மலைக்கோயில்

படிகள்!""ஹரீஷ்! மணி எட்டாகப் போகுது. இனி எப்போ படிக்கப்போறே? களைப்பா இருக்குதுன்னு போய் தூங்கப் போறே''
மலைக்கோயில்

படிகள்!""ஹரீஷ்! மணி எட்டாகப் போகுது. இனி எப்போ படிக்கப்போறே? களைப்பா இருக்குதுன்னு போய் தூங்கப் போறே''

 பேரன் ஹரீஷை அவன் அம்மா திட்டுவது ஹரீஷின் தாத்தா சுப்பையாவின் காதில் விழுந்தது. அம்மா சொல்வது நல்லதுக்குத்தான் என்பதை ஹரீஷ் ஏன் புரிந்துகொள்ள மாட்டேங்கிறான்?...யோசித்துப் பார்த்தார் ஹரீஷின் தாத்தா.

 போன வருடமும் இப்படித்தான் ஆயிற்று. அன்றன்று நடத்தும் பாடங்களைப் படிக்காமல், கடைசியில் ஆண்டுத்தேர்வுக்கு மொத்தப் பாடத்தையும் படிக்கத் திணறிக் கொண்டிருந்தான். அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் திருந்துவதாயில்லை.

 தாத்தாவுக்கு அவனை நினைத்து மனதில் சிறிது கவலை வந்தது. அவர் மனதில் திடீரென்று ஒரு திட்டம் உதித்தது!

 மறுநாள் மாலை. வழக்கம்போல் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தான் ஹரீஷ்.

""ஹரீஷ்! மலைக் கோயிலுக்குப் போகலாம் வரிறியா?''என்று கேட்டார் தாத்தா.

மலைக்கோவிலுக்குச் செல்ல அவனுக்கும் வெகுநாளாக ஆசை! தாத்தா அழைத்ததும், உற்சாகமாக,""சரி தாத்தா! இதோ, இப்பவே கிளம்பிடுறேன்'' என்றான்.

 நேராக குளியலறைக்குச் சென்று கை,கால் முகத்தை அலம்பிவிட்டு, உடை மாற்றிக் கொண்டு தயாராகிவிட்டான்.

 இருவரும் புறப்பட்டார்கள். சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கியிருந்தது. ஊருக்கு வெளியே வந்ததும் மலைக்கோயில் கண்ணுக்குத் தெரிந்தது.

""அதோ! மலைக்கோயில் தெரியுது பார்!'' தாத்தா சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான் ஹரீஷ். மலை உச்சியில் கோபுரமும் சிவப்புக் கோடிட்ட வெள்ளை மதில் சுவரும் தெரிந்தது. கோயில் மிக அழகாக இருந்தது! இவ்வளவு உச்சியில் நாம் ஏற முடியுமா? அவனுக்கு சந்தேகமாக இருந்தது!

  ""தாத்தா! நாம் மலைக்கோயிலுக்கு நடந்தா போகப்போகிறோம்?''

""ஆமா...,ஏன் கேட்குறே?''

""மலை இவ்வளவு உயரமா இருக்குதே?...என்னால அவ்வளவு உயரத்துக்கு நடக்க முடியுமா?''

""நிச்சயமா முடியும். என்னோட வா!'' என்று ஹரீஷை அழைத்துக் கொண்டு, மலையின் மீது ஏறிச் செல்லும் படிக்கட்டுகளைக் காட்டினார் தாத்தா.

 ""தாத்தாவுக்கு வயசாயிடுச்சு இல்லியா? அதுனால நீதான் என்னைக் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போகணும்.'' என்று தாத்தா சொன்னவுடன், உற்சாகமாக தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டான் ஹரீஷ். இருவரும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார்கள்.

 கொஞ்சம் படிகளில் ஏறியதும் அங்கிருந்த மண்டபம் ஒன்றில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்தார்கள். பிறகு மீண்டும் படிக்கட்டுகளில் ஏறினார்கள். இப்படி சற்று இளைப்பாறி இளைப்பாறி மலைக்கோயிலுக்கு வந்துவிட்டார்கள்.

 தாத்தா ஹரீஷை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இருவரும் தெய்வங்களை வணங்கிவிட்டு கோயிலில் தரப்பட்ட சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்துடன் கோயில் வெளிப் பிரகாரத்திற்கு வந்தார்கள். வெளிப்பிரகாரத்தில் ஒரு மதிற்சுவரில் இருவரும் அமர்ந்தார்கள். பிரசாதத்தைச் சாப்பிட்டபடியே தாத்தா, ஹரீஷுக்கு அங்கிருந்தபடியே நகரத்தைக் காட்டினார்.

