காணொலியில் அழ.வள்ளியப்பா!

காணொலியில் அழ.வள்ளியப்பா
காணொலியில் அழ.வள்ளியப்பா!


குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு இது. இளமை காலத்தில் சிறார்களுக்காக வெளிவந்து கொண்டிருந்த "சங்கு', "டமாரம்', "பாலர் மலர்', "பூஞ்சோலை' இதழ்களுக்கு சிறப்பு ஆசிரியராக வள்ளியப்பா பங்களிப்பு செய்து கொண்டு குழந்தை இலக்கியத்தின் ஜாம்பவானாக மாறினார். சிறார்களுக்கான கதை, கட்டுரை, நாடகம், நாவல் என எழுதி வந்தாலும் வள்ளியப்பா அதிகம் எழுத நினைத்தது கவிதைகள்தான்.

உலகிலேயே முதல் முறையாக குழந்தை எழுத்தாளர் சங்கம் அமைய பிள்ளையார் சுழி போட்டவரும் இவர்தான். குழந்தை எழுத்தாளர் சங்கம் அமைத்த காரணத்திற்காக அமெரிக்க சிறார் இலக்கிய பிதாமகர் மன்றோ லீஃப் வள்ளியப்பாவைப் பாராட்டியுள்ளார்.

வள்ளியப்பா மன்றோ லீஃப்பிற்கு அளித்த வரவேற்பு விழாவில் ராஜாஜியும் உடன் இருந்தார். ராஜாஜி, அண்ணா, ஆர். வெங்கடராமன், அன்பழகன், சி. சுப்ரமணியம், நெடுஞ்செழியன்,

ம.பொ.சி., கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, கவிஞர் கண்ணதாசன், கி.வா.ஜ, சுரதா, சோமலெ, நாரண துரைக்கண்ணன், சிலம்பொலி, அவ்வை நடராஜன், தி. கே. ஷண்முகம், போன்றோர் அந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது வள்ளியப்பாவிற்கு அன்று பெரியோர்களிடையே இருந்த மதிப்பு, முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.

வள்ளியப்பாவின் மகளான தேவி நாச்சியப்பன் தந்தை வழி பயணித்து சிறார் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்ததினால் ஒன்றிய அரசின், "பாலா சாகித்ய புரஸ்கார்' விருதும் வழங்கப்பட்டது.

வள்ளியப்பாவின் படைப்புகள் அனைத்தும் நூல் வடிவில் உள்ளன. இன்றைய தலைமுறை சிறார்களுக்கு காணொலிகள் மூலமாகத்தான் பாடங்கள், பயிற்சி வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. விதம் விதமான வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள், வரைபடங்கள் மூலமாக கற்றுக் கொடுப்பது எளிதாக சிறார்களின் மனதில் பதியும். இந்த யுக்தியைக் கணக்கில் எடுத்து வள்ளியப்பாவின் படைப்புகள் டிஜிட்டல் தளங்களில் காணொலிகளாக உலா வரத் தொடங்கியுள்ளன. இந்த மகத்தான பணியில் ஈடுபட்டிருப்பவர் சுகன்யா.

சுகன்யா வள்ளியப்பாவின் பேத்தியும் ஆவார். அதாவது வள்ளியப்பாவின் பேரனின் மனைவி. தனது டிஜிட்டல் முயற்சிகளைக் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

""குழந்தைக் கவிஞரின் பாடல்களை இந்த தலைமுறை சிறார்களுக்காகவும், அடுத்த தலைமுறைகளுக்காகவும் யூடியூபில் பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டவராயன்பட்டி. திருச்சியில் பொறியியல் பட்டம் முடித்து. சென்னையில் தனியார் நிறுவனத்தில் இரு ஆண்டுகள் மென்பொறியாளராகப் பணியாற்றினேன். கணவர் வருண், விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். வருண், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பேரன்.

