காட்டுக்குள்ளே பட்டிமன்றம்!

அந்தக் காட்டில் அன்று வனவிலங்குகள் விழா கொண்டாட்டம் களை கட்டியது!
காட்டுக்குள்ளே பட்டிமன்றம்!

அந்தக் காட்டில் அன்று வனவிலங்குகள் விழா கொண்டாட்டம் களை கட்டியது! குயில்கள் பாட்டுப் பாடியது! மயில்கள் தோகை விரித்து நடனமாடியது! யானைகள் காட்டில் ஆங்காங்கே மேடும் பள்ளமாய் இருந்த இடங்களை எல்லாம், மரங்களையும், தழைகளையும் இட்டு நிரப்பி சமன்படுத்தியது. கிளி அனைவரையும் அக்கா வாங்க, அண்ணா வாங்க என்று சொல்லி வரவேற்றது. மான்கள் வருபவர்களை அவரவர்கள் இடத்தில் அமர செய்தது. குரங்குகள் கொண்டு வந்து தந்த தோரணங்களை ஒட்டசிவிங்கி மரத்துக்கு மரம் கட்டியது. காட்டில் இவ்வாறாக ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் தங்கள் பங்குக்கு வேலைகள் செய்து கொண்டிருந்தன. காடே விழாக் கோலம் பூண்டிருந்தது.

மாலை அங்கு பட்டிமன்றம்!

பட்டிமன்றத்தின் தலைப்பு, "காடுகள் அழிவதற்குக் காரணம் மனிதர்களா? அறிவியல் வளர்ச்சியா?' என்பது. நடுவராக சிங்கமும், "மனிதர்களே' என்ற தலைப்பில் வாதாட புலி, யானை, சிறுத்தையும், "அறிவியல் வளர்ச்சியே' என்ற தலைப்பில் வாதாட பசு, மான், முயல் ஆகியவையும் அமர்ந்திருந்தன. சிங்கம் தன் இருக்கையில் வந்து அமர்ந்து பட்டிமன்றத்தைத் துவக்கி வைத்தது,

""அன்பார்ந்த நண்பர்களே, ஆருயிர் தோழர்களே, இன்று நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வனவிலங்குகள் விழா கொண்டாடுகிறோம்! அதன் ஒரு பகுதியாக இப்போது பட்டிமன்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. நரன் உங்களை எல்லாம் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல உயிரினங்களின் தாயகம் காடு. இந்தக் காடு தான் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு காற்றை சுத்தம் செய்கிறது.

முன்பு 50 காடுகள் இருந்த இடத்தில் இப்போ 30 காடுகள் தான் இருக்கின்றன. மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் அழிந்து வருகிறது. அழிவின் விளிம்பில் பூமி நிற்கிறது. திக்குத் தெரியாமல் நாம் நிற்கிறோம். எனவே, "காடுகள் அழிவதற்குக் காரணம் மனிதர்களே' என்ற தலைப்பில் வாதாட புலியார், யானையார், சிறுத்தையார் ஆகியோரும், "அறிவியல் வளர்ச்சியே' என்ற தலைப்பில் வாதாட பசு, மான், முயல் ஆகியோரும் இங்கே வீற்றிருக்கின்றனர்......

முதலில் "மனிதர்களே' என்ற தலைப்பில் வாதாட புலியை அழைக்கிறேன்'' என்றது சிங்கம்.

புலி உறுமியப்படியே பேசும் மேடை அருகே வந்தது. ''அனைவருக்கும், வணக்கம், மனிதர்கள் அவர்கள் வாழ நம்மை அழிக்கிறார்கள். நமக்கு எல்லாம் வீடு, காடுதான், நகர விரிவாக்கம் என்ற பேரிலே இந்த மனுசங்க காட்டை எல்லாம் நாடாக்கறாங்க''.

உடனே சிங்கம், ""ஐயா புலியாரே, அவங்க இடம் பத்தலைனா என்ன பண்ணுவாங்க, உங்களைப் பாத்தாலும் பயப்படறாங்க'' என்றது.

