ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியும். புவி ஈர்ப்பின்    விதிகளைக் கண்டுபிடித்தவர் யார்? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், குழந்தைகளைக் கண

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியும். புவி ஈர்ப்பின்    விதிகளைக் கண்டுபிடித்தவர் யார்? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், குழந்தைகளைக் கண்டுபிடித்தவர் யார் என்று நம்மால் சொல்ல முடியாது.

குழந்தைகளைக் கண்டுபிடிப்பது என்றால் என்ன? குழந்தைகளின் மனதை, அவர்களின் ஆற்றலை, நுண் உணர்வுகளை, அவர்களின் மன உலகை, அவர்களிடம் மறைந்திருக்கும் எல்லையற்ற கவிதைத் தன்மையை, அவர்களின் கற்பனைகளின் அற்புதங்களைக்      கண்டுபிடிப்பது. மேலும், குழந்தைகளின் அத்தனைச் சிறப்புகளை உணர்வதும்,         மற்றவர்களை உணரச் செய்வதும்தான் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது என்றும் சொல்லலாம்.

 அமெரிக்கப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், தத்துவ ஞானிகள் குழந்தைகள் குறித்து கவனம் கொள்ளத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில், வேலை செய்யும் குழந்தைகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன. அரசியல் நிபுணர்களும், சீர்திருத்தவாதிகளும் குழந்தைகளின் உடல் நலத்தைப் பற்றி அக்கறைகொள்ளத் தொடங்கினார்கள்.

தொழிற்சாலைகளில் குழந்தைகளை அதிக நேரம் வேலை செய்ய விடக்கூடாது என்றார்கள். குழந்தைகளுக்கு உடல் என்ற ஒன்று இருப்பதைப் போலவே, மனம் என்ற ஒன்றும் உண்டு என்று ஆசிரியர்கள் அறிந்தார்கள். அவர்களது மனங்களைப் பண்படுத்தவும், உறுதிப்படுத்தவும், விரிவுபடுத்தவும் என்ன செய்வது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

குழந்தைகள் மிகவும் அழகானவர்கள் என்று ஓவியர்கள் உணர்ந்தார்கள். எல்லோரும் குழந்தைகளின் தோற்றங்கள் தீட்டப்பட்ட ஓவியங்களை விரும்பினார்கள். கதை சொல்பவர்கள் குழந்தைகளைப் பற்றிய கதைகளை எழுதினார்கள், குழந்தைகள்            படிப்பதற்காகவும் கதைகள் எழுதினார்கள், நம் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனைப்போல!

   அவர் செய்தது என்ன? குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை       மற்றவர்கள் கண்டுபிடிக்கத் துணை செய்ததுதான்.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (1805 - 1875) டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். அங்குள்ள ஓடென்úஸ என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். அந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்தது. அங்கு சிவப்பு நிற உடையணிந்த படைவீரர்கள் இருந்தார்கள். ஒரு பெரிய மாதா கோவிலும் அங்கே இருந்தது. அதன் கோபுர மணிகள் நாள் முழுதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கணகணவென்று ஒலித்தன. ஒரு சிறிய குளமும் அதில் வெண்ணிற வாத்துக்களும் இருந்தன. ஆண்டர்சன் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது. அவரது பெற்றோர் பரம ஏழைகள். உணவுக்கே சிரமப்பட்டார்கள். ஆனால், "லிட்டில் ஹான்ஸ்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன் மகிழ்ச்சியாக இருந்தான்.

வீட்டிற்குப் பின்புறத்தில் ஒரு மிகச் சிறிய தோட்டம் இருந்தது. அதில் ஒரு சிறிய மரம் நின்றிருந்தது. ஆண்டர்சன் கோடை காலத்தில் அந்த மரத்தின் அடியில் அமர்ந்துகொள்வார். தான், மிகப் பெரிய ஒரு அடந்த காட்டில் இருப்பதாக அவர் அப்போது கற்பனை செய்து கொள்வார். அவரிடம் அப்போது ஒரு கத்தரிக்கோலும் காகிதமும் இருந்தன. காகிதத்தில் பொம்மைகளையும், அரசர்களையும், அரசிகளையும், படை வீரர்களையும், பல வகையான விலங்குகளையும் கத்தரித்து வைத்துக்கொண்டு, அவருக்கு மட்டுமான ஒரு தனி உலகத்தைக் கற்பனையில் உருவாக்கிக்கொள்வார்.