மாறுகின்ற காலத்துக்கு ஏற்ப, குழந்தைக் கவிஞரின் பாடல்களை, அவரது குடும்பத்தார் குழந்தைகளைப் பாட வைத்து, சில ஆண்டுகளுக்கு முன், ஒளி குறுந்தகடாக வெளியிட்டனர். இப்போது குறுந்தகடு பயன்பாடு இல்லை. எல்லா துறைகளிலும் யூடியூப் ஆதிக்கம் பெருகிவிட்டது.

"லிங்க்கை அனுப்பு... பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லும் வழக்கமாகிவிட்டது. அதனால் அந்தப் பாடல்களை யூடியூபில் பதிவேற்றும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்.

குழந்தைகள் விரும்பும் குழந்தைக் கவிஞரின் பாடல்களை வெறும் ஆடியோவாகப் பதிவேற்றுவதைக் காட்டிலும் வீடியோவாகப் பதிவேற்றுவதே குழந்தைகளைக் கவரும் என்று முடிவுக்கு வந்தோம். கணவரிடமிருந்து அனிமேஷன் மற்றும் எடிட்டிங் வேலைகளைக் கற்றுக் கொண்டேன். எனது கணினி அறிவும் அனுபவமும் கைகொடுத்தது. உருவகக் காட்சிகளை உருவாக்கி பாடல்களை யூடியூபில் பதிவேற்றிவருகிறேன். வள்ளியப்பா எழுதிய கதைகளையும் அனிமேஷன் முறையில் பதிவேற்றி வருகிறேன். இந்த ஆண்டு, குழந்தைக் கவிஞரின் நூற்றாண்டு தொடங்கியுள்ளதால் இந்தப்பணிகள் கவிஞருக்கு அஞ்சலியாகவும் அமைந்துவிட்டது.

குழந்தைக் கவிஞரைப் பற்றிய நூறு தகவல்களைச் சேகரித்து , காரைக்குடி கவிமணி குழந்தைகள் சங்கக் குழந்தைகளைப் பேசச் செய்து, " குழந்தைக் கவிஞர் 100/100" என்ற காணொலியாக உருவாக்கினர். குழந்தைக் கவிஞரின் பிறப்பு, பின்புலம், சாதனைகளை இந்தக் காணொலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் காணொலியை எடிட்டிங் செய்து சுவாரஸ்யத்தைக் கூட்டி யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளேன். தீபாவளி, கார்த்திகை, கொடிநாள், புத்தாண்டு,பொங்கல் தொடர்பான குழந்தைக் கவிஞரின் பாடல்களைக் குழந்தைகள் பாட அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்துவருகிறேன்.

பிரபலங்களின் சிறு வயதில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளைக் குழந்தைக் கவிஞர் "சின்னஞ்சிறு வயதில்" என்ற நூலாக எழுதியுள்ளார். அந்நூலில் 38 அறிஞர்களின் இளமைப் பருவம் பற்றி 38 கட்டுரைகள் உள்ளன. அவற்றைக் குழந்தைகள் வாசிக்க அதையும் வெளியிட்டு வருகிறேன். அதே போன்று குழந்தைக் கவிஞரின் வெளிநாட்டு விடுகதைகள், ஈசாப் கதைப் பாடல்கள் போன்றவற்றையும் அனிமேஷனுடன் தொடர்ந்து வெளியாகின்றன. இந்தக் காணொலிகளை உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமூதாயத்தின் சிறார்கள் ஆர்வத்துடன் கண்டு வருகிறார்கள். வள்ளியப்பா படைப்புகளைக் கேட்டு தமிழையும் கற்று வருகிறார்கள்.

குழந்தைக் கவிஞரின் சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றையும் கவிஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் யூடியூபில் பதிவேற்றிவிடவேண்டும் என்பதுதான் லட்சியம். குழந்தை இலக்கியத்துடனும் குழந்தைகளுடனும் பயணிப்பது மகிழ்ச்சி தரும் அனுபவம்'' என்கிறார் சுகன்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com