்பில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது. அதற்கான தயாரிப்புகள் நுழைவுத் தேர்வுகளுக்கு உழைத்தேன். 

எம்டெக் படிக்க ஐஐடி பம்பாயில் இடம் கிடைத்தது. எங்கெல்லாம் கல்வி உதவித் தொகை கிடைக்குமோ எல்லாவற்றுக்கும் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெற்றே படித்து வந்தேன். குடும்ப சூழ்நிலை ஒருபுறம் அழுத்தியது. படிப்பின் மீதான ஆர்வம் மறுபுறம் இழுத்துச் சென்றது. அரசு வேலைக்காக தேர்வுகளும் எழுதிக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் என் சகோதரிகள் இருவருக்கும் வங்கியில் வேலை கிடைத்துவிட்டது. எனக்கும் அரசு வேலைக்கான தேர்வுகளில் தேறி வங்கி மற்றும் எல்ஐசி நிறுவனத்தில் வேலை உறுதியாகி கடிதம் வந்து விட்டது. ஐ ஏ எஸ் தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றியும் பெற்றிருந்தேன். என்றாலும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். வீட்டில் கொஞ்சம் அதிருப்தி அடைந்தார்கள். என்றாலும் என் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள். நுழைவுத் தேர்வு எழுதினேன். ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையில் உலோகங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டேன். 

இப்போதும் கல்வி உதவித் தொகையை நம்பித் தான் படிப்பு இருந்தது. அங்கே என் பேராசிரியர் வாசுதேவன் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார். 1994- இல் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றேன். ஜெர்மனியில் வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆனால், அதற்கு ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சொன்னார். அதனால் வாரத்தில் ஒருநாள் ஜெர்மன் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். இதனால் பல சிரமங்கள் இருந்தன என்றாலும், இது தான் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. 

முதல் வெளிநாட்டுப் பயணம் பற்றி...

1994-இல் ஜெர்மனியில் இளம் விஞ்ஞானியாக வேலை கிடைத்துவிட்டது. பெண்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதெல்லாம் அப்பொழுது அசாதாரணமாக இருந்தது. ஜெர்மனி பயணத்திற்கு கையில் பணம் இல்லை. என் சகோதரி தன்னுடைய எல். ஐ. சி பத்திரத்தை ஈடாக வைத்து எனக்கு வங்கியில் கடன் பெற்றுத் தந்தார். பேராசிரியரின் மனைவி அங்கே குளிர் அதிகமாக இருக்கும் என்று அதற்கான உடைகளைக் கொடுத்து உதவினார். இரண்டு உடுப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். ஜெர்மனி சென்று சேர்ந்தேன். அங்கே இருந்த அறிவியல் சூழல் ஆராய்ச்சியில் எனக்கு மேலும் ஆர்வம் ஏற்பட தூண்டுதலாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் இரும்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.

அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆனதைச் சொல்லுங்களேன்...

ஜெர்மனியில் இருந்து வந்த பின் திருமணம். 1996-இல் அமெரிக்கப் பயணம். அங்கே ஒரு பெரு நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் ஆறு ஆண்டுகள் இருந்தேன். அங்கே ஆராய்ச்சிகளை நன்முறையில் தொடர வேலை பார்த்துக் கொண்டே எம் எஸ் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் படித்தேன்.சில கண்டுபிடிப்புகளுக்கு என் பெயரில் காப்புரிமை கிடைத்தது. பணி நிமித்தம் சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் இருந்தேன். மீண்டும் அமெரிக்க நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணி. இறையருளால் நிறைய வாய்ப்புகள் இருந்தன பல கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றேன். மூன்று நிறுவனங்களோடு பணியாற்றி ஏறத்தாழ முப்பது கண்டுபிடிப்புகள் என் பெயரில் தற்போது அறிவுசார் காப்புரிமை பெற்றிருக்கின்றன. அவற்றுள் முக்கியமான இரண்டை மட்டும் சொல்கிறேன். கம்ப்யூட்டர், லேப்டாப், அலைபேசி போன்றவற்றின் திரையில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை வெகுவாக பாதிக்கிறது. அந்த ஒளியை கட்டுப்படுத்துவதற்காக ஒரு மெல்லிய இழை கணினித் திரையில் பிலிம் போல பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கண்டுபிடிப்பு என்னுடையது. காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். சூரிய மின்சாரம் தயாரிப்பதற்குப் பொருத்தப்படும் தகடுகளில் சூரிய ஒளியை உள்ளிழுப்பதற்கான மெல்லிய தகடும் காப்புரிமை பெற்றிருக்கிறது. 2016 வரை அமெரிக்காவில் இருந்த எனக்கு இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பைத் தந்து நிறுவனம் அனுப்பி வைத்தது.

தற்போது இந்தியாவில் என்ன செய்கிறீர்கள்?

ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். கார் பாட்டரிக்கான உதிரி பாகம் தயாரிப்பது எங்கள் நிறுவனத்தின் வேலை. நிர்வாக அலுவலகம் பெங்களூருவிலும் உற்பத்திக்கூடங்கள் குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்திலும் இருக்கின்றன. 

இதற்கு முன் நான் ஆராய்ச்சிப் பிரிவுகளில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் நிர்வாகம் பற்றி யோசித்ததில்லை. நிர்வாகப் பொறுப்பை ஏற்றவுடன் ஐ. ஐ. எம். சென்று ஒரு வருட மேலாண்மைக் கல்வி கற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பு எனக்கு புதிய பாதையை கற்றலுக்கான வெளியை தந்திருப்பதாக உணர்கிறேன். இந்தியாவில் பணிபுரிவதும் சிறப்பான வாய்ப்பு. 

பெண்களுக்கு உங்கள் செய்தி...

வாழ்க்கையை மின்சாரம் கூட இல்லாத வீட்டில் தொடங்கி எங்கெங்கோ நகர்ந்து இன்றைக்கு பெரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்று நிறுத்தியிருக்கிறது. இந்த இடத்தை அடைய வேண்டும் என்று நான் தொடங்கவில்லை. ஆனால், என்ன செய்தாலும் அதை திருத்தமாகச் செய்ய வேண்டும். படிப்பில் முதன்மையானவளாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு சிந்தனைகள் எதுவும் இருக்கவில்லை. 

இப்போதும் இருக்கும் நிறுவனத்தில் என்னுடைய செயல்பாடு தரமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன். நாம் விரும்பும் துறையில் ஆர்வத்தோடு நம் பணிகளை செய்து கொண்டிருந்தால் போதும். எல்லாமும் உரிய நேரத்தில் சரியாக வந்து சேரும்.

மனதைத் திறந்து வைத்துக் கொண்டால் போதும். கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நமது பார்வை விசாலப்படும். இதனால் புரிதல் அதிகரிக்கும். இந்தப் புரிதல் நம்முடைய மனத் தடைகளை உடைத்தெறிந்து நம்முடைய முன்னேற்றத்திற்கே வழிவகுக்கும். இந்த முன்னேற்றம் நமக்கு மட்டுமல்ல நம் சுற்றம் சமூகம் எல்லாவற்றையும் உயர்த்தும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com