அங்கே ஒரு சிறிய நாடக மேடையையும் அமைத்தார். தாமே கற்பனை செய்து இயற்றிய நிறைய நாடகங்களை அந்த மேடையில் நடித்தார். அவரது தந்தை, வேலை இல்லாத நேரங்களில் சிறிய ஹான்ஸýக்குக் கதைகள் சொல்வார். அல்லது, அரபுக் கதைகளிலிருந்து   எதையாவது படித்துக் காட்டுவார். அவருடை அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. தன் மகனைக் கண்ணும் கருத்துமாகப் போற்றி வளர்த்தார்கள்.

 ஆண்டர்சனுக்குப் பதினான்கு வயதானபோது, டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹேகனுக்குச் சென்றார். அது மிகவும் அழகான நகரம். அங்கே நிஜமாகவே ராஜாக்களும், ராணிகளும், இளவரசர்களும் இருந்தார்கள். அங்கே, தான் ஒரு நடிகர்  ஆகப்போவதாகவும், ஒரு பாடகராக ஆகப்போவதாகவும், ஒரு ஆசிரியராக ஆகப்போவதாகவும் அவர் கனவுகண்டார். இவற்றைப் பற்றியெல்லாம் அவர் மிகவும் கற்பனை செய்தார்.

ஆனால் அவர் அவ்வளவு அழகாக இல்லை. அவர் எழுதி, உலகப் புகழ்   பெற்ற "அசிங்கமான வாத்துக்குஞ்சு' என்ற கதை, அவர் தன்னை அடிப்படையாக வைத்து எழுதிய கதை என்று சொல்லலாம். அவர் மிகவும் ஒல்லியாக, அழகற்றவராக இருந்ததால் பலர் அவரை வெறுத்தார்கள். ஆனால், அவரை அறிந்தவர்கள், அவர் பள்ளி சென்று     படிக்கவும், வேலை தேடிக்கொள்ளவும், நாடெங்கும் பயணம் செய்யவும் அவருக்கு உதவி செய்தார்கள்.

ஆயினும் அவர் மற்றவர்களைப்போல சாதாரணமாக இல்லை. விசித்திர குணம் உள்ளவராக இருந்தார். வயது வந்தால் அவரது விசித்திரமான போக்கு மாறிவிடும் என்றும், அப்போது அவர் மற்ற இளைஞர்களைப்போல ஒழுங்கானவராக மாறிவிடுவார் என்றும்   மற்றவர்கள் நம்பினார்கள்.

ஆனால், அவரிடம் இருந்த விசித்திரமான குணங்கள் மாறிவிடவில்லை. பிற்காலத்தில், அவர் மிகச் சிறந்த கதைகள் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவர் மன்னர்களோடும், இளவரசர்களோடும் உணவருந்தினார். எங்கும் வரவேற்கப்பட்டார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.  ஒரு காலத்தில் அசிங்கமான சிறுவன் என்று பலராலும் இகழப்பட்ட ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் மிகவும் அழகான கதைகள் எழுதி உலக வாசகர்கள் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானவரானார்.

அவர் குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் எவ்வளவு அற்புதமானவை தெரியுமா?

அந்தக் கதைகளில், வாழ்க்கையில் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதைப்போல கத்திகளும் முட்கரண்டிகளும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும்.

   நிலா, வானத்திலிருந்து குனிந்து, ஒரு வீட்டின் சிறிய அறையைச் சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்.

   ஒரு அல்லி மலர்,நாற்காலியில் அமர்ந்து பியானோ வாசிக்கும். ஊசியிலை மரங்கள், தாங்களும் கிறிஸ்துமஸின்போது அலங்கரிக்கப்படும் மரங்களாக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும்.

   ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் அதிசயமான கதை உலகத்தில், வீரம் மிகுந்த தகரச் சிப்பாய் ஒருவன், காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு அழகான பெண் பொம்மையை நேசிக்க முடியும்.    மக்களின் நிழல்கள் உயிர் பெற்று மக்களாக மாறி அரசகுமாரிகளை மணந்துகொள்ள முடியும்.

கட்டை விரல் அளவே உள்ள ஒருத்தி தூக்கணாங் குருவியின் முதுகில் அமர்ந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து போக முடியும். அந்தக் கதை உலகத்தில், நடக்க முடியாதது என்று ஒன்றுமே இருக்காது.

