வாடிக்கையாளரின் மகிழ்ச்சியே வெற்றிக்கான சூட்சுமம்!

ஆடைகளில்  தொடங்கி நாம் பயன்படுத்தும் அனைத்திலுமே தனித்துவம் இருக்க வேண்டும் என்றே  விரும்புகின்றனர் இளம் தலைமுறையினர்.
வாடிக்கையாளரின் மகிழ்ச்சியே வெற்றிக்கான சூட்சுமம்!


ஆடைகளில் தொடங்கி நாம் பயன்படுத்தும் அனைத்திலுமே தனித்துவம் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர் இளம் தலைமுறையினர். அதிலும், இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்பது திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. அனைத்திலும் நவீனத்துவம் தேடுகின்றனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில், மணமகள்களின் பட்டுச் சேலைக் கான பிளவுஸ்களை வடிவமைப்பதில் சிறந்து விளங்குகிறார் கீத்து நாயுடு. திரைத்துறையிலும் காஸ்ட்யூம் டிசைனராக 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், நடிகை சினேகாவின் சகோதரியாவார். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக கீத்து ஹாட் கோட்சர் டிசைனர் ஸ்டூடியோ என்ற பொட்டிக்கும் நடத்தி வருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

பேஷன் துறையில் உங்கள் அனுபவம் குறித்து?

நான் டிசைனிங் துறைக்கு வந்து சுமார் 19 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பமே திரைத்துறையில்தான். எனது தங்கை சினேகாவின் காஸ்டியூம்களை நான்தான் டிசைன் செய்து தருவேன். அவரது பெரும்பாலான படங்களுக்கு நான்தான் டிசைன் செய்திருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு பின் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டேன்.

அந்த சமயத்தில்தான் எனது அம்மா பொட்டிக் ஒன்றை தொடங்க உதவினார். அதிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த டிசைனர் ஸ்டூடியோவை நடத்தி வருகிறேன். இதில், மணப்பெண்ணுக்கான பிளவுஸ் டிசைன் செய்வதுதான் எங்கள் பிரதான பணி.

நான் பொட்டிக் தொடங்குகையில், இப்போது இருப்பது போல் பெரிய அளவில் பொட்டிக்கிற்கான விழிப்புணர்வு கிடையாது. ஆரம்பத்தில் ஒரே ஒரு மாஸ்டரும், ஒரே ஒரு எம்ப்ராய்டரி மாஸ்டரையும் வைத்துதான் தொடங்கினேன். இடையிடையே திரைப்படங்களிலும் பணியாற்றியதால், ரொம்பவே பிசியாக இருக்கும்.

நிறைய புதுப்புது டிசைன்களை உருவாக்கினேன். இப்போது இருக்கும் காசு டிசைன் பிளவுஸ் எல்லாம் நான் 11 ஆண்டுகளுக்கு முன்பே செய்து விட்டேன். கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அன்று வந்த கஸ்டமர்கள் இன்றும் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கு தைத்து கொடுத்ததுபோக, தற்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்து அவர்களின் திருமண பிளவுஸ்களையும் நானே டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன்.

கல்யாணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு. அதில் தாங்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கான பிளவுûஸ டிசைன் செய்வதும், எனக்கு ஒரு பிரசவம் போன்றது. அதை அணிந்து கொள்ளும்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே எனது வெற்றிக்கான சூத்திரமாக நினைக்கிறேன்.

பிளவுஸ் டிசைனில் உங்களது தனித்துவம் என்ன?

ராதாகிருஷ்ணா, மதுரை மீனாட்சி, சரஸ்வதி, லட்சுமி தேவி, வளைகாப்பு பிளவுஸ் என்றால், குழந்தைக் கண்ணன், பால திரிபுரசுந்தரி போன்றவை எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

தற்போது செய்து வரும் புதிய டிசைன்கள் என்றால், கையிலோ, முதுகு பகுதியிலோ மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண்- மணமகன் உருவம், மணமகன்- மணமகளுக்கு மோதிரம் அணிவது அல்லது மணமகன் - மணமகள் நெற்றியில் முத்தமிடுவது போன்று டிசைன்களை செய்து தருகிறோம். இவை அனைத்தும் கை எம்ப்ராய்டரி முறையில்தான் தயாரிக்கிறோம்.

திரைத்துறை அனுபவம் குறித்து?

நான் பெரும்பாலும் சினேகாவின் படங்களுக்குதான் டிசைன் செய்திருக்கிறேன். இதைத் தவிர, ஒரு சில வெளிபடங்களுக்கும் செய்திருக்கிறேன்.

சமீபத்தில் "அண்ணாத்த' படத்தில் மீனாவின் காஸ்ட்யூம்களை நான் டிசைன் செய்து கொடுத்தேன். மேலும், மீனாவின் தெலுங்கு படம், மலையாள படம் போன்றவற்றிற்கும் டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன். இதைத்தவிர, நடிகை நமிதா, சந்தியா போன்றவர்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுத்திருக்கிறேன்.

சமீபத்தில் நடைபெற்ற கிரவுன்பிளாசா ஃபேஷன் ஷோ பற்றி?

கிரவுன் பிளாசா ஃபேஷன் ஷோவில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. நான் முதன்முதலில் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ இதுதான். எனது தோழி ரேனுகா பிரவீன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஒரு பகுதியாக ஃபேஷன்ஷோவும் இருந்தது. அவர்தான் என்னை இதில் கலந்து கொள்ளும்படி கேட்டார்.

ஆனால் அந்த சமயத்தில், என்னிடம் கல்யாண ஆர்டர்கள் குவிந்துகிடந்ததால், நேரமில்லை என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது, சினேகாதான் நீ அடுத்த தளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இது. உன்னுடைய திறமை வெளி உலகுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று கூறி என்னை இதில் கலந்து கொள்ள சொன்னார்.

இதனால், மிகமிக துரிதமாக எனது கல்யாண ஆர்டர்களை முடித்துக் கொடுத்துவிட்டு, ஒரே வாரத்தில் ஃபேஷன் ஷோவுக்கான வேலை செய்தேன். அதுவும் நான் முதன்முதலில் கலந்து கொள்ளும் ஃபேஷன்ஷோ என்பதால் ஒருவித பதட்டத்துடனே செய்து முடித்தேன். ஆனால், நானே எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போது, எனக்கு நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. மேலும், நிறைய பேஷன் ஷோக்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், எனது டிசைனில் உருவான ஆடைகளை மேடையில் மாடல்கள் அணிந்து கொண்டு வரும்போது,

அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த துறைக்கு வர வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல விரும்புவது, டெடிகேட்டடாக இருக்கணும், க்ரியேட்டிவாக சிந்திக்கணும். அவ்வப்போது, தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com