கதைப்பாடல்: அன்பே உயிர் கொடுக்கும்!

அன்புச் செல்வன் அருளாளன்அவனுக்கு மூன்று கூட்டாளி.
கதைப்பாடல்: அன்பே உயிர் கொடுக்கும்!

அன்புச் செல்வன் அருளாளன்

அவனுக்கு மூன்று கூட்டாளி.

இன்பக் கிளியும் எழில்நாயும்

இருக்கும் பூனையும் அவனோடு.

உயிரை வைத்தான் மூன்றின்மேல்

உண்டால் உண்பான் நாள்தோறும்

பயிரை வளர்க்கும் உழவன்போல்

பார்த்து வளர்த்தான் மூன்றினையும்.

ஒன்றாய் மூன்றும் உணவுண்ணும்

ஒன்றிற் கொன்று உணவூட்டும்

ஒன்றே மூன்றின் உயிராகும்

ஒருதாய் பிள்ளை போல்மூன்றும்.

"எழிலா' என்பான் நாய்விரையும்

"இன்பே' என்பான் கிளிவருமே.

"அழகு' என்பான் பூனைவரும்

அவனின் நிழலே இம்மூன்றும்

படுத்தே அவனும் தூங்குகையில்

பாதம் படுக்கும் நாய்க்குட்டி

படுக்கும் பூனை பக்கத்தில்

கிளியும் படுக்கும் தலையோரம்.

பொழுது விடிந்து பார்க்கையிலே

பூனை நாயின் மேல்தூங்கும்.

அழகுக் கிளியும் பூனையினை

அணைத்துத் தூங்கும் சிறகாலே.

அன்பின் உச்சம் இம்மூன்றும்

அன்புச் செல்வன் அரவணைப்பில்

இன்பக் குழந்தை போல்மூன்றும்

இதயம் நுழையும் எப்போதும்.

ஒருநாள் பள்ளி விடுமுறையில்

உறங்கும் பூனை தனைவிட்டே

அருமைக் கிளி, நாய் தம்மோடு

அன்பும் சென்றான் வயலுக்கு.

சென்ற சிறிது நேரத்தில்

தீயும் சூழ்ந்தது அவன்வீட்டை.

கண்டு அன்பு வருமுன்னே

காற்றாய் வந்தன கிளிநாயும்.

உள்ளே பூனை அலறியது

ஊரார் கூடி விட்டார்கள்

""நல்ல நண்பன் பூனையினை

நாமும் இழத்தல் கூடாது''

என்றே பாய்ந்த நாயின்மேல்

எரியும் பாய்ந்தது என்றாலும்

கண்டு பூனைக் குட்டியினைக்

கவ்வி வந்தது நாய்க்குட்டி.

பூனை உயிரோ தப்பியது

நாய்க்கு அங்கங்கே காயம்

வானும் மண்ணும் நிகரில்லை.

வையம் போற்றும் அன்பிற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com