   குழந்தைகள் இவ்வாறு படைக்கும் உலகம் உண்மை உலகத்தைவிடவும் உண்மையான உலகமாக இருந்தது. அந்த உலகைத்தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கண்டுபிடித்தார். அல்லது படைத்தார். அவரது கதைகளில் வரும் சில சம்பவங்களைக் கேளுங்கள்... மிகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கும்...

   ஒரு சீன மன்னரின் உயிரைக் கொண்டு போவதற்காக வந்த எமன், மிகமிக இனிமையாகப் பாடும் ஒரு பறவையின் பாடலில் மயங்கி தான் வந்த காரியத்தை        மறந்துவிடுகிறான்.

தகரப் படைவீரன் ஒருவன் ஒரு வாய்க்காலில் பாய்கிறான், அங்கே அவன் ஒரு மீனால் விழுங்கப்பட்டு மீண்டும் தன் உறவினர்களிடம் வந்து சேர்கிறான்.

   தன் உடலில் பாதி மீனாகவும், பாதிப் பெண்ணாகவும் உள்ள ஒரு மச்சக்கன்னி, ஒரு இளவரசனின் மீது கொண்ட அன்பின் காரணத்தால் மனித உருவம் அடைகிறாள். (இந்தக் கதையின் நினைவாக கோப்பென்ஹேகன் துறைமுகத்தில் பாறையின் மீது மச்சக்கன்னி அமர்ந்திருக்கும் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது).

தீப்பெட்டி விற்கும் சிறுமி, குளிருக்காகத் தீக்குச்சியைப் பற்ற வைத்துக் குளிர்காய்கிறாள். அப்போது உறக்கத்தில் அவளுக்கு ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் அவள் தேவலோகத்திற்குச் செல்கிறாள்.   இனிய ஓசையை எழுப்பிய மணி ஒன்றின் ஒலியைத் தொடர்ந்து, உலகெங்கும் சுற்றியபின், ஒரு அரசகுமாரனும், ஏழைச் சிறுவனும் ஒரு உயரமான மலையின் மீதுள்ள புல் தரையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்கிறார்கள்.

கொஞ்சம்கூட அழகில்லாமல் பிறந்த வாத்துக் குஞ்சு கடைசியில் பேரழகு மிகுந்த அன்னமாக மாறிவிடுகிறது!

   பெரியவர்கள் காணும் உலகம்  அவர்களைப் பொறுத்தவரை எவ்வளவு உண்மையாக உள்ளதோ, அதைப்போலவே, குழந்தைகள் காணும் உலகமும் அவர்களைப் பொறுத்தவரை உண்மையானது என்று அனைவருக்கும் புரியவைத்தார் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.        

அவர் படைத்த உலகில் சிறுவர் சிறுமிகள் எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்களா?    இல்லை. தீப்பெட்டிகள் விற்கும் அந்த ஏழைச் சிறுமி குளிரால் விறைத்து இறந்துபோனாள். வீரம் மிகுந்த தகரப் படைவீரனின் வாழ்க்கை ஒரு உலைக்களத்தில் முடிந்துபோனது. பெருமையடித்துக்கொண்ட எம்பிராய்டரி ஊசி, துண்டு துண்டாக உடைந்துபோயிற்று. அந்த அப்பாவி மச்சக் கன்னி, தான் நேசித்த அரச குமாரனை இழந்தாள், நுரையாக   மாற்றப்பட்டாள்.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் உண்மையாகவே குழந்தைகளிடம் அன்புள்ளவர்.  எனவே, இந்த உலக வாழ்க்கை எப்போதும் இன்பமானது என்று சொல்லி குழந்தைகளை ஏமாற்ற அவர் விரும்பவில்லை. என்னவெல்லாம், எப்படியெல்லாம் நடந்தாலும் - கடைசியில் எல்லோரும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று சொல்லிக் கதையை   முடிக்க அவர் விரும்பவில்லை. குழந்தைகளிடம் உண்மையையே சொல்ல வேண்டும் என்று நினைத்து அப்படியே செய்துவந்தார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பே இதற்குக் காரணம்.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் சொன்னதெல்லாம், குழந்தைகள் கண்ட உண்மையைத்தான். குழந்தைகள் அறிந்த உலகத்தை அவர்கள் அறிந்த மொழியிலேயே சொன்னார். இதுதான் மற்ற அனைத்தையும்விட முக்கியமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com