""அவங்க வாழணும் என்பதற்காக நம்மை அழிக்கலாமா இப்போ அழிஞ்சிக்கிட்டு வர இனத்தில நாங்கதான் முதல்ல இருக்றோம். வனவிலங்குகள் அழிவதற்கு காரணம் இந்த மனிதர்கள் தான்'' என்று சொல்லி அமர்ந்தது புலி.

""அடுத்து நம்ம சாதுவான பசுவை பேச அழைக்கிறேன்'' என்றது சிங்கம்.

"" ஐயா, புலியார் ஏதோ வெறுப்புல சொல்றாருன்னு நினைக்கிறேன். காடுகள் அழிவதற்கு அறிவியல் வளர்ச்சி தான் காரணம். தொழில் முன்னேற்றம், தொழில் புரட்சி அடையனும்னா காடுகள் தான் முக்கிய இலக்கு. நான் கூட ஒரு காலத்தில் நகரத்திலே சுதந்திரமா சுத்தி திரிஞ்சேன். என்ன பண்றது, என்னையும் நகரத்தை விட்டே துரத்திட்டு, கறந்த பாலை கீழே கொட்டறாங்க. தாவரங்களைத் தின்னும் என்னைப் போன்ற விலங்குகளுக்கு உண்ண தாவரங்கள் எங்கும் கிடைப்பதில்லை. இந்த அறிவியல் வளர்ச்சியினாலே வாகனங்கள் எல்லாம் பெருகிடுச்சி, சாலைகள் எல்லாம் குறுகிடுச்சி. அங்கே நாம நடுவிலே போன விபத்து தான் நடக்கும். ஒரே களோபரம் தான் ஆவுது'' என்றது பசு.

""ஐயா, பசு, நீங்க சொல்றதிலேயும் நியாயம் இருக்கு அறிவியல் வளர்ச்சி இல்லேன்னா நாடு எப்படி முன்னேறும், நாடு எப்போ வல்லரசு ஆவும்'' என்றது சிங்கம். பசு சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தது.

""வாங்க, பேசுங்க'' என்றபடி யானையை பேச அழைத்தது சிங்கம்.

""நாங்கள் மரம் மற்றும் தாவரங்களைத் தான் உண்ணுவோம். எங்களுக்கு உணவு ஒரு நாளைக்கு 16 மணி நேரமும், ஒரு நாளைக்கு 140 முதல் 270 கிலோ வரை உணவும்,

350 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுது. எங்களுக்கு தேவையான உணவை இந்தக் காடு தான் கொடுக்கும். அந்தக் காலத்துல ஒரு மரம் வெட்டினா, ஆயிரம் மரங்களை நடுவாங்க. ஆனால், இப்போ இந்த மனுசங்க காட்டை அழிச்சி வீட்டை கட்றாங்க. ஆனா,நாங்க அவங்க குடியிருப்பிலே வந்துட்டோமுன்னு ரகளை பண்றாங்க. அவங்க எங்க வீட்டுக்குள்ள வந்துட்டாங்களா, நாங்கள் அவங்க வீட்டுக்குள்ள போயிட்டமா...''

""உங்களை மனுசங்க துரத்தராங்களா, இல்ல நீங்க மனுசங்களை துரத்திறீங்களான்னு இப்போ ஒண்ணுமே தெரியல'' என்றது சிங்கம்.

""தலைவர் அவர்களே, முன்னாடி காட்டை சுற்றி நீர்நிலைகள் எல்லாம் இருக்கும். ஆனா, இப்போ தண்ணியை காணவே முடியல. தண்ணியைத் தேடி தான் நாங்க ஓடறோம். தண்ணீர் குடிக்கலைன்னா நாங்க செத்துடுவோம்''

""அப்படி எல்லாம் சொல்லாதீங்க நீங்க இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்னு இந்த மனுசங்க சொல்றாங்க'' என்று சிரித்தப்படியே சொன்னது சிங்கம்.

