நல்லாசிரியர்  விருது பெற்றவர்!

2021- ஆம் ஆண்டிற்காக மத்திய அரசின் கல்வித்துறைக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஈரோடு மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலை நடுத்தர பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும் ஒருவர் ஆவார்.
நல்லாசிரியர்  விருது பெற்றவர்!


2021-ஆம் ஆண்டிற்காக மத்திய அரசின் கல்வித்துறைக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஈரோடு மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலை நடுத்தர பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும் ஒருவர் ஆவார்.

திண்டுக்கல்லில் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த லலிதா, இளம் வயது முதலே இயற்பியல் ஆசிரியை ஆக வேண்டுமென்று கனவு கண்டார். இதற்காக கடுமையாக படித்து பி.எஸ்.ஸி மற்றும் எம்.எஸ்.ஸி யில் தங்கப்பதக்கம் பெற்று தன் கனவை நனவாக்கினார்.

தன்னுடைய 25-ஆவது வயதில் கொடைக்கானல் பள்ளியொன்றில் ஆசிரியை பணியைத் தொடங்கியவர், இரண்டாண்டிற்குள் திருமணமாகி ஈரோட்டில் குடியேறினார். இவரது கணவர் ஈரோடு கல்லூரி ஒன்றில் வணிகவியல் துறை பேராசிரியராக உள்ளார்.

இந்த நல்லாசிரியர் விருது கிடைத்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட லலிதா, மாணவர்களுடனான தன்னுடைய பயிற்சி முறை பற்றி விளக்குகிறார்:

""இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாணவர்கள் மனதில் பதியும் வகையில் நான் பாடம் நடத்தும் முறையே விருது பெற காரணம் என்று நினைக்கிறேன். மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவதால் என்னுடைய வகுப்பறை எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும்.

கடந்த ஆண்டில் திடீரென அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் வெகுவாக பாதித்தது. உடனடியாக இணையதளம் வழியே வகுப்புகளை நடத்த பயிற்சிப் பெற்றதோடு, பாடங்களை புதிய நடைமுறையில் விளக்கத் தொடங்கினேன். கூடவே, நேரம் கிடைத்தபோது வீடியோக்களை உருவாக்குவது, எடிட் செய்வது போன்றவைகளை கற்றுக் கொண்டேன். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி என்னுடைய மாற்றுமுறைகளை பதிவேற்றினேன். இது தவிர, கரோனா குறித்த விழிப்புணர்வு பற்றியும் பதிவு செய்தேன். மாணவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மாற்றங்கள் பொதுமுடக்கம் காரணமாக தொடங்கப்பட்டதல்ல. அதற்கு முன்பே மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு வைத்திருந்ததால் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவது சுலபமாக இருந்தது. இந்த அணுகுமுறை நீண்ட காலம் தொடரலாம்'' என்கிறார் லலிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com