சிறுகதை: சுத்தம் சுந்தரம்!

ஆறாம் வகுப்பில்  உள்ளவர்கள் மட்டுமல்ல, அந்தப் பள்ளியின் அனேக மாணவர்களும் சுந்தரத்தை "சுத்தம் சுந்தரம்', "சுத்தம் சுந்தரம்' என்றே அழைப்பார்கள். ஆனால் சுந்தரம் அவர்களது கேலி பேச்சினை இம்மியும் பொருட்படு

ஆறாம் வகுப்பில்  உள்ளவர்கள் மட்டுமல்ல, அந்தப் பள்ளியின் அனேக மாணவர்களும் சுந்தரத்தை "சுத்தம் சுந்தரம்', "சுத்தம் சுந்தரம்' என்றே அழைப்பார்கள். ஆனால் சுந்தரம் அவர்களது கேலி பேச்சினை இம்மியும் பொருட்படுத்தாமல், எப்போதும் தன் இயல்பு மாறாமலே நடந்துகொண்டிருந்தான். ÷சரி, சுந்தரத்திற்கு அந்தப் பட்டப்பெயர் எப்படி வந்தது தெரியுமா?

÷சுந்தரம், வாரம் தவறாமல் நகங்களை வெட்டி விரல்களைச் சுத்தமாக வைத்திருப்பான். உணவு உண்பதற்கு முன், கட்டாயம் கைகளை நன்கு கழுவிக்கொண்டு உண்பான். கழிவறை சென்றுவிட்டு வரும்போதெல்லாம் சோப்பு போட்டு கைக்கழுவி கொள்வான். அதற்கென தன் புத்தகப் பையில், சிறிய சோப்பு ஒன்றினை டப்பாவில் போட்டு வைத்திருப்பான். பள்ளியின் நுழைவாயிலுக்கு அருகில் விற்கப்படும் தின்பண்டங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டான்.

÷உடற்கல்வி வகுப்பு முடிந்ததும், குழாயை நோக்கி நகர்ந்த சுந்தரத்தை ""டேய்... சுத்தம், உடற்பயிற்சி செய்தோம்; கொஞ்ச நேரம் கால்பந்து விளையாடினோம். அதுல என்னடா அழுக்கு வந்து ஒட்டிக்கிச்சு... கழுவப்போற?'' வகுப்புத் தோழன் பாபு கேட்டான்.

÷""மண்ணுல உருண்டோடிய பந்து தொட்டோம். புழுதியெல்லாம் கை காலுல பட்டுச்சு. கைகால்கள் கழுவிக்கிட்டு சுத்தமா இருக்கிறதுல எதுவும் தப்பில்லையே!''

சுந்தரத்தின் பதிலில் திருப்தியடையாத பாபு, ""டேய்... நாங்களெல்லாம் சாப்பிடப் போகும்போதே கை கழுவ மாட்டோம். இவனப் பாரேன்... கிளாசுக்கு போறதுக்குப் போய் கை கழுவறத... டேய் நீ திருந்தவே மாட்டடா'' சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.

÷முட்டாள்களின் கூட்டத்தில் அறிவாளிகள், கோமாளிகள் ஆக்கப்படுவார்கள். அப்படி ஆக்கப்படும்போது கூட புத்திசாலிகள் கவலைப்படமாட்டார்கள்.

÷பாபு, சுந்தரத்தின் வகுப்பறைத் தோழன் மட்டுமல்ல, அவனுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பனும் கூட. அதுமட்டுமல்ல. சுந்தரத்தைக் கிண்டல் செய்வதில் முதன்மையானவனும் அவனே. ஒருமுறை இப்படித்தான், பாபு சாலையில் விற்கும் அவித்த மரவள்ளிக் கிழங்கை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சுந்தரம், ""பாபு... ரோட்டுல  விக்கிறதெல்லாம் வாங்கிக் சாப்பிடக்கூடாது. உடம்புக்கு நல்லதல்ல'' என்றான்.

