அரங்கம்: வல்லவனுக்கு வல்லவன்!

நீலன்: வாங்க சாப்பிடலாம்.நீலனின் நண்பர்: எங்கிட்டே காசு இல்லை...,நீங்க போங்க.
அரங்கம்: வல்லவனுக்கு வல்லவன்!

காட்சி - 1

இடம் - உணவகம்

மாந்தர் - நீலன், நீலனின் நண்பர், உணவக உரிமையாளர், மருத்துவர் புகழேந்தி, மற்றும் உணவகப் பணியாளர்.

நீலன்: வாங்க சாப்பிடலாம்.

நீலனின் நண்பர்: எங்கிட்டே காசு இல்லை...,நீங்க போங்க.

நீலன்: கவலைப்படாதீங்க...,இங்க காசே குடுக்காம ரெண்டு பேரும் சாப்பிடலாம்.

நீலனின் நண்பர்: அதெப்படி? கடையோட உரிமையாளர் உங்க நண்பரா?

நீலன்: அதெல்லாம் ஒண்ணுமில்லை..., என்னுடைய சாமர்த்தியத்தைப் பாருங்க.

(சர்வரை அழைத்து தேவையான உணவுவகைகளை கொண்டு வரச்செய்து சாப்பிடுகின்றனர். முடிக்கும் நேரத்தில்...)

நீலன்: ஐயோ! என்ன இது? சாம்பாரில் பூச்சி மிதக்குது?

சர்வர்: என்னது? பூச்சியா? நான் சுத்தமாதானே எடுத்து வந்தேன்? பூச்சி இருக்க வாய்ப்பே இல்லை..., சும்மா விளையாடாதீங்க.

நீலன்: அப்ப நான் பொய் சொல்றேனா? இதோ இங்க பாரு! (சிறு பூச்சி ஒன்றைத் தன் தட்டில் இருந்து எடுத்துக் காண்பித்து, சத்தமாக)..., நான் உங்களைச் சும்மா விடமாட்டேன்! போலீஸ்ல புகார் கொடுத்து உங்க கடையை மூடவைப்பேன்!

(சத்தம் கேட்டு அனைவரும் கூடி விடுகின்றனர்! கூட்டத்தில் மருத்துவர் புகழேந்தியும் ஒருவர். உணவகத்தின் உரிமையாளர் உடனே அங்கு வருகிறார்)

உரிமையாளர்: ஐயா! என்னை மன்னிச்சிடுங்க! ஏதோ தெரியாம நடந்து போச்சு! சாப்பிட்டதுக்கு நீங்க பணம் கூட குடுக்கவேணாம்!

(நீலன் பெருமிதத்தோடு தன் நண்பரோடு வெளியேறுகிறார்)

நீலனின் நண்பர்: (மனதிற்குள்) சீ! இதெல்லாம் ஒரு பொழப்பா?...இனிமே இவர் கூட சகவாசம் வெச்சுக்கக்கூடாது.

மருத்துவர் புகழேந்தி: (உணவக உரிமையாளரிடம்) ஐயா! அவர் சொல்றது பொய்ன்னு எல்லோருக்கும் தெரியும்! ஏன் அவர்கிட்டே காசு வாங்கலை?

உணவக உரிமையாளர்: என்ன செய்யறது சார்? அவர் ரொம்ப மோசமானவர்! காசு கேட்டா என் உணவகத்தைப்பற்றி ஊர்பூரா தப்புத்தப்பா சொல்லுவார்! அதான் நஷ்டமானாலும் பரவாயில்லேன்னு விட்டுட்டேன்!

(புகழேந்தி நீலனுக்குத் தக்க பாடம் கற்பிக்க நினைக்கிறார்.)

காட்சி - 2

இடம் - மருத்துவர் புகழேந்தியின்

மருத்துவ மனை.

மாந்தர் - நீலன், மற்றும் அவரது பணியாள் கதிரேசன், மருத்துவர் புகழேந்தி, அவரது உதவியாளர் கோபி.

(மருத்துவ மனை வாயிலில் ஒரு பலகை தொங்குகிறது. அதில், "இங்கு மருத்துவம் பார்க்க 5ரூ வசூலிக்கப்படும். நாங்கள் கொடுக்கும் மருந்தால் நோய் குணமாகவில்லை என்றால் 10ரூபாயாகப் பணம் திருப்பித் தரப்படும்!' என்று எழுதப்பட்டிருந்தது!)

நீலன்: (தனது பணியாள் கதிரேசனிடம்) இது என்னடா புதுவிதமான மருத்துவமனையா இருக்கு? இங்க இருக்கிற டாக்டர் என்ன முட்டாளா?

