நல்லதையே நினை!

ஆயிரக்கணக்கான நத்தைகள் ஒரு கூட்டமாக நடந்து சென்றன. கடுமையான வெய்யில்!
நல்லதையே நினை!

ஆயிரக்கணக்கான நத்தைகள் ஒரு கூட்டமாக நடந்து சென்றன. கடுமையான வெய்யில்! எங்கும் தங்க நிழல் இல்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள சிறிதும் தண்ணீர் இல்லை. இருந்தாலும் அந்த நத்தைக் கூட்டம் மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. 

வழியில் பறவைகள் கூட்டமாய்ப் பறந்து வந்தன. அவை நூற்றுக் கணக்கில் இருந்தன. எதிரில் நத்தைகள் ஆயிரக்கணக்கில் நகர்ந்து வருவதைக் கண்ட அந்தப் பறவைகளுக்கு ஒரே ஆச்சரியம்! அவை எங்கே போய்க்கொண்டிருக்கின்றன?....என்பதை அறிய....

பறவைகளின் தலைவன் நத்தைக் கூட்டத்தில் முதலில் வந்து கொண்டிருந்த நத்தைகளின் தலைவனைப் பார்த்து, ""நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?...'' என்று கேட்டது. 

""தூரத்தில் ஒரு காடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம்!...அங்கே தண்ணீரும், நிழல் தரும் மரங்களும் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டோம்!....அங்கே சென்று வாழப்போகிறோம்!'' என்றது நத்தைகளின் தலைவன்!

""அடாடா!....நீங்கள் சொல்லும் காட்டிலிருந்துதான் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்!....அங்கும் கடுமையான வெய்யில்!....மரங்களெல்லாம் கருகிவிட்டன!....பிழைப்பதற்கு நாங்கள் வேறு இடம் தேடிப் போய்க்கொண்டிருக்கிறோம்! அங்கே செல்வது பயனில்லை!....தெரியுமா?'' என்றது பறவைகளின் தலைவன்.

""இருக்கட்டுமே!....நாங்கள் மெல்ல நடந்து அந்தக் காட்டைச் சென்று அடைவதற்கு முன் மழை பெய்துவிடும்!.....காட்டில் மரங்கள் செழித்து வளர்ந்து

விடும்!....மரங்களில் இலை, பூ, காய்கள், பழங்கள் என பசுமை மிகுந்து இருக்கும்!....அங்கு உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படும்!....எங்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்குமே!'' என்றது நத்தைகளின் தலைவன்! 
பறவைகளின் தலைவன் யோசிக்கத் தொடங்கியது!

பின்னொருநாள் அந்தக் காட்டின் வழியே பறந்து போகையில் அவைகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கவும் செய்தது! 

"நம்பிக்கைதான் வாழ்க்கை! நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்!' என தனக்குள் சொல்லிக்கொண்டது!


-மாதா அமிர்தானந்தமயி சொன்ன சிறுகதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com