அரங்கம்: பலே பாலாஜி!

(பாலாஜி அந்த ஊர் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.    பாலாஜிக்கு அப்பா இல்லை.    அவனுடைய அம்மா அந்த ஊரில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அரங்கம்: பலே பாலாஜி!

காட்சி - 1,   
இடம்  -  பாலாஜியின் வீடு,....
 மாந்தர்  -  அம்மா மற்றும் மகன் பாலாஜி.

(பாலாஜி அந்த ஊர் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.    பாலாஜிக்கு அப்பா இல்லை.    அவனுடைய அம்மா அந்த ஊரில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.    ஏழ்மையான குடும்பம்)
அம்மா - பாலாஜி.    இன்னைக்கு சாயங்காலம் ஸ்கூல்லே இருந்து வரும்போது ஏ.டி.எம். லே இருந்து முன்னூறு ரூபா பணம் எடுத்துகிட்டு வாப்பா.   மளிகையெல்லாம் கொஞ்சம் வாங்கணும்.
பாலாஜி - சரிம்மா.
அம்மா -     மறக்காம ஏ.டி.எம். அட்டையை எடுத்துகிட்டு போப்பா.  பத்திரமா அதை திரும்ப கொண்டு வாப்பா.
பாலாஜி - சரிம்மா
(அம்மாவிற்கு ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கத் தெரியாது.  எப்போதும் பாலாஜிதான் பணத்தைக் கொண்டு வந்து அம்மாவிடம் தருவான்.   அன்று பள்ளிக்குப் புறப்படும் போது ஏ.டி.எம். அட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.)

காட்சி - 2,   
இடம் - பள்ளி மற்றும் அந்த ஊர் ஏ.டி.எம் சென்டர்,   மாந்தர் - பாலாஜி,  நண்பன் முத்து

(அன்று சனிக்கிழமை.   மதியம் ஒரு மணிக்கே பள்ளி முடிந்துவிட்டது.   பாலாஜியும் அவன் நண்பன் முத்துவும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார்கள்)
பாலாஜி - டேய் முத்து.   போற வழியிலே ஏ.டி.எம்.லே பணம்  எடுத்துகிட்டு போயிடலாம்டா
முத்து - சரிடா...
(இருவரும் வழியில் இருந்த ஒரு ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தார்கள்.    மதிய நேரமாதலால் அங்கே யாருமே இல்லை.  பாலாஜி அம்மாவின் ஏ.டி.எம். கார்டை இயந்திரத்தில் நுழைக்க முயன்றபோது அதை கவனித்தான்.    அந்த ஏ.டி.எம். இயந்திரத்தின் கீழே சில ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடந்தன.     உடனே பாலாஜி அவற்றை எடுத்து அடுக்கத் தொடங்கினான்.    அதில் மொத்தம் ஏழாயிரம் ரூபாய் இருந்தது)
முத்து - டேய்.  பாலாஜி.  இன்னைக்கு நாம நரி முகத்திலே முழிச்சிருக்கோம்னு நினைக்கிறேன்.    எவ்வளவு இருக்குன்னு பாருடா.  ஆளுக்குப் பாதியா எடுத்துக்கலாம்.
பாலாஜி - டேய். முத்து.  என்னடா நீ.  இப்படியெல்லாம் பேசறே.  இது நம்ம பணம் இல்லை.
முத்து - எப்படியிருந்தா என்னடா.   நாம எடுத்துக்க வேண்டியதுதான்!....
பாலாஜி - இல்லேடா.   இதை முறைப்படி நாம வங்கிக்குப் போய் மேனேஜரிடம் குடுத்துடணும்.  அதுதான் சரி.
முத்து - டேய்.  அதிர்ஷ்டம் ஒரு முறைதான் நம்ம வீட்டுக் கதவைத் தட்டும்னு சொல்வாங்க.   அதை நீ பயன்படுத்திக்கணும்.
பாலாஜி நீ என்ன சொன்னாலும் அது என் காதிலே ஏறாதுடா.
(பாலாஜி பிடிவாதமாய் முத்துவை அழைத்துக் கொண்டு  புறப்பட்டான்)