கதிரேசன்: ஐயோ! அப்படிச் சொல்லாதீங்க எஜமான்! இந்த டாக்டர் ரொம்ப கைராசிக்காரர். அவர் மருந்து கொடுத்தா எல்லா வியாதியும் குணமாகுதுன்னு எல்லாம் சொல்றாங்க..., இந்த அறிவிப்பு இவ்வளவு நாளா இங்க இல்லை! ஏதோ திடீர்னு நேத்தியிலேர்ந்துதான் இங்க இருக்கு! அதுதான் ஏன்னு எனக்கும் புரியலை!

நீலன்: ரொம்ப நல்லதாப்போச்சு! வா...,உள்ள போயி ஏதாவது சொல்லி 10ரூபாயைக் கறந்துகிட்டு வந்துடலாம்!

(கதிரேசனுடன் நீலன், மருத்துவர் புகழேந்தியின் அறைக்குள் நுழைகிறார்.)

புகழேந்தி: வாங்கய்யா! வணக்கம்! உங்களுக்கு என்ன பிரச்சினை?

நீலன்: ஐயா! எனக்கு திடீர்னு நாக்கு மரத்துப் போச்சு! நாக்குல சுவையே இல்லை! அதுக்கு ஏதாவது மருந்து குடுங்க!

புகழேந்தி: (நீலனைப் பரிசோதித்துவிட்டு அவருக்கு எந்தக் கோளாறும் இல்லை என்று அறிந்து கொள்கிறார். தன் உதவியாளரை அழைத்து) கோபி! அந்த நீல நிற பாட்டில்ல இருக்கிற மருந்தை எடுத்து ஒரு மூடி ஐயாவோட வாயில ஊத்துங்க!

(உதவியாளர் நீலனின் வாயில் மருந்தை ஊற்றுகிறார்).

நீலன்: ஐயோ! இது என்ன இவ்வளவு கசப்பு? வேப்பெண்ணையைப் போய் வாயிலே ஊத்திட்டீங்களா?

(கதிரேசன் தன் மேல் துண்டால் வாயைப் பொத்தியபடி தன் சிரிப்பை மறைத்துக் கொள்கிறார்.)

புகழேந்தி: ஐயா! பார்த்தீங்களா? மருந்து எவ்வளவு சீக்கிரமா வேலை செய்யுதுன்னு? மரத்துப் போயிருந்த உங்க நாக்குக்கு திரும்பவும் சுவை தெரியுது பாருங்க! வேணும்னா ஒரு பாட்டில் வாங்கி தினமும் குடிச்சுப் பாக்கறீங்களா?

நீலன்: ஐயோ! போதும்! போதும்! ஒரு மூடி மருந்தே என்னால சாப்பிட முடியலை! நான் வரேன்!

புகழேந்தி: ஃபீஸ் அஞ்சு ரூபாயைக் குடுக்காம போறீங்களே!

நீலன்: (மனதிற்குள்) இவன் கிட்டே பத்து ரூபாயைக் கறக்கலாம்னு பாத்தா இவன் என் கிட்டே அஞ்சு ரூபா வாங்கிட்டானே!

கதிரேசன்: எசமான்! நான் அப்பவே சொன்னேனே இவரு கெட்டிக்கார டாக்டர்னு!

நீலன்: இருக்கட்டும்டா! இவன்கிட்டேயிருந்து எப்படி இருபது ரூபாயா கறந்து காட்டறேன் பாரு!

கதிரேசன்: (தன் மனதிற்குள்) சே! இந்த ஆளைத் திருத்தவே முடியாது.

காட்சி - 3

இடம் - புகழேந்தி மருத்துவமனை

நேரம் - மாலை

மாந்தர்கள்: மருத்துவர் புகழேந்தி, நீலன் மற்றும் சில ஆட்கள்.

(மருத்துவர் புகழேந்தியை ஏமாற்றும் மற்றொரு திட்டத்துடன் சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வருகிறார் நீலன்.)

புகழேந்தி: வணக்கம் ஐயா! இப்ப என்ன பிரச்சினை?

நீலன்: நீங்க கொடுத்த மருந்தால எனக்கு நாக்குல சுவை தெரியுது! ஆனா அதோட பக்க விளைவா எனக்கு ஞாபகமறதி வந்துட்டுது! இப்ப என் வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியே எனக்கு மறந்து போச்சு! அதனாலதான் என் கூட இத்தனைபேர் வந்திருக்காங்க... அதனால எனக்கு நீங்கதான் வேற மருந்து குடுக்கணும்! இல்லாட்டி 20ரூபாய் குடுங்க!

புகழேந்தி: கவலைப்படாதீங்க! நான் நல்ல மருந்தா குடுக்கறேன்! கோபீ! அந்த நீலநிற பாட்டில்ல இருக்கிற மருந்தை எடுத்து ஐயாவோட வாயிலே ஒரு மூடி ஊத்துங்க!

