அப்பா... அம்மா... தியாகம்!

அன்றைய செய்தித் தாளில் மூழ்கிப் போயிருந்த நமசிவாயம், திடீரென்று நிமிர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.  ""மணி ஒன்பது ஆயிட்டுதே... காலைக் கடன்களை முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பணு
அப்பா... அம்மா... தியாகம்!

அன்றைய செய்தித் தாளில் மூழ்கிப் போயிருந்த நமசிவாயம், திடீரென்று நிமிர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

 ""மணி ஒன்பது ஆயிட்டுதே... காலைக் கடன்களை முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பணுமே...'' என்று தனக்குள் புலம்பியவாறே, மேஜையடியில் நாற்காலியில் உட்கார்ந்து பள்ளிப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து வயது மகன் பாபுவை அவசரமாகக் கூப்பிட்டார். அவனிடம் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, ""பாபு, சீக்கிரமா போயி வழக்கமா வாங்குற பெட்டிக் கடையில, அப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிட்டு வரச் சொன்னாருன்னு சொல்லி வாங்கிட்டு ஓடி வா பார்க்கலாம்...'' என்றார்.

 அடுக்களையின் உள்ளிருந்து அங்கே வந்தார் பாபுவின் அம்மா மாலதி. ஆனாலும் ஒன்றும் பேசவில்லை.

 அப்பா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிச் சென்று தெருக் கோடியிலிருந்த பெட்டிக் கடையில் பணத்தைக் கொடுத்து சிகரெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்து தன் அப்பாவிடம் கொடுத்துவிட்டு அவசரமாக பாத்ரூமினுள் நுழைந்து குளிக்கத் துவங்கினான் பாபு.

 சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி வாயில் வைத்து நெருப்புக் குச்சியால் அதைப் பற்றவைத்துப் புகையை இழுத்து வெளியே விட்டார் நமசிவாயம்.

 ""என்னங்க... நான் சொல்றேன்னு கோவிச்சக் கூடாது...'' என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் மாலதி.

 ""என்ன மாலதி, அப்படிச் சொல்லிட்டே. இத்தனை நாள்ல நீ என்ன சொல்லி நான் கோவிச்சுக்கிட்டிருக்கேன்... இன்று வரைக்கும் நமக்குள்ளே அப்படியொரு சண்டை, சச்சரவு ஏற்பட்டதே இல்லையே! எதுவாயிருந்தாலும் சொல்லு... நமக்குள்ளே என்ன ஒளிவு மறைவு... ம்...'' என்று கேட்டவாறே மாலதியைப் புன்னகையுடன் பார்த்தார்.

 ""இப்ப நீங்க செய்யுறதுகூட தப்புத்தான்! எனக்குப் பிடிக்கலே...''

 ""என்ன மாலதி, இன்னைக்கு உன் பேச்சு ஒரு மாதிரியா இருக்கு? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லேன்...'' என்றார் நமசிவாயம்.

 ""நீங்க ஆபிசுக்குப் போயிடுறீங்க... என்னோட நிலைமை அப்படியில்லையே! வேலைக்குப் போற உங்களுக்கு சாப்பாடு தயார் பண்ணி பரிமாறி அனுப்பிவிட்டு அதுக்கு அப்புறம் நம்ம மகனுக்கும் மகளுக்கும் பரிமாறி, ரெண்டு பேருக்கும் டிபன் பாக்சிலே சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்து அனுப்பணும்...''

 ""சரி, இப்ப அதுக்கு என்ன? ஏன் இப்படி சலிச்சுக்குறே...''

 ""நான் சலிச்சுக்கலே! நமக்கு இருக்கிறது ஒரு பையன், பாபு, பத்து வயசு. ஒரு பொண்ணு சுமதி. வயசு பன்னிரண்டு. அவங்களுக்கும் ஊர் உலகம் தெரிய ஆரம்பிச்சுட்டுல்ல..?''

 ""ஆமாம், இப்ப யாரு இல்லைன்னு சொன்னா?''

 ""தினமும் பாபுகிட்டே பணம் கொடுத்து சிகரெட் வாங்கிட்டு வரச் சொல்றீங்க... இது நல்லாவா இருக்கு?'' என்றார் மாலதி.

 அவளை உற்றுப் பார்த்தார் நமசிவாயம்.

 ""என்ன மாலதி? இப்படிக் கேட்கிறே... நம்ம புள்ளைகிட்டதானே வேலை வாங்கணும்... அடுத்த வீட்டுப் பையன்கிட்டேயா வேலை வாங்க முடியும்?''