÷அதற்கு பாபு, ""டேய்... சுத்தம் வந்துட்டியா? நீ இதுல கிருமி, தூசி மண்ணுன்னு அடுக்கிட்டே போவ. ஏன்டா நான் கேட்கிறேன், மரவள்ளிக் கிழங்கே மண்ணுக்கு அடியிலேர்ந்துதான் வர்றது... அப்புறம், அத லேசா மண்ணோட சாப்பிட்டாதான் என்னங்கறேன்?'' என்றான். அங்கு கூடியிருந்த தோழர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

இதுபோல ஏதோ ஒரு வகையில் சுந்தரத்தை நோகடித்துக் கொண்டிருந்தான் பாபு. நாட்கள் உருண்டோடின.

÷அன்று காலை -

÷""டேய் சுந்தரம்..! ராத்திரியெல்லாம் பாபுவுக்கு ஒரே வாந்தியாம், பேதியாம். அதிகாலைல மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. உடல்நிலை ரொம்ப மோசமா இருக்குதுன்னு சொல்லிட்டு, அங்கேயே தங்க வச்சி, மருத்துவம் பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்.'' அம்மாவின் வார்த்தைகளில் அதிர்ந்து போனான் சுந்தரம்.

÷""அம்மா... அரையாண்டுத் தேர்வு வேறு நடந்துகிட்டு இருக்கு. இன்னும் இரண்டு பாடத்துக்கானத் தேர்வு இருக்கு. இப்போ போய் அவனுக்கு...'' கண்களில் நீர் கசியும் அளவிற்கு கவலைப்பட்டான் சுந்தரம்.

÷தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் அன்றுதான் பாபு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தான். சுந்தரம் ஓடிப்போய் அவனைப் பார்த்ததும், "ஓ'வென அழுதான் பாபு.

÷""சுந்தரம் என்னை மன்னிச்சிக்கோடா. உன்னை எப்படியெல்லாம் கிண்டல் செய்தேன்.  இப்போது பாரு அவஸ்தைப்படுறேன். பரீட்சைக்குக் கூட வரமுடியலேடா...'' கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தான் பாபு.

÷""சுகாதாரமற்ற தின்பண்டங்கள் மூலமா, ஏதோ ஒரு வகை கிருமியாலதான் எனக்கு  இந்த வாந்திபேதியெல்லாம்ன்னு டாக்டர் சொன்னாரு. அதுமட்டுமல்ல, கூடவே உடலைச் சுத்தமாக வச்சிருக்க நீ என்னென்னவெல்லாம் சொல்லுவியோ அதையெல்லாம் சொல்லி அனுப்பினாருடா.''

÷""பாபு... நீ இப்போவாவது உணர்ந்தியே அதுவே போதும். நடந்தது அரையாண்டு தேர்வுதான், கவலைப்படாதே. ஆண்டுத் தேர்வு பார்த்துக்கலாம். சரி, அதைவிடு, நான் மட்டும் உனக்கு ஏதாவது புதுசாவா சொன்னேன். வருமுன் காப்போம். நோய்க்கு இடம் கொடேல்ன்னு எல்லாமே நாமப் படிச்சதுதான். ஒன்ன படிச்சி, தேர்வு எழுதினா மட்டும் போதாது. அதன்படி நடக்கணும்.''

÷""எந்த ஒண்ணையும் முதல் செய்ய கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். தொடர்ச்சியா செய்துகிட்டே வந்தோம்னா அது பழக்கமாயிடும். அப்புறம் அதுவே நம்ம வழக்கமாகவும் மாறிடும்ன்னு எங்கப்பா சொல்வாரு. அது நூத்துக்கு நூறு உண்மை. ரெண்டு வேளை பல் துலக்குறது, நாள் தவறாம குளிக்கிறது, அவ்வப்போது கைகால்களைச் சுத்தமா கழுவிக்கிறது, வாராவாரம் நகங்களை வெட்டிடறது, தெருவோர கடைப் பண்டங்களைத் தவிர்ப்பதுன்னு, என்னுடைய செயல் எதுவும் எனக்குக் கஷ்டமா தெரியறதேயில்ல...'' சுந்தரம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,""பாபு...பாபு...இட்லி சாப்பிடுறியா செல்லம்'' என்ற குரல் உள்ளிருந்து வந்தது.

÷""கொண்டு வாம்மா...'' என்று சொல்லியபடியே கை கழுவிக் கொள்வதற்காக எழுந்துபோனான் பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com