பணி நிறைவு விழா

ஆசிரியர் கோவிந்தசுவாமி அந்த வட்டாரத்தில் உள்ள படித்தவர்களுக்கும், பாமரர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். 
பணி நிறைவு விழா

ஆசிரியர் கோவிந்தசுவாமி அந்த வட்டாரத்தில் உள்ள படித்தவர்களுக்கும், பாமரர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். 
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும், அவர்களுக்கு நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துவதிலும் முன் நிற்பவர். அதை தன் லட்சியமாகவே கொண்டிருந்த பண்பாளர்.
அந்த ஊரில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் சாதி, மத வேறுபாடு பார்க்காது முன் நின்று செயல்படுவார். அதனால்தான் அவருக்கு அரசே நல்லாசிரியர் விருது அளித்துச் சிறப்பித்திருந்தது. 
அந்த சிறந்த ஆசிரியரின் பணி நிறைவு விழாவினை ஆசிரியர்களும், ஊர் மக்களும் கூடி நடத்த எண்ணினார்கள்.
அந்த எண்ணத்தை ஆசிரியர் கோவிந்தசாமியிடமும் சொன்னார்கள்.
அதற்கு அவர், ""நன்றி!....மகிழ்ச்சி,....இந்த விழா குறித்து என் எண்ணம் ஒன்றைக் கூறலாமா?'' என்று கேட்டார். 
""தாராளமாகக் கூறுங்கள்!....செய்யக் காத்திருக்கிறோம்....'' என்றார்கள் ஊர் மக்கள். 
அவர் தன் எண்ணத்தைச் சொன்னார். 
அவர் கூறியதைக் கேட்டவர்கள் மகிழ்ச்சியோடு "" அப்படியே செய்கிறோம்...'' என்றார்கள்.

ஆசிரியர் கோவிந்தசாமியின் பணி நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அவ்வூர் எம்.எல்.ஏ. வும், மாவட்ட ஆட்சியாளரும், தொழிலதிபர்களும், அந்த ஊர் கோயில் தர்மகர்த்தா அவரிடம் படித்து வெளியூர்களில் பெரிய பணிகளில் இருந்த மாணவர்களும் வந்திருந்தார்கள்! ஊரின் பல முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். பொது மக்களில் பலரும் அவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்ததால் விழாவில் பங்கேற்க வந்திருந்தனர். ஊரே கூடியிருந்தது. 
விழா மேடையின் முன்னே ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியில் "இது எங்கள் அன்பளிப்பு' என்று எழுதப்பட்டிருந்தது. 
சிலர் வியப்போடு அந்தப் பெட்டியை பார்த்தார்கள்! என்றாலும், அந்தப் பெட்டியில் அவர்கள் தங்களின் அன்பளிப்பை செலுத்தாமல் இல்லை. 
விழாவிற்கு வந்திருந்த அனைவருமே தங்கள் கையில் இருந்ததை அன்பளிப்பாக செலுத்திக் கொண்டு இருந்தார்கள். 
விழாவில் பலர் ஆசிரியரின் பண்புகளைப் பற்றியும், அவரது தொண்டுள்ளத்தைப் பற்றியும் போற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 
விழாவிற்கு வந்திருந்த எல்லோருமே அன்பளிப்பு வழங்கி முடித்த நிலை வந்ததும், இருவர் அந்தப் பெட்டியை மேடைக்குப் பின்னே தூக்கிச் சென்றார்கள். 
விழாத் தலைவராக இருந்த மாவட்ட ஆட்சியாளர், ""இப்போது விழாவின் நாயகர், நல்லாசிரியர் அவர்கள் தமது நன்றி உரையை நிகழ்த்துவதோடு ஓர் அரிய செயலையும் செய்ய இருக்கிறார். அவருக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியையும், பாராட்டினையும் தெரிவித்து அன்னாரைப் பேச அழைக்கிறேன்'' என்று கூறி அமர்ந்தார்.
நன்றியுரை நல்க வந்த நல்லாசிரியர் கோவிந்தசாமி, ""எனக்கு இப்படி ஒரு சிறப்பு மிக்க விழா எடுத்த நல்லுள்ளங்களுக்கு முதற்கண் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்வதோடு, என்னிடம் பயின்று, தற்போது வெளியூர்களில் பணியில் இருக்கும் மாணவர்கள் எல்லோரையும் இவ்விழாவிற்கு அழைத்த விழாக்குழுவினருக்கும், அந்த அழைப்பே ஏற்று இங்கு வந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன். 
எனக்கு இப்படி ஒரு விழா நடத்த வேண்டும் என்று விரும்பிய ஆசிரியப் பெருமக்களும், பெரியோர்களும் என்னிடம் வந்து கேட்டபோது நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றை என் சார்பாகக் கூறினேன்....
......அதாவது, "பரிசுப் பொருள்கள் எதுவும் யாரும் எனக்கு வாங்கி வரக்கூடாது,....பரிசுப் பொருள் வாங்கும் பணத்தை பணமாகவே எனக்கு நீங்கள் கொடுப்பதாக இருந்தால், இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.'....என்று கூறினேன்......
......அதன்படியே மேடையின் முன்னே வைக்கப்பட்ட பரிசுப் பெட்டியில் பணமாகவே கொடுத்திருக்கிறார்கள். அப்படி அன்பு உள்ளத்தோடு அவர்கள் கொடுத்த அன்பளிப்புத் தொகை எவ்வளவு தெரியுமா?.....
......இரண்டு இலட்சத்து இரு நூற்று ஐம்பது ரூபாய்! நீங்கள் எல்லாம் எனக்காக அன்பளிப்பாக அளித்த இந்தப் பணம் முழுவதையும் சமீபத்தில் நேபாள நாட்டில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக அவதிப்படும் சகோதர, சகோதரிகளுக்கு உங்கள் அனைவரின் சார்பாக இந்த நிதியை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் வழங்குகிறேன்'' என்று கூறி பணத்தை அவரிடம் வழங்கியபோது, விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு கர ஒலி எழுப்பியதோடு ஆசிரியரின் மனித நேயத்திற்கும் வாழ்த்தினை தெரிவித்தார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com