முன்னேற ஏழ்மை தடை அல்ல..!

நாம் அன்றாடம் கடக்கும் சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்ற, எத்தனை பேர் முயற்சி எடுத்திருப்போம். பெரும்பாலானோர் கண்டும் காணாமல்
முன்னேற ஏழ்மை தடை அல்ல..!

நாம் அன்றாடம் கடக்கும் சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்ற, எத்தனை பேர் முயற்சி எடுத்திருப்போம். பெரும்பாலானோர் கண்டும் காணாமல் தான் செல்வோம். ஆனால், இதற்குத் தீர்வு காண ஓர் அரசுப் பள்ளி மாணவர், அறிவியல் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

 அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அரசுப் பள்ளி மாணவர் இதற்கு ஒரு கருவியை கண்டறிந்துள்ளார் என்பதுதான் சிறப்பம்சம். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற புதுமைக் கண்டுபிடிப்பு கண்காட்சியில் இந்தக் கருவி காட்சிப்படுத்தப்பட்டது  தனிச்சிறப்பாகும்.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பலர் தங்களின் புதுமை கண்டுபிடிப்புகளை, குடியரசுத் தலைவர் மாளிகையில் காட்சிப்படுத்தி இருந்தனர். அதில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர் எஸ்.விஷ்வாவும் (12) ஒருவர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் "கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய கருவி'யை தன் படைப்பாக காட்சிப்படுத்தி இருந்தார்.

ஏழ்மைக் குடும்பம்: இந்தக் கண்காட்சியை காண வெளிநாட்டினர், அறிவியலாளர்கள் என ஏராளமான பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். தன் கருவியின் பயன்பாடு, செயல்முறை என அனைத்து விஷயங்களையும் தங்குத் தடையின்றி பார்வையாளர்களுக்கு விளக்கிய விஷ்வாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 விஷ்வாவின் தந்தை பெயர் சிவசாமி. தாய் சுந்தரம். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். குடும்பத்தை வறுமை பின்தொடர்ந்தாலும், சிறுவயது முதலே விஷ்வாவுக்கு அறிவியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதைப் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் கண்டறிந்து, விஷ்வாவுக்கு ஊக்கம் அளிக்கத் தொடங்கினர். இதற்குப் பலனாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும் வழங்கும் "இன்ஸ்பையர்' விருதுக்கு விஷ்வா தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதுடன் ஊக்கத்தொகையாக ரூ.5,000 அளிக்கப்பட்டது.

 இந்த ஊக்கத்தொகையின் உதவியுடன் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் இந்தக் கருவியைக் கண்டறிந்துள்ளார். இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த சாதனத்தை அங்கீகரித்து, மத்திய அரசின் "தேசியக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை' சார்பில் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச் 12-19 வரை நடைபெற்ற "இரண்டாவது தேசிய புதுமைக் கண்டுபிடிப்பு கண்காட்சியில்' காட்சிப்படுத்த அனுமதி அளித்ததை விஷ்வா பெரும் கெளரவமாகக் கருதுகிறார்.

 தன் எதிர்கால லட்சியங்கள், அறிவியல் மீதான தன் தாகம் குறித்து "தினமணி'யிடம் விஷ்வா பகிர்ந்து கொண்டது.

குடியரசுத் தலைவர் மாளிகை கண்காட்சியில் பங்கேற்றது பற்றி?

 என் அறிவியல் ஆர்வத்தை இந்தக் கண்காட்சி மேலும் அதிகரித்துள்ளது. என் திறமையைக் கண்டறிந்து, இந்தக் கண்காட்சியில் பங்கேற்க அனுமதித்ததற்கு நன்றி. தில்லிக்கு வருவது இதுவே முதல்முறை. "இன்ஸ்பையர்' விருது வாங்க தில்லி வர எண்ணிய போது, சென்னையில் பெய்த கன மழையின் காரணமாக, என்னால் தில்லிக்கு வர இயலாமல் போனது. ஆனால், இப்போது குடியரசுத் தலைவர் மாளிகையின் உள்ளேயே என் படைப்பை காட்சிப்படுத்த அனுமதித்துள்ளதைப் பெருமையாக கருதுகிறேன்.

 குப்பையை இயற்கை எரிவாயுவாக மாற்றும் தானியங்கி கருவியை உருவாக்கும் எண்ணம் எப்படி தோன்றியது?

 பள்ளிக்குச் செல்லும்போது தெருவோரங்களில் குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், அவை நிரம்பி சாலை முழுவதும் குப்பைகள் தேங்கி இருக்கும். இதனால், தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டதைக் கண்டேன். அப்போதுதான் குப்பைத் தொட்டியை குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் இயற்கை எரிவாயுவை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 தானியங்கி கருவி எவ்வாறு செயல்படுகிறது?

 குப்பைத் தொட்டியில் குப்பைகளைக் கொட்டும் போது குறிப்பிட்ட அளவை எட்டியதும், அதில் பொருத்தப்பட்டுள்ள "சென்சார்' மூலம் சிக்னல்கள் செல்லும். அந்த சிக்னல்களின் உதவியுடன், குப்பைத்தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள தகட்டின் மூலம் வெப்பத்தை உண்டாக்கி, குப்பையை எரிவாயுவாக மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இதை  சோதனை அடிப்படையில் சிறிய அளவில் தான் உருவாக்கி உள்ளேன். இதை மேலும் மேம்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற எண்ணியுள்ளேன்.

 இந்தக் கருவியை உருவாக்க எவ்வளவு செலவானது?

 2014-ஆம் ஆண்டு "இன்ஸ்பையர்' விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்காக எனக்கு மத்திய அரசு சார்பில் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அந்தத் தொகையை பயன்படுத்தியே, இந்தக் கருவியை நான் உருவாக்கினேன். இந்தக் கருவியை உருவாக்க என் ஆசிரியர்களும், உறவினர்களும் உறுதுணையாக இருந்தனர்.

 வருங்காலத்தில் என்னவாக விருப்பம்?

 எனக்கு அறிவியல் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். எனவே, அறிவியலில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, இயற்கையை பாதுகாக்கும் வகையில் சமூகத்துக்கு என் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்.

 விஷ்வா போன்ற மாணவர்கள், வாழ்வில் முன்னேற ஏழ்மை ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்த வண்ணம் இருந்து வருகின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com