சாதிக்கும் சகோதரிகள்...!

பெருங்காய விற்பனை சில வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மசாலா பொடிகள் விற்க நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்றன.
சாதிக்கும் சகோதரிகள்...!

பெருங்காய விற்பனை சில வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மசாலா பொடிகள் விற்க நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்றன. ஆனால் பெருங்காயம் விற்க ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அகில இந்திய அளவில் உள்ளன.

பெருங்காய விற்பனையை 2019இல் தொடங்கி ... இன்றைக்கு சமையல் தொடர்பான சுமார் 30 மசாலா, மாவு பொடி வகைகளை தயாரித்து விற்பனையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர் சகோதரிகளான வர்ஷா, விஸ்மயா, விருந்தா. தங்கள் வெற்றிக் கதையை வர்ஷா நம்முடன் பகிர்ந்தார்:

""பெருங்காயம் இல்லாமல் இந்திய சமையல் கிடையாது. அதுவும் சாம்பார், பெருங்காயம் இல்லாமல் மணக்காது. ருசிக்காது. பெருங்காயம் "ஃபெருலா' செடிகளின் வேரிலிருந்து எடுக்கப்படுகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் அதிகம் பெருங்காயச் செடி வளர்க்கப்படுகிறது. இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில் பெருங்காய விற்பனை அதிகம். தங்கைகளான விஸ்மயா, விருந்தா உடன் இணைந்து "3வீஸ்' இன்டர்நேஷனல் ) என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம்.

எங்கள் குடும்பம் வர்த்தகக் குடும்பம். அதனால் வர்த்தக யுக்தி எங்கள் ரத்தத்தில் இருக்கிறது. தவிர நான் வர்த்தக மேலாண்மையில் முதுகலை படித்தவள். சார்ட்டட் அக்கெளன்டன்சி படிக்கும் விஸ்மயா நிறுவனத்தின் கணக்குகளைக் கவனிக்க, பிபிஏ முடித்திருக்கும் விருந்தா எங்கள் தயாரிப்புகளை டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்துகிறார். எனது தங்கைகளின் படிப்பு வர்த்தகம் தொடர்புடையதாக இருப்பதால் வர்த்தகத்தில் நுழைந்ததும், தொடர்ந்து வர்த்தகம் நடத்துவதும் எளிதாக அமைந்துவிட்டது. நான் நிறுவனத்தின் அன்றாட வேலைகளைக் கவனிக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் 30 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

வங்கிக் கடன் உதவியுடன், கையிலிருந்து 2 லட்சம் முதல் போட்டு வர்த்தகத்தை ஆரம்பித்தோம். வர்த்தகம் தொடங்குமுன், கேரள அரசு வழங்கிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன். பிறகு, தமிழ்நாட்டில் இந்த வர்த்தகத்தில் இருக்கும் நிறுவனங்களுக்குச் சென்று அவர்கள் எப்படி சமையல் மசாலாக்கள், ரெடிமேட் உணவு வகைகளை உருவாக்கி, அவற்றின் விற்பனையை எப்படி கையாளுகிறார்கள் என்று அறிந்து வந்தேன்.

தொடக்கத்தில் எங்கள் பெருங்காயப் பொடி, சந்தையில் விற்கும் பெருங்காயத்தின் சுவையைவிட வேறு மாதிரி இருந்தது. அதனால் பொது மக்களுக்கு எங்களது தயாரிப்பில் திருப்தி வரவில்லை. பிறகு எங்கள் தயாரிப்பில் இருந்த குறைகளை சரி செய்தோம். கடைகளில் விற்பனை ஆவதைவிட, ஆன்லைனில் எங்கள் தயாரிப்புகள் அதிகம் விற்பனை ஆகின்றன.

எங்கள் பெருங்காயம், இதர பெருங்காயங்களைவிட விலை குறைவு. பெருங்காய, மசாலா பொடிவகைகளைத் தயாரிக்க 50 லட்சம் ரூபாய்க்கு மெஷின்களை வாங்கியுள்ளோம். கேரளஅரசின் பொது விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் "சப்ளை கோ' நிறுவனம் மூலம் எங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துகிறோம். பெருங்காய பொடியுடன், மஞ்சள், மல்லி, மிளகு, மற்றும் எல்லா மசாலா பொடிகளையும் தயாரிக்கிறோம். நல்ல லாபத்துடன், மாதம் 25 லட்சம் வருமானம் ஈட்ட முடிகிறது...'' என்கிறார் 26 வயதாகும் தொழில் முனைவர் வர்ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com