நினைவுச் சுடர்!: காலணா பெறும்!

ஒரு மனிதன் மிகக் கஷ்டப்பட்டு பல வருடங்கள் முயற்சி செய்து தண்ணீரில் நடக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டிருந்தான்.
நினைவுச் சுடர்!: காலணா பெறும்!

ஒரு மனிதன் மிகக் கஷ்டப்பட்டு பல வருடங்கள் முயற்சி செய்து தண்ணீரில் நடக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டிருந்தான். அவனுக்குப் பெருமை தாங்கவில்லை! அந்த வித்தையை பல முறை ஜனங்களிடம் காண்பித்தான். ஜனங்களும் அவனைப் பாராட்டிப் பரிசளித்தனர்.  ஆனால் அவனுக்குக் இறையுணர்வு கிட்டவில்லை....ஆத்ம தியானம் செய்து நிம்மதி கிடைக்கும் வழி தெரியவில்லை. ஒரு முறை அவன் படகுகள் உள்ள கங்கை நதிக்கரைக்கு வந்தான். நதி அழகாக ஓடிக்கொண்டிருந்தது. இதமான காற்று! 
அவன் வந்து சேர்ந்தபோது ஒரு துறவி வெள்ளை உடையுடன் கடவுளின் நினைவில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். 
தண்ணீரில் நடக்கும் வித்தைக்காரன் துறவியை ஏளனத்துடன் பார்த்தான். இந்தத் துறவியின் முன்பு நான் கற்றுக்கொண்டு வித்தையைச் செய்து காண்பிக்க எண்ணினான். துறவி கண்விழிக்கும் வரை காத்திருந்தான். சற்று நேரம் ஆகியது. துறவி தியானம் முடிந்து கண் விழித்தார்.  அருகில் ஒரு மனிதன் நிற்பதைக் கண்டார். 
""இப்ப நான் செய்யப்போற வித்தையைப் பாருங்க நீங்க ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!'' என்றான். 
துறவி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே....அவன் ஆற்றில் சிறிது தூரம் தரையில் நடப்பது போல் 
தண்ணீரில் நடந்து விட்டுத் திரும்பினான். 
துறவி அவனைப் புன்னகையுடன் பார்த்தார். 
அவனோ, ""இந்த வித்தையை நான் பத்து வருடங்கள் பயிற்சி செய்து கற்றுத் தேர்ந்தேன்... நீங்க இதைப் பாராட்டி ஒண்ணும் சொல்லவே இல்லையே....உங்களுக்கு இது மாதிரி வித்தைகள் செய்ய வருமா?....'' என்று கேட்டான். 
துறவி சிரித்துக்கொண்டே, ""இந்த வித்தை காலணா பெறும்!'' என்றார். 
""என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? இதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?''
""இருக்கலாம்!....காலணா கொடுத்தால் படகில் கரையைக் கடந்து விடலாமே....உன் பத்து வருட உழைப்பு காலணாதான் பெறும்!....ஆத்ம அபிவிருத்திக்கு இந்த வித்தையெல்லாம உதவாது!....அதற்கு பக்தியில் திளைக்கும் மனநிலை வேண்டும்!...''
வித்தைக்காரன் துறவியின் கால்களில் விழுந்தான். அவனுக்குள் ஒரு பரவச நிலை ஏற்பட்டது. கண்களில் நீர்! குருவின் அருளால் இறைவனின் நினைப்பு அவனிடம் ஒட்டிக் கொண்டது! தான் கற்ற வித்தை மிக அல்பமானது என்பது அவனுக்குப் புரிந்தது! 
அந்தத் துறவியின் பெயர் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com