நீலன்: என்னய்யா இது? நாக்கு மரத்துப் போச்சுன்னு சொன்னாலும் நீலநிற புட்டியில இருந்து மருந்து குடுக்கிறீங்க! ஞாபகமறதின்னாலும் அதே நீலநிற புட்டியிலேர்ந்து மருந்து குடுக்குறீங்க! எல்லாத்துக்கும் ஒரே மருந்துதானா? உங்களுக்கு மறந்து போச்சா? நாலு மாசம் முன்னால ஒருதடவை நான் வந்தபோது இதே மருந்தைத்தானே குடுத்தீங்க?

புகழேந்தி: (நீலனுடன் வந்திருப்பவர்களை நோக்கி) ஐயா! பார்த்தீங்களா? நான் குடுத்த மருந்தை சாப்பிட்டுட்டுத்தான் ஞாபகமறதின்னு பக்கவிளைவு ஏற்பட்டதுன்னு சொன்னார். ஆனா? இப்ப பாருங்க..., நாலு மாசம் முன்னாடி நான் குடுத்த மருந்கைகூட எப்படி சரியா சொல்றாரு பாருங்க! இப்ப இவருக்கு ஞாபக மறதியே இல்லை! இருந்தாலும் என்கிட்டே வந்துட்டதால இப்ப இவருதான் எனக்கு அஞ்சு ரூபா தரணும்!

(அவருடன் வந்த ஆட்கள் தமக்குள் சிரித்துக் கொள்கின்றனர்! நீலன் முகத்தில் ஈயாடவில்லை. இந்த முறையும் தன் திட்டம் பலிக்காததை எண்ணி அவமானம் அடைகிறார்.)

காட்சி - 4

இடம் - புகழேந்தி மருத்துவமனை.

நேரம் - இரவு

மாந்தர் - மருத்துவர் புகழேந்தி, நீலன் மற்றும் மாற்று உடையில் சில காவலர்கள்.

(எப்படியாவது மருத்துவர் புகழேந்தியை ஏமாற்றத் துடிக்கிறார் நீலன். மேலும் சில நாட்கள் கழித்து காவலர் சிலரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்)

நீலன்: (காவலர்களிடம்) ஐயா! இவர் ஒரு போலி மருத்துவர். இவரிடம் என் கண்பார்வை மங்கி வருவதாகக் கூறுவேன். உடனே அவர் ஏதாவது ஒரு மருந்தை என்னிடம் கொடுப்பார்! நீங்கள் உடனே அவரை கைது செய்யலாம். ஏனெனில் இவர் ஒரு பொது மருத்துவர். கண் நோய்களுக்கு இவர் மருந்து தரக்கூடாது. அப்படி அவர் கொடுத்தால் உண்மையான மருத்துவர் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்!

காவலர்கள்: அப்படியா? சரி! வாருங்கள்.., உள்ளே செல்வோம்.

புகழேந்தி: வாங்க ஐயா! எப்படி இருக்கீங்க? உடம்புக்கு என்ன பிரச்சினை?

நீலன்: ஐயா! கொஞ்ச நாளாகவே எனக்குக் கண்பார்வை மங்கிக்கிட்டே வருது! பகல்லயே கண் சுத்தமாகத் தெரியலை! போனதடவை வந்தபொழுது 20ரூ உங்ககிட்ட வாங்காம மறந்து போயிட்டேன். எனக்கு ஏதாவது மருந்து கொடுங்க! அதுல அந்தக் காசைக் கழிச்சிக்குறேன்!

புகழேந்தி: இந்தாங்கய்யா! உங்க இருபது ரூபா!

நீலன்: (தன்னையும் அறியாமல்) இதுல ஒரு பத்து ரூபாதானே இருக்கு? இன்னொரு பத்து ரூபா எங்கே?

புகழேந்தி: (காவலர்களிடம்) பார்த்தீங்களா? பகல்லயே கண்ணு தெரியாத இவரு இந்த ராத்திரி நேரத்துல எப்படி ஒரு பத்து ரூபா நோட்டைக் கண்டுபிடிச்சாரு? அவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்பி வந்த உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! நான் வேணும்னுதான் அவர்கிட்டே பத்து ரூபாயைக் குடுத்தேன்! அவர் என்கிட்ட பணம் குடுக்கலை! என்னை எப்படியாவது ஏமாத்திப் பணம் பறிக்க ரெண்டு தடவை வந்து முயற்சி பண்ணினார்! (நீலனை நோக்கி) மிஸ்டர் நீலன்! உங்க சாமர்த்தியத்தால் எல்லாரையும் நீங்க ஏமாத்தலாம்! ஆனால் என்னை ஏமாத்தமுடியாது!

காவலர்கள்: (நீலனை நோக்கி) இனிமே இப்படி எங்க நேரத்தை வீணாக்கினா நாங்க உங்களைத்தான் அரெஸ்ட் பண்ண வேண்டிவரும்! ஜாக்கிரதை!

(நீலனின் குனிந்த தலை பின்னர் நிமிரவே இல்லை!)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com