 ""நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுகிட்டுப் பேசுங்க... பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிக் கொடுக்கிறது வாத்தியாரோட வேலை... நல்ல பழக்க வழக்கங்களைப் புள்ளைங்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டியது பெற்றோருடைய கடமை. அதை மறந்துடாதீங்க. ஆறு மாசத்துக்கு முன்னாலே, ஒருநாள் மாலை நேரம்... வழக்கம்போல தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, சீப்பினாலே தலையைச் சுத்தமா சீவி, ஜடை பின்னிக்கிட்டு, பூவும் வெச்சுக்கிட்டு பூக்கூடையைத் தூக்கிக்கிட்டு கோவிலுக்குப் புறப்பட்டேன்...''

 ""நல்ல காரியம்தானே!''

 ""சொல்றதைக் கேளுங்க... நம்ம பொண்ணு சுமதி இருக்காளே... அன்னைக்கு நான் டிரஸ் பண்ணிக்கிட்டுத் தலை சீவி ஜடை போட்டுக்கிட்டு கோவிலுக்குப் புறப்பட்டேனா...''

 ""'ம்..."'

 ""சுமதி என்னைப் பார்த்துக் கேட்கிறா.. "அம்மா, நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே... இன்னும் ரெண்டு வருஷத்துலே நான் பெரியவளாயிடுவேன்... அப்ப நீ இந்த மாதிரி அலங்காரமெல்லாம் பண்ணிக்க முடியாது. நல்லா தெரிஞ்சுக்க...' என்று சொன்னாள். நான் திகைத்துப் போனேன். விடுவிடுவென்று ரூமுக்குள்ளே போயி தலை ஜடையைப் பிரிச்சிட்டு, கொண்டை போட்டுக்கிட்டு, பூ வச்சுக்கிட்டு, பட்டுப் புடவையை மாத்திக்கிட்டு, சாதாரண வாயல் புடவையைக் கட்டிக்கிட்டு, பூக்கூடையுடன் கோவிலுக்குப் புறப்பட்டேன்... போதுமா..?''

 ""இத்தனையையும் பார்த்துக்கிட்டு இருந்த உன் பொண்ணு சுமதி ஒண்ணும் சொல்லவில்லையா?''

 ""ஒண்ணும் சொல்லவில்லை!''

 மேலும் மாலதியே பேசினார்.

 ""நாம... நாம... நம்ம பிள்ளகளுக்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டும். அதை நான் செய்ய ஆரம்பிச்சுட்டேன்... நீங்களும் செய்யணும். அப்பா தினமும் சிகரெட் குடிக்கிறாரே? நாமளும் ஒருநாள்... ஒரே ஒரு நாள் ஒரு சிகரெட் குடிச்சா என்ன? என்ற எண்ணம் நம்ம புள்ளை பாபுவின் மனசிலே ஏற்படாதுங்கிறது என்னங்க நிச்சயம்?''

 ""சரி, மாலதி.... இதோ சிகரெட் பாக்கெட்டை ஜன்னல் வழியே வீசி எறிந்துவிட்டேன். இனி தொடவே மாட்டேன்... போதுமா?'' என்றார் நமசிவாயம்.

 ""அப்பாடா, இப்பத்தான் எனக்கு நிம்மதி..!'' என்றார் மாலதி.

 மறுநாள் காலை-

 நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த நமசிவாயத்தை நெருங்கிய அவர் மகன் பாபு, ""அப்பா, நேரமாச்சே... பணம் கொடுங்க... நான் போய் சிகரெட் வாங்கிட்டு வர்றேன்...'' என்றான்.

 பேப்பர் படிப்பதை நிறுத்திவிட்டு, ""பாபு, நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்திட்டேன். நீ படிப்பிலே ரொம்ப கவனமா இருக்கணும்... புரியுதா..!''

 என்று சொல்லிவிட்டு சிரித்தவாறே எழுந்து குளியல் அறையை நோக்கி நடந்தார் நமசிவாயம்.

 தன் அக்கா சுமதியிடம் சொன்னான் பாபு -

 ""சுமதி... உனக்குத் தெரியுமா? நம்ம அப்பா இனிமே சிகரெட் பிடிக்கமாட்டாராம்... எனக்கு சிகரெட் வாங்கிட்டு வர்ற வேலை மிச்சம்...''

 சுமதி சொன்னாள், ""பாபு... நாம ரெண்டு பேரும் படிப்பிலே கவனமா இருந்து, நெறைய மார்க் வாங்கி அப்பா, அம்மாவைத் திக்குமுக்காடச் செய்யணும்... என்ன சொல்றே..?''

 ""நான் ரெடி, இன்று இரவு ஒன்பது மணி வரை படிப்பது என்று தீர்மானித்துவிட்டேன்...'' என்றான் பாபு.

 ""நானும்தான்...'' என்றாள் சுமதி முறுவலித்தவாறே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com