காட்சி - 3,   
இடம் - வங்கி,   
மாந்தர் - வங்கி மானேஜர், பாலாஜி மற்றும் முத்து

(அந்த ஏ.டி.ஏம்.மிற்குச் சொந்தமான வங்கி இரண்டு தெரு  தள்ளி இருந்தது.   இருவரும் அந்த வங்கிக்குச் சென்று  மானேஜரின் அறைக்குள் நுழைந்தான்)
பாலாஜி - சார்....
மானேஜர் - வாங்க தம்பி.  உங்களுக்கு என்ன வேணும் ?
(பாலாஜி சற்று முன்னால் நடந்ததைச் சொல்லி பணத்தை மானேஜரிடம் ஒப்படைத்தான்)
மானேஜர் - உங்களை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.  இந்த சின்ன வயசிலே நீங்க ரெண்டு பேரும் நேர்மையா இருக்கீங்க.   எந்த ஸ்கூல்லே படிக்கிறீங்க ?
பாலாஜி - அரசு உயர்நிலைப்பள்ளியிலே பத்தாவது படிக்கிறோம் சார்.   இவன் என்னோட நண்பன்.  பேர் முத்து சார்.
மானேஜர் - உனக்கும் என்னோட வாழ்த்துகள் தம்பி. இதுமாதிரிதான் எப்பவும் இருக்கணும்.
(மானேஜர் உடனே தனது கைப்பேசியில் யாரிடமோ பேசினார்.  சற்று நேரத்தில் ஒரு நிருபர் கையில் காமிராவுடன் வந்தார்.   மானேஜர் அவரிடம் விவரத்தைச் சொல்ல அவர் பாலாஜியும் முத்துவும் பணத்தை மானேஜரிடம் ஒப்படைப்பதைப் போல ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்)

காட்சி - 4,   
இடம் - பள்ளி வளாகம்,   
மாந்தர் - பள்ளித் தலைமை ஆசிரியர்,  ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள்,  பாலாஜி, முத்து.

(அடுத்தநாள் காலை அந்த பிரபல செய்தித்தாளில் அரசுப் பள்ளி மாணவர்களின் நேர்மை என்ற தலைப்பில் ஒரு செய்தி புகைப்படத்தோடு பிரசுரமாகியிருந்தது.  காலை வழக்கம் போல பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.   பிரார்த்தனை முடிந்ததும் பள்ளித் தலைமையாசிரியர் பேசத் தொடங்கினார்.)
தலைமையாசிரியர் - இன்னைக்கு செய்தித்தாள்லே நம்ம பள்ளி சம்பந்தமாக ஒரு செய்தி பிரசுரமாகியிருக்கு.  எத்தனை பேர் பார்த்திருப்பீங்கன்னு தெரியலை.    நம்ம பள்ளியிலே பத்தாம் வகுப்பிலே படிக்கிற பாலாஜி மற்றும் முத்து என்ற இரண்டு மாணவர்களும் ஒரு சிறந்த செயலைச் செய்திருக்காங்க.... அது செய்தித்தாள்லே அவங்களோட புகைப்படத்தோட பிரசுரமாகியிருக்கு.  (தலைமையாசிரியர் அந்த செய்தியை வாசித்துக் காட்டினார்) .... இந்த இரண்டு மாணவர்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்களாலே நம்ம பள்ளிக்கே பெருமை.  
(பள்ளியில் இருந்த அனைவரும் அன்று முழுவதும் பாலாஜி மற்றும் முத்துவைப் பற்றியே பேசினார்கள்.  இதைக் கேட்ட முத்துவிற்கு என்னவோ போலிருந்தது)

காட்சி - 5,   
இடம் - பள்ளி வளாகம் மாலை நேரம், மாந்தர் - பாலாஜி மற்றும் முத்து,   இடம் - பள்ளி வளாகம் மாலை நேரம்

முத்து - டேய் பாலாஜி.  எனக்கு என்னமோ போல இருக்குடா. உன்னை புகழறது சரி.  ஆனா தகுதியில்லாத என்னையும் சேர்த்துப் புகழறாங்க.   அந்த பணத்தை நான் பங்கு போட்டுக்கலாம்னு சொன்னேன்.  ஆனால் நீதான் பிடிவாதமா முடியாதுன்னு சொன்னே.   அது எவ்வளவு சரின்னு எனக்கு இப்பத்தான் புரியுதுடா.   
பாலாஜி - அந்த பணத்தை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டிருந்தா நாம நிம்மதியாவே இருந்திருக்க முடியாது.  ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டேதான் இருந்திருக்கணும்.  இப்ப பார்.  எவ்வளவு நிம்மதியா இருக்கு.   நாம செய்த நல்ல செயலுக்காக நாம படிக்கிற பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைச்சிருக்கு.   அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட்டா நாம ஒருநாளும் நிம்மதியாவே இருக்கமுடியாது.  இப்ப பார் நம்ம மனசு முழுக்க மகிழ்ச்சி நிறைஞ்சிருக்கு.
முத்து - ஆமாண்டா.   அதை நான் அனுபவப்பூர்வமா உணர்ந்துட்டேன்.  இனி நான் கூட அடுத்தவங்க     பொருளுக்கு ஆசைப்படவே மாட்டேன்டா.

(திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com