கதைப்பாடல்: மனம் திருந்திய முத்தன்

முத்தன் என்னும் ஒரு சிறுவன் முரட்டுத் தனமாய் வளர்ந்திட்டான்!
கதைப்பாடல்: மனம் திருந்திய முத்தன்

முத்தன் என்னும் ஒரு சிறுவன்

 முரட்டுத் தனமாய் வளர்ந்திட்டான்!

நித்தம் பறவை விலங்குகளை

 கல்லால் அடித்து வதைத்திட்டான்!

கண்ணில் கண்ட மிருகங்களை

 கல்லால் அடித்து மகிழ்ந்திடுவான்!

விண்ணில் பறக்கும் பறவைகளை

 வில்லால் அடித்து வீழ்த்திடுவான்!

கல்லால் வில்லால் அடிபட்ட

 காகம், குருவி, கோழிகளும்;

அல்லல் பட்டு தான்கத்தும்

  அதனைப் பார்த்து பூரிப்பான்!

அல்லல் கொடுக்கும் அவன் செயலை

  அறிந்தார் பெற்றோர் கண்டித்தார்;

ஆனால் அவனோ திருந்தவில்லை } அவன்

 செய்யும் செயலை மாற்றவில்லை!

கிட்டா னோடு சேர்ந்தொருநாள்

 கிரிக்கெட் ஆடச் சென்றிட்டான்; பந்து

பட்ட தவனின் நெற்றியிலே

  பதைத்து வலியால் துடித்திட்டான்!

வலியால் துடித்த முத்தனுக்கு

 வந்தது பழைய நினைவுகளே!

"மலிவாய் எண்ணி உயிர்களையே

  மார்க்கம் இன்றி வதைத்திட்டேன்'

என்றே எண்ணி மனம் வருந்தி

 "இனிமேல் உயிர்வதை செய்யேனே'

அன்பே என்றன் பாதையென

  அவனின் உள்ளம் மாறியது!

அன்பே மனிதன் வாழ்வுக்கு

 ஆதர வாகும் பூமியிலே;

என்பதை அறிந்தால் தாழ்வின்றி

  எவரும் உயரலாம் வாழ்வினிலே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com