மறுபிறவி வேண்டாம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம்.
மறுபிறவி வேண்டாம்


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். "வேட்டைக்கு வந்த சிங்கம்' என்ற பெயரில் அவரும் சிவாஜியும் இணைந்து காட்டில் வேட்டையாடிய அனுபவத்தைப் புத்தகமாக எழுதலாம் என்று ஏற்பாடு செய்து மரபின்மைந்தன் முத்தையா எழுத விஜயா பதிப்பகம் அதை வெளியிட்டது.

அது தொடர்பாக பேச, அவரது சேத்துமடை பண்ணை வீட்டுக்குச் சென்ற போது - அங்கிருந்த ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. முத்துமாணிக்கம் இளவயதில் கம்பீரமாக இருக்க அழகிய வண்ணத்தில் வரையப்பட்டது. "உஷா மங்கேஷ்கர் வரைந்த படம் இது. இதேபோல் கணேசனையும் அவர் வரைந்துள்ளார்' - என்று அவர் தெரிவித்தார். உடனே, அவரது சகோதரி லதா மங்கேஷ்கரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.

"அதற்கென்ன, சிவாஜி அமரரான பிறகுதொடர்ந்து நடந்து வரும் பிறந்த நாள் கூட்டத்திற்காக வருகிறார். புத்தக வெளியீட்டையும் அப்போதுவைத்துக் கொள்ளலாம். நிச்சயம் சந்திக்க ஏற்பாடுசெய்கிறேன்' என்றார். ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த நிகழ்வில் லதா மங்கேஷ்கர் கலந்து கொள்ளவில்லை. ஏமாற்றமே.

இருப்பினும், சில மாதங்கள் கழித்து மும்பை சென்று பெத்தர் ரோடு இல்லத்திலேயே சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட நாளன்று முத்துமாணிக்கம், எங்களது மும்பை அலுவலக நிர்வாகி சுரேஷ் நம்பியார் மற்றும் இரு நண்பர்களுடன் நான் சென்றேன். மிகவும்பிரசித்தி பெற்ற விலாசம் அல்லவா. முத்துமாணிக்கம் அண்ணனும், நண்பர்களும் வந்திருக்கிறார்கள்என்றதும் ராஜமரியாதையுடன் நாங்கள் அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வரவேற்பரையின் ஒரு பகுதியில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். நாங்கள் வரவேற்பரையின் சோபாக்களில் அமர்ந்தோம். அவருடைய சகோதரி மகன் யோகி எங்களுடன் அமர்ந்து ராம்குமார் தொலைபேசியில்பேசியதைத் தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து, லதா அம்மா கைகூப்பி நமஸ்கரித்தபடியே, புன்னகை மலர்ந்த முகத்துடன் மெதுவாக நடந்து வந்தார். முத்துமாணிக்கம் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்த நாங்கள் அவரது பாதங்களில் பணிந்து வணங்கி அமர்ந்தோம்.

மிகப் பிரபலமான தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்களையெல்லாம் காணும்போது, நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்மைத் தொற்றிக் கொள்ளும். சில சமயங்களில் உணர்ச்சிப் பிரவாகத்தில் உளறுபவர்களைக்கூட கண்டிருக்கின்றேன். இதோ, என்முன்னால் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி. உலகமெங்கும் ரசிகர்கள் அவர் குரலுக்கு அடிமை. மன்னர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள்,

மந்திரிகள், தொழிலதிபர்கள், மேல் தட்டிலிருந்து, அடித்தட்டு வரை அவரது பாடலை ரசிக்காத இந்தியர்கள் மிகக்குறைவு.

ஒரு கையொப்பத்துக்காகவும், அவரோடு ஒரே ஒரு புகைப்படம் எடுக்கவும் ஆசைப்படாத திரையுலகக் கலைஞர்களே இல்லை எனலாம். அப்படி இருக்கும்போது, பொதுஜனங்களுக்கு ஆசையில்லாமல் போகுமா? சிறிதுநேரம்
முத்துமாணிக்கம் அண்ணனோடு உரையாடிவிட்டு, அங்கே எங்களுக்கு முன் வந்து அமர்ந்திருந்தவர்களில் ஒருவரை அழைத்து, மதராஸில் இருந்து வந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள், என்று அவர்களிடம் அன்பாகக் கேட்டுக் கொண்டார். அந்த கொஞ்ச நேரம் இரண்டு மணி நேரமாக நீளுமென்று நாங்களும் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு நன்றாகவே ஹிந்தி தெரியும். அவரது பாடலில் முதன்முதலாக என்னை மயக்கிய "பீஸ் லால் பாத்' படத்திலுள்ள "கஹிதீப்சலே, கஹி தில்' - என்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடலிலிருந்து இன்றைய "ஹம் ஆப்கே ஹைன் கவுன்' படப் பாடல்களில் மிக முக்கியமான சிலவற்றைச் சொல்லி, என ரசிப்புத் தன்மையை எடுத்துரைத்தேன். எத்தனையோ லட்சம் பேர், அன்றாடம் அவரைப் பார்ப்பவர்கள், கூறிய அதே வார்த்தைகளை புகழ்ச்சியை மீண்டும் என் மூலமாகக் கேட்டும் அதே புன்னகையுடன் மெளனமாக அங்கீகரித்தார்.