 மலையுச்சியிலிருந்து பார்க்கும்போது நகரத்தில் ஆங்காங்கே வண்ண விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. மாலை நேர மங்கலான வெளிச்சத்தில் சின்னஞ்சிறு புள்ளிகளாய்த் தெரிந்த ஹரீஷின் பள்ளிக்கூடம், அவனுடைய அப்பா பணிபுரியும் அலுவலகம் உள்ளிட்ட பலவற்றை தாத்தா ஹரீஷூக்கு கட்டிக் காட்டினார். ஹரீஷ் அவற்றையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 ""ஹரீஷ்...,நகரம் எவ்வளவு பாதாளத்தில் இருக்கிறது பார்த்தாயா?''

 ""ஆமா, தாத்தா! நாம ரொம்ப உயரத்தில் இருக்கிறோம். அப்படித்தானே?''

 ""ஆமா...,நாம மலையடிவாரத்துல இருக்கும்போது இந்த மலை எவ்வளவு உயரமா தெரிந்தது. இந்த மலையின் உச்சிக்கு நம்மால போகமுடியுமான்னு உனக்கு சந்தேகமும் வந்தது இல்லையா?''

 ""ஆமாம் தாத்தா''

 ""ஆனா இவ்வளவு எளிதா எப்படி மலையுச்சிக்கு வந்தோம்? யோசித்துப் பார். நாம முன்னூறு படிக்கட்டுகளில் ஏறி வந்திருக்கோம்..., சின்னச் சின்ன படிக்கட்டுல ஏறி வந்தோம். சின்னச்சின்ன படிக்கட்டுகளில் ஏறி வருவது எவ்வளவு எளிதா இருந்தது!

கடைசியிலே மலையுச்சிக்கு வந்துட்டோம். ஒரேடியா தரையிலயிருந்து மலையுச்சிக்குத் தாவி வர முடியுமா?''

 ""அதெப்படி தாத்தா முடியும்?''

 ""ஆமா! முடியாது. அதுமாதிரிதான் உன்னோட பள்ளிக்கூட பாடங்களும்! ஒவ்வொரு நாளும் நடத்துற பாடங்களை நீ அன்றன்றேபடிச்சு முடிச்சுடணும். அப்படி செய்வது சின்ன படிக்கட்டுல ஏறி வருவது மாதிரி! ஒவ்வொரு நாளும் அப்படிப் படிச்சுக்கிட்டே வந்தா கடைசியிலே மொத்த பாடத்தையும் எந்த சிரமும் இல்லாம படிச்சு முடிச்சுடலாம்! அதை விட்டுட்டு பாடங்களை சேர்த்து வெச்சுட்டு தேர்வு வந்த பிறகு ஒரே மூச்சா படிக்கலாம்னு நிளைச்சா அது முடியுமா?''

 ""ஹரீஷுக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது. தாத்தா தொடர்ந்து பேசினார்.

 ""போன வருஷம் வரை நீ தினமும் பாடங்களைப் படிக்காம சேர்த்து வெச்சுட்டு தேர்வுக்கு முந்தைய நாள் படிச்சுட்டு இருந்தே! உனக்கும் கஷ்டம்! நீ படிச்சுப் பாஸாகணும்னு அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கவலை! "படி' என்ற சொல்லில் "படிக்கட்டு' என்ற பொருள் மட்டுமல்ல...,"பாடங்களை அன்றே படி' என்ற அறிவுரையும் இருக்கிறது! புரியுதா?''

 ""புரிஞ்சுடிச்சு தாத்தா! இனிமே பள்ளிக்கூடத்தில் அன்றன்று நடத்தப்படும் பாடங்களை அன்றைய தினமே படிச்சு முடிச்சுடுவேன். படிப்பு மட்டுமில்லை...,எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்து முடிச்சுடுவேன். என்னை மலைக்கோயிலுக்கு அழைத்து வந்து நல்லதொரு பாடத்தைப் புகட்டினீர்கள்''

 மகிழ்ச்சியாகச் சொன்ன ஹரீஷை அணைத்து முத்தமிட்டார் தாத்தா!

 ""வா! வீட்டுக்குப் போகலாம்!'' என்றபடி ஹரீஷின் கைகளைப் பிடித்துக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com