ஞானப் பறவை!

ஒரு கிராமத்தில் சோமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும்
ஞானப் பறவை!

ஒரு கிராமத்தில் சோமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி! வேலைக்குச் செல்ல அவனுக்கு விருப்பமே கிடயாது! கிராமத்தில் உள்ளோர் அனைவரும் பரபரப்பாக வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக் கொண்டிருப்பான். உழைப்பின்றி சுகமாக வாழ்வதே குறியாக இருந்தான்.

 ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்தபோது ஒரு சிறிய அழகான பறவையைக் கண்டான்! மிகவும் அழகாக இருந்த அந்தப் பறவையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்தான். எனவே அந்தப் பறவையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

 அழகிய அந்த சிறிய பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம்போல் அவனுக்குத் தூக்கம் வந்தது! அயர்ந்து தூங்கினான். விடிந்து விட்டது!

 கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

""இது எப்படி? நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்...!''

""நீ எடுத்துவந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது...,ஏதாவது சாப்பிடக் கொடு'' என்றது பறவை.

பறவை பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் அவன்! அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். ஆனால் பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டம் பசிக்கிறது என்றது. சோமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். பறவை,""இன்னும் கொடு ..., இன்னும் கொடு'' என்றது. சோமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லை. பயந்துபோன அவன் வீட்டைவிட்டு வெளியே ஒடினான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு திரும்பிய அவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது!

 ஆம்! அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! வெளியில் குளிர் தாங்க முடியவில்லை. போர்வையோ பாயோ அவனால் வீட்டிற்குள் சென்று எடுத்து வர முடியவில்லை! அதான் பறவை வீட்டை அடைத்துக் கொண்டிருக்கிறதே! தன் தலையை மட்டும் பறவை வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.

 சோமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் அயர்வும் ஏற்பட்டது. வெளியில் குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிலும் உணவில்லை. கையிலும் காசு இல்லை. அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் சோமுவைப் பார்த்து, ""தம்பீ...,மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன்'' என்றார்.

 ""எனக்கு உணவு கிடைக்குமா?''

""வாங்கித் தருகிறேன்''என்றார் பெரியவர்.

 பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித் தந்த உணவு அமிர்தமாக இருந்தது. வயிறார உண்டான். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 ஆனால் பறவையை நினைத்த அவனுக்கு மிகவும் பயமாயிருந்தது. இன்று அதை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.

 வீட்டிற்குச் சென்று பறவையைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம்! பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது!

""எப்படி இது''

""உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான்'' என்றது.

மறுநாள் அவன் வேலை தேடிச் சென்றான். அவனுக்குக் கூலி வேலை கிடைத்தது. செய்தான். நன்றாகப் பசித்தது! கிடைத்த கூலியில் வயிறார உண்டான். பறவையை நினைத்தான். அது பசியோடு இருக்குமே என்று சிறிது உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

பறவைக்கு வாங்கிய உணவுடன் வீட்டிற்குத் திரும்பினான்! பறவையைப் பார்த்த அவனுக்கு பேராச்சரியமாக இருந்தது! தான் முதலில் கொண்டுவந்தபோது இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்!

""இது எப்படி?''என்று பறவையைக் கேட்டான்.

""உன் சோம்பேறித்தனம்தான் எனக்குள் நிரம்பி இருந்தது. நீ உழைக்க ஆரம்பித்தவுடன் அது குறைய ஆரம்பித்தது. இப்போது நீ தினமும் உழைக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டாய்! நானும் முன்பு போலவே ஆகிவிட்டேன். நான் வந்த வேலை முடிந்தது.''

""எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு''

""என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன்'' என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

 அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சோமுவிற்கு ஏனோ கண்களில் நீர் பனித்தது! இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com