தொண்ணூறாவது வயதில்  தேசிய அங்கீகாரம்!

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் தொண்ணூறு வயதாகும் நடிகை செளகார் ஜானகி.
தொண்ணூறாவது வயதில்  தேசிய அங்கீகாரம்!

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் தொண்ணூறு வயதாகும் நடிகை செளகார் ஜானகி. அவர். எல்.வி.பிரசாத் இயக்கிய "சவுக்காரு' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக திரையுலகத்துக்கு அறிமுகமானவர். அப்போது அவருக்கு வயது 17. கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று சுமார் 400 படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் செளகார். ""பணத்துக்காக இல்லாவிட்டாலும், நடிப்பில் கிடைக்கும் ஆத்ம திருப்தி எனக்குப்பிடித்திருக்கிறது'' என்று சொல்லும் செளகார் ஜானகி தொடர்ந்து பேசுகிறார்:


""என்னுடைய தொண்ணூறாவது வயதில்தான் எனக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது நான் வணங்கும் பாபாவின் சித்தம் போலும்! எது எது எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது அது அவ்வப்போதுதானே நடக்கும்? பத்மஸ்ரீ விருது எனக்குக் கிடைத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதுவரை நான் எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும் விட பத்மஸ்ரீ விருதை நான் பெருமைக்குரியதாக கருதுகிறேன். காரணம் இந்த நாடு எனக்கு வழங்கி இருக்கும் அங்கீகாரமல்லவா இது? விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டும்; நான் விருதுகள் பின்னால் துரத்திக் கொண்டு போகக்கூடாது என்பது எனது பாலிசி. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் போன் செய்து, விருது பற்றி தகவல் சொல்லி, "ஏற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டபோது, "மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி' என்று கூறினேன். நேரில் டெல்லி சென்று விருதினை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை!

கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறபோது, உங்கள் மனத்திரையில் ஓடும் நினைவலைகள் எப்படி உள்ளன?

"நான் சினிமாவில் நடித்து பேரும், புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிக்க வரவில்லை. நடிப்பின் மூலமாக சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில்தான் நான் நடிக்க வந்தேன். திருமணம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத வயதில் எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கையில் குழந்தையோடு பி.என்.ரெட்டிகாருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, நடிக்க வாய்ப்பு கேட்டேன். செளகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 70 வருடங்கள் ஓடிவிட்டன. நானூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது; வழியில்தான் எத்தனை முட்களும், மலர்களும்! எல்லாவற்றையும் எதிர்கொண்டு, சமாளித்தேன். சினிமாவில் எனக்கென்று ஒரு தனி இடம் கிடைத்தது இறைவனின் அருள்தான்! நான் பிறந்த காலகட்டத்தில்தான் இந்திய சினிமா பேச ஆரம்பித்தது. இன்று உலகத் தரத்துக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது. நான் இரண்டுக்கும் பாலமாக இருக்கிறேன் என்பதில் நெகிழ்ச்சி அடைகிறேன்'

பெங்களூரு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

1999-இல் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன். அங்கே என் தங்கை கிருஷ்ணகுமாரிக்கு பெரிய எஸ்டேட் இருந்தது. அதன் உள்ளேயே மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி, எனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு செளகரியமாக வாழ்ந்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் தங்கை மறைந்துவிட்டார். நான் இப்போது அங்கே தனியாகத்தான் இருக்கிறேன். பெங்களூரு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. இயற்கையோடு இணைந்த நிதானமான, அமைதியான வாழ்க்கை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சமையல் உங்களுக்குப் பிடித்த ஹாபி ஆயிற்றே?

ஆமாம்! ஜெமினி டிவி யில் தொண்ணூறுகளில் "ருசி-அபிருசி' என்ற பெயரில் சமையல் நிகழ்ச்சியை நடத்தினேன். முப்பது எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது. சென்னையில் இருந்தபோது, "கோகனட் குரோவ்' என்ற பெயரில் சேத்துப்பட்டில் ஹாரிங்டன் ரோடில் ஒரு உணவகம் நடத்தி இருக்கிறேனே! அங்கே இருபது, முப்பது பேர்கள் வேலை செய்தார்கள். நான் தினமும் சுமார் இருபத்தைந்து ஐட்டங்கள் போல சமையல் செய்வேன். மெரீனா பீச்சுக்குப் போய் நானே சமையலுக்குத் தேவையான மீன்களை வாங்கிக்கொண்டு வருவேன். அந்த மூன்று வருடங்களும் வாழ்க்கையில் மறக்கமுடியாத காலம். இன்னமும் நானேதான் சமையல் செய்துகொள்கிறேன். இங்கே மட்டுமில்லை; அமெரிக்காவுக்குச் சென்றால் கூட அங்கேயும் நான்தான் சமையல். இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடும் உணவுகள் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை; எனவே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த விருது எனக்குக் கொடுக்கப்பட்ட விருது என நான் நினைக்கவில்லை. நான் அதிகமாக நடித்தது தமிழ்ப்படங்களில்தான் என்பதால், தமிழ் திரைப்பட உலகத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த விருதாகவே நான் நினைக்கிறேன். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இருக்கும் என் மகன் போன் செய்து, அம்மா! இங்கே கூகுளில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவோடு சேர்ந்து உங்களுக்கும் விருது கிடைத்திருப்பதுதான் டிரெண்டிங் நியூஸ்! என்று சொன்னான். என் மகிழ்ச்சி இரண்டு மடங்கானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com