அடுத்து, மான் வந்தது. ""விவசாயத்திலே அறிவியலை புகுத்துனாங்க, பாவம் பயிர்கள் தங்கள் சுயரூபத்தை இழந்திடுச்சி. உணவுக்காக நம்மையும் கொல்றாங்க. அவங்க பேசிக்கிட்டே இருக்கணுங்கிறதுக்காக, என்னவோ மின்னலை கோபுரம் கட்டறாங்க, பாவம் எங்க தலைமேலே வந்து உட்கார்ந்து பேசும் இந்த சிட்டு குருவிகள் போன்ற பறவைகளை காண முடியறதே இல்லை. எங்களுக்கு மின்னலை கோபுரம் கண்டாலே மூச்சு முட்ற மாதிரி இருக்கு. நாம அழியறதுக்குக் காரணம் அறிவியல் வளர்ச்சித்தான்னு ஆணி அடிச்சாப் போலே சொல்றேன்'' என்றது மான்.

""ஐயா, சிறுத்தையாரே உங்க பங்குக்கு என்ன சொல்லப் போறிங்க. வாங்க, பேசுங்க'' என்றது சிங்கம்.

அது கோபமாக மைக்கைப் பிடித்தது. ""இந்த மான், பசு சொல்றதைக் கேட்டா எனக்கு சிரிப்பு தான் வருது. அறிவியல் வளர்ச்சியாம், என்ன பெரிய அறிவியல் வளர்ச்சி. அறிவியலை கண்டுப் பிடிச்சதே மனுசங்க தானே. மனுசங்க இல்லைன்னா, நாம நிம்மதியா இருப்போம். நம்ம குடியிருப்பு பகுதியிலே அவங்க புகுந்துட்டு, நாம குடியிருப்பு பகுதியிலே புகுந்துட்டு வீணா பழியை நம்ம மேல போடறாங்க. ஆனால், நாம இல்லைன்னா அவங்களாலே ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது.'' என்று கோபமாக பேசி விட்டு இருக்கையில் சென்று அமர்ந்தது.

அடுத்து முயல் பேசியது. ""இந்த காடும், விலங்குகளும் அழிவதற்கு காரணம், இந்த அறிவியல் வளர்ச்சி தான். அறிவியல் வளர்ச்சி இயற்கையை எதிர்த்து நிக்குது. நீங்கக் கூட பாருங்க, ஒரு நாள் உங்கக் கிட்ட ஒரு கிணறை காமிச்சேன். நீங்களும் உங்க முகத்தைப் பார்த்து சிரிச்சீங்க.''

""நீ தானா அவன்?'' என்று சிரித்தப்படியே கேட்டது சிங்கம்.

""ஐயா, இப்போ மோட்டார் போட்டு தண்ணியை எல்லாம் உறிஞ்சி எடுத்தடறாங்க. அறிவியல் வளர்ச்சின்ற பேரிலே கிணறுகளை எல்லாம் மூடிட்டு, இப்போ கிணறுகளை காணோம்னு புலம்பறாங்க'' என்றது முயல்.

இறுதியாக சிங்கம் பேசியது. ""இங்க பேசினவங்க எல்லாம் நல்லா பேசினீங்க. நாம எங்கும் புறக்கணிக்கப்படுகிறோம். மனிதன் இயற்கையை விட்டு நீண்ட நெடுந்தூரம் விலகி வந்துட்டான். நீர்நிலைகள் வற்றியதால்தான் பாவம் விலங்குகளும், பறவைகளும் தண்ணியைத் தேடி அலைறாங்க. மனிதனின் பேராசை தான் காடுகள் அழிவுக்கு காரணம். அறிவியல் வளர்ச்சி என்கிற பேரில் அழியா அழகுடைய இயற்கையை,மற்றும் சுற்றுச்சூழலை சிதைத்து வரும் மனிதகுலம் என்று திருந்துமோ அன்று தான் காட்டின் வளம் பெருகும்'' என்று கூறி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து சிங்கம்.

பட்டிமன்றத்தை கண்டு, கேட்டு, களித்த மற்ற விலங்குகளும் பறவைகளும் கைக் கொட்டி ஆர்ப்பரித்து கலைந்து சென்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com