ஹலோ பாட்டியம்மா..!

சற்று நேரத்தில், "ஹரிணி... மாணிக்கம்...'' என்று அழைத்தபடியே மாமா வந்தார். குழந்தைகள் ஆசையாக ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டன.
ஹலோ பாட்டியம்மா..!

பாட்டி: " இன்று, காலையிலிருந்தே ஹரிணியும், மாணிக்கமும் ரொம்ப உற்சாகமாக இருக்காங்க. ஊரிலிருந்து மாமாவும் அத்தையும் வர்றாங்க என்பதால் ஏற்பட்ட குதூகலம் ஒருபக்கம். அதுவும் டாக்டர் மாமாவாச்சே...! நிறைய விஷயங்கள் பேசலாம்...! ஹரிணியும், மாணிக்கமும் வளர்க்கும் செல்லப்பிராணிகளை மாமாவிடம் காட்டி மகிழலாம்... என்ற ஆசைகள் இன்னொரு பக்கம் சேர்ந்துகொள்ள வீடு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

சற்று நேரத்தில், "ஹரிணி... மாணிக்கம்...'' என்று அழைத்தபடியே மாமா வந்தார். குழந்தைகள் ஆசையாக ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டன. மாமாவுக்கு ஹரிணிதான் காபியை கொண்டு வந்து கொடுத்தாள்.

ஒரு வாய் காபி குடித்ததும் மாமாவின் முகம் மாறியது..! "ஏன் மாமா... காபி நல்லா இல்லையா?" என்று கேட்டாள் ஹரிணி. "நல்ல காபிதான். ஆனா... சர்க்கரை ரொம்ப ரொம்ப அதிகம்! காபிக்கே இவ்வளவு சர்க்கரைன்னா பாயசத்துக்கு எவ்வளவு போடுவா உங்க அம்மா?'' என்று விளையாட்டாக கேட்டார் மாமா.

" மாமா... அம்மாவுக்கு உங்க மேல இருக்கிற அளவுக்கு அதிகமான அன்பினால... கூடுதலா ரெண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டிருப்பாங்க..!'' என்றாள் ஹரிணி. உடனே மாணிக்கம், "அன்பு அதிகம்ன்னு சொல்லி சாப்பிடுற உணவிலே கூடுதலா ரெண்டு ஸ்பூன் உப்பை போட்டா சாப்பிட முடியுமா?'' என்று கேட்டான். அதற்கு மாமா அவனைத் தட்டிக் கொடுத்து, ""மாணிக்கம் அருமையாகப் பேசறான்!'' என்று பாராட்டினார்.

அதற்குள் ஹரிணியின் அம்மா சர்க்கரை குறைவாகப் போட்டு காபி எடுத்து வந்து, தன் அண்ணனிடம் கொடுத்துவிட்டு, " ஏன் அண்ணே... உங்களுக்கும் சர்க்கரையா?'' என்றாள். அதற்கு அவர், "ஆமாம்மா...! பார்டர்ல இருக்கு..! பார்டர்ன்னாலே எச்சரிக்கையாத்தானே இருக்கணும்; அது இந்தியா}சீனா பார்டராக இருந்தாலும் சரி, சர்க்கரை அளவு பார்டராக இருந்தாலும் சரி... கொஞ்சம் அசந்தாலும் ஆபத்துதான்...!'' என்று சிரித்தபடியே சொன்னார்.

"மாமா... நீங்க முன்பெல்லாம் வரும்போது, நிறைய இனிப்பு சாப்பிடுவீங்களே..! இப்போ ஏன் இப்படி மாறிட்டீங்க?'' என்று ஹரிணி கேட்டாள். அதற்கு அவர், "நல்ல கேள்வி... நான் இதுக்கு பதில் சொல்லணும்னா... உன்னோட விளையாட்டு பொம்மைகளை எடுத்து வா..!'' என்றார்.

அதற்கு ஹரிணி... சிரித்தபடி...''என்ன மாமா... நான் என்ன சின்னக்குழந்தையா? இன்னும் பொம்மை வைச்சி விளையாடறதுக்கு...! நான் வளர்ந்துட்டேன் மாமா.!'' என்றாள்.

"கரெக்ட்..! விளையாட்டுகள் மாறுகிற மாதிரி... உணவுகளும் மாறுது...! நீ வளர்ற மாதிரியே... எனக்கும் வயது அதிகமாகுது... சிசுவா இருக்கும்போது பால் மட்டும் குடிக்கிறோம். நாம வளர வளர.... வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் உடம்புக்குத் தேவைப்படுது. பிடித்ததை எல்லாம் சாப்பிடுற பருவம் உங்களோட பருவம்..! பிடித்ததை எல்லாம் தவிர்க்கிற பருவம் எங்களோட பருவம். அதனாலதான் பிடித்தமான இனிப்பை தள்ளி வைச்சிருக்கேன்...! தேவையான அளவு சர்க்கரை என் உடம்புல இருக்கு. அது போதும். 45 வயசுக்கு மேல சர்க்கரை அளவு அதிகமானா... அது மத்த நோய்களுக்கு வாசலைத் திறந்து விட்டுடும். அதனால... சர்க்கரை நோய் வராம பாத்துக்கிட்டா... பல வியாதிகள் நம்மள அண்டாது..! சுகர் இஸ் எ கேட் ஆப் டிஸீஸ்! நான் வாங்கி வந்த இனிப்புகள்... அம்மா எனக்காக செஞ்சு வைச்சிருக்கிற இனிப்புகள்... எல்லாமே உங்களுக்குத்தான்... இன்னும் 35 வருஷம் கவலை இல்லாம இனிப்பு சாப்பிடுங்க' என்றார் மாமா'.

"இந்த இனிப்பை 35 வருஷம் வைச்சிருந்து சாப்பிட்டா கெட்டுப் போகாதா மாமா'?' என்று மாணிக்கம் கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள்!''
(உலக சர்க்கரை நோய் தினம் } ஜூன்.27)
-ரவிவர்மன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com