நான் மிகவும் ரசித்த "மொகலே ஆஜம்' படத்திலுள்ள "மொஹ ப்பூத் இ ஜுட்டி கஹட்னி பே ரோயே' என்ற பாடலைக் குறிப்பிட்டுச் சொன்னபோது, புருவத்தை உயர்த்தி வியந்தார்கள். உரையாடலின் இடையே சுசீலா அம்மாவைப் பற்றியும், அவரது பாடல் திறமையைப் பற்றியும் மிக உயர்வாக சிலாகித்து, "அத்தான் என்னத்தான்; என்ற பாவமன்னிப்பு பாடலை இரண்டு வரிகள் பாடியபோது நாங்கள் அனைவரும் புளங்காகிதம் அடைந்தோம்.

"ஏக் துஜ்யே கேலியே' படமும், பாடல்களின் வெற்றியைப் பற்றியும் பேசிய போது, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைப் பற்றி மிகவும் அன்போடும் பெருமையோடும் பேசினார்.

கிரிக்கெட்டைப் பற்றி பேசியபோது, நான் இன்றைய சூதாட்டக் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி விமர்சித்தபோது, புன்னகையோடு சிரித்து, தனக்கு கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வத்தையும், விளையாட்டு வீரர்களைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்.

சிவாஜி மஹராஜ், லதா மங்கேஷ்கர், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் - ஒவ்வொரு மராத்தியனும் பெருமைப்படும் புகழ்பெற்ற பெருமக்கள் அல்லவா.

"மேடம், யூ ஆர் ஏ லெஜண்ட், உங்களை சந்தித்ததில்; எங்களுக்கு அளவிடமுடியாத பெருமை' என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே, "அப்படிச் சொல்லாதீர்கள், அண்ணன்தான் உண்மையான லெஜண்ட்' என்று நடிகர் திலகத்தைப்பற்றிப் பெருமிதமாகக் கூறினார்.

வாஞ்சையோடு சிவாஜி கணேசனை அண்ணன் என்று குறிப்பிட்டபோது மாபெரும் கலைஞர்களுக்குள் இருந்த ஓர் அற்புதமான உறவின் ஆழம் - ஒரு கணம் எங்களை நெகிழவைத்தது.

"பாசமலர்' படத்தை ஹிந்தியில் "ராக்கி' என்ற பெயரில் தயாரித்தபோது, நடந்த சில சம்பவங்களை முத்துமாணிக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

நாங்கள் சென்றிருந்த நேரம் மதிய உணவுக்குக் கொஞ்சம் முற்பட்ட நேரம். எங்கள் ஐந்து பேருக்கும் நிறைய சிற்றுண்டிகள் வரிசையாக அணிவகுத்து வந்தன. லதா அம்மையார், அவற்றில் சிலவற்றின் சிறப்பைச் சொல்லிச் சிபாரிசு செய்து, ஒன்றுக்கு இரண்டாக உண்ணவைத்தார்.

விடைபெறும் நேரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதிக்காகப் பாடிய சுப்ரபாதம் இசைத்தட்டு உரையில் கையொப்பமிட்டு எனக்கும் முத்துமாணிக்கம் அண்ணனுக்கும் ஆளுக்கு ஒன்று பரிசளித்தார். மிகவும் பொறுமையாக எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒருமுறை கோவைக்கு வந்து எங்களை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது, "உடல் நலம் நன்றாக இருந்தால் நிச்சயம் வருவேன்' என்று உறுதியளித்தார். ஏனோ அந்த நாள் வரவேயில்லை.

"தோளுக்குள் புவியாடுமே' என்ற கண்ணதாசன் காளிதாசனைப் பாடினான். ஆனால், "நாவுக்குள் புவியாடுமே' என்ற இந்த நாமகளின் திருமகளை நாம் பாடிக் கொண்டாட வேண்டாமா!

தமிழனாக இருந்தாலும், உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்த குயிலின் குரல், நெஞ்சத்தை நெகிழச் செய்து, வாழ்வின் எல்லாக் கணங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எனக்கு மறுபிறவி வேண்டாம் என்று ஒருமுறை "டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகைக்கு லதா பேட்டியளித்திருந்தார். அவருக்கு எதற்கு மறுபிறவி? ஏழேழு பிறவிகளுக்கும் அந்தக் குயிலின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்போது.

எத்தனையோ பிரபலங்களோடு புகைப்படம் எடுத்திருந்த போதிலும், எனது இல்லத்தைப் பெருமையுடன் அலங்கரிக்கும் ஒரே பிரபலத்தின் புகைப்படம் அந்த இசைக்குயிலோடு எடுத்துக் கொண்டதுதான். இது எனக்கு மட்டுமல்ல. என் தலைமுறைக்கும் பெருமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com