ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

குளிரூட்டப்பட்ட அரங்கம். நீண்ட மேடையில் தொலைக்காட்சிப் பெட்டி, டெலஸ்கோப், வானொலி, தொலைபேசி, பலூன், மிதிவண்டி, அஞ்சலட்டை, பென்சிலின் மருந்து, ரயில்வே என்ஜின்... போன்ற பல பொருள்களின் புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரே நிமிடத்தில் 83 பெயர்கள்!

குளிரூட்டப்பட்ட அரங்கம். நீண்ட மேடையில் தொலைக்காட்சிப் பெட்டி, டெலஸ்கோப், வானொலி, தொலைபேசி, பலூன், மிதிவண்டி, அஞ்சலட்டை, பென்சிலின் மருந்து, ரயில்வே என்ஜின்... போன்ற பல பொருள்களின் புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ரெடி... ஒன்... டூ.. த்ரி... ஸ்டார்ட் என்றவுடன் ஒவ்வொரு படங்களையும் ஒரு குச்சியால் ஒரு பெண்மணி சுட்டிக்காட்ட... அந்தந்த பொருள்களைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரின் பெயர்களை முறையே...

ஜே.எல். பேர்ட், கலிலியோ, மார்கோனி, கிரஹாம் பெல், மாண்டிகுல்ஃபயர், மாக்மில்லன், ரைட் பிரதர்ஸ், ஜான் சார்ல்டன், அலெக்ஸôண்டர் ஃபிளமிங், ஜார்ஜ் ஸ்டீஃபன்சன்... என்று ஒன்றல்ல... இரண்டல்ல... 83 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரேநிமிடத்தில் மூச்சுவிடாமல் சொல்லிமுடிக்கிறான் மூன்று வயது ஏழுமாதங்களே நிரம்பிய ஒரு குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் தீரஜ்!

அரங்கத்தில் இருந்தவர்கள் மெய்மறந்து கைகளைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, வெட்கத்தில் சிரித்தபடி தன் அம்மாவிடம் ஒண்டிக் கொள்கிறான்.

ஒருநிமிடத்தில் மிக அதிகமாக 83 கண்டுபிடிப்புகளின் படங்களைப் பார்த்து கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லிய தீரஜின் சாதனை "இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்'ஸில் பதிவாகிறது.

விஷயம் இதோடு முடியவில்லை. முதல் சாதனையின் கைத்தட்டல் ஓசை முழுவதுமாக அடங்குவதற்குள்ளாகவே அடுத்த சாதனைக்குத் தயாராகிறான் தீரஜ். அவனுக்கு முன்னால் உலக வரைபடத்தின் பல பாகங்கள் துண்டு துண்டாக கொடுக்கப்படுகின்றன. "ஸ்டார்ட்' என்றவுடன் அவனுடைய பிஞ்சுக் கைகள் பரபரப்பாக ஒவ்வொரு துண்டையும் மிகச் சரியாக ஒன்றோடு ஒன்று பொருத்தத் தொடங்குகின்றன. மூன்று நிமிடம் 20 விநாடிகளில் உலக வரைபடம் நம் கண்முன் காட்சி தருகிறது. இந்தச் சாதனையின் மூலம் லக்னெüவைச் சேர்ந்த வியோம் அகுஜா (4 நிமிடங்கள் 49 விநாடிகளில்) செய்த சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைக்கிறான் தீரஜ். நிகழ்ச்சியை நடத்திய ரோட்டரி கிளப் ஆஃப் ராயப்பேட்டை நிர்வாகத்தினரின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.

இரண்டு சாதனைகளையும் விளையாட்டாக நிகழ்த்திவிட்டு, சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த தீரஜிடம், "கியூபைக் கண்டுபிடித்தது யார்?' என்றால், பட்டென்று ""எர்னோ ரூபிக் '' என்று அவனிடமிருந்து வருகிறது பதில்.

குழந்தை தீரஜின் மூலம் விளம்பர வெளிச்சத்துக்கு வந்திருக்கும் அவனுடைய பெற்றோர் - கல்யாண் குமார், லீனா வந்தினியிடம், "எப்படி குழந்தைக்கு இவ்வளவு பயிற்சி கொடுத்தீர்கள்?' என்றோம்.

""அவனுக்கு இரண்டு வயது 9 மாதங்கள் இருக்கும் போதே அவனுடைய பெயர் "இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்'ஸில், குறைந்த வயதில் அதிகமான நாடுகளின் தேசியக் கொடிகளை இனம் கண்டுபிடித்ததற்காக பதிவாகியுள்ளது. அப்போதே 215 நாட்டின் தேசியக் கொடிகளைக் கண்டு அந்த நாட்டின் பெயர்களை சரியாகச் சொன்னான்'' என்றார் தீரஜின் தந்தை கல்யாண் குமார்.

""அவனுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் போதே படங்கள் அவன் மனதில் பதியும் வேகமும் அதை மறுபடியும் அவன் தன்னுடைய கவனத்தில் கொண்டுவரும் வேகமும் எங்களை ஆச்சரியப்படுத்தியது. தொலைக்காட்சியில் விளம்பரங்களின் காட்சிகளை மிக உன்னிப்பாக கவனித்து அதற்கு அடுத்து என்ன காட்சி வரும் என்பதை தனது கைகளின் மூலம் வெளிப்படுத்துவான். இதற்கு அடுத்தகட்டமாகத்தான் படங்களை பார்த்து அதன் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒன்றுக்கு பலமுறை அவனுக்குச் சொல்வேன். "என்னைவிட வேகமா சொல்றியான்னு பார்க்கலாமா?'ன்னு... கேட்டுத்தான். அவனுடைய வேகத்தை அதிகப்படுத்துவேன். விளையாட்டின் மூலமாகவே அவனுக்கு கற்றுக் கொடுத்து விளையாட்டாகவே இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறான்'' என்றார் தீரஜின் தாய் லீனா வந்தினி.

தீரஜின் நுண்ணறிவுத் திறனைக் கண்டுபிடித்து அதற்கேற்ப பயிற்சியளித்தால் இன்னும் பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கும் இந்த விளையும் பயிர் என்பது மட்டும் நிச்சயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com