உதவும் உள்ளம்!

தனபால் - ராணி, நாளையிலேர்ந்து அந்தச் சின்னப்பாப்பா 1ஆம் வகுப்பு படிக்குதே,....அதுக்கு நான் ஆட்டோ ஓட்டப் போறதில்லே....
உதவும் உள்ளம்!

அரங்கம்
காட்சி - 1,
 இடம் - தனபால் வீடு,
 மாந்தர் - தனபால், அவரது மனைவி ராணி.
 
 தனபால் - ராணி, நாளையிலேர்ந்து அந்தச் சின்னப்பாப்பா 1ஆம் வகுப்பு படிக்குதே,....அதுக்கு நான் ஆட்டோ ஓட்டப் போறதில்லே....
 ராணி - அந்த செங்கமலம் பொண்ணு சோலையையா?
 தனபால் - கரெக்ட்!.....அந்தப் பொண்ணுதான்....அந்தம்மா செங்கமலம்கிட்டே கரெக்டா வாடகை வாங்க முடியலே.... மூணு மாசமா பாக்கி!..... இன்னிக்கு ஒரு மாசம் வாடகை கொடுத்துட்டு, மீதியை அப்புறமா தரேன்கிறாங்க....திடீர்னு அந்தம்மா புருஷன் வேலப்பனுக்கு கம்பெனியிலே வேலை இல்லேன்னுட்டாங்களாம்....வேலை தேடிக்கிட்டு இருக்காரு!.... அதுக்கு நாம் என்ன செய்யறது?.... நம்ம பொழப்பு ஓட வேண்டாமா?... அந்த ஒரு வீடுதான் அப்படி!....மத்த எல்லா வீட்டிலேயும் டாண்ணு ஒண்ணாந்தேதி வாடகை வந்திடும்!...
 ராணி - அவங்க ரொம்ப ஏழையாங்க?....
 தனபால் - ஆமாம்!.... ஆனா தனியார் பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்காங்க....பள்ளிக்கூடக் கட்டணம் வேறே அங்கே அதிகம்!....அது தூரமாயிருக்கு.....கவர்மெண்ட் ஸ்கூல்லே சேர்த்திருக்கலாமில்லே....அது கிட்டேயே இருக்கு!....ஒரு தெரு தாண்டினா போதும்!....இப்போ வேலப்பன் சாருக்கு வேலை வேறே இல்லே.... ஆனா சீக்கிரம் கிடைச்சுடும்னு சொல்றாரு....அதெல்லாம் நம்ப முடியுமா?..... அந்தம்மாதான் மார்க்கெட்லே கூலி வேலை செய்யுது,.... இப்போ வேலப்பனும் அதே மார்க்கெட்டிலே கூலி வேலை செய்யறாரு...எனக்கே எங்கேயோ கடன் வாங்கித்தான் குடுத்தாங்க போலிருக்கு....
 ராணி - ஏழையாத்தானே இருக்காங்க..... வாடகை குடுக்கும்போது வாங்கிக்கிங்க....ஆட்டோவை நிறுத்திடாதீங்க....கஷ்டமாயிடும்!....பாவம் சின்னக்குழந்தை.... நமக்கு ஒரு குழந்தை இருந்தா செய்யமாட்டோமா?
 தனபால் - அதெல்லாம் முடியாது!.....நாளைக்கு நான் ஆட்டோ ஓட்டமாட்டேன்!.... தினம்
 பதினஞ்சு ரூபா பெட்ரோல் மிச்சம்!...
 
 காட்சி - 2,
 இடம் - செங்கமலத்தின் வீடு,
 மாந்தர் - ராணி, செங்கமலம், வேலப்பன், சோலை....
 (செங்கமலத்தின் வீட்டு வாசலில் சைக்கிளுடன் ராணி... வேலப்பனும் செங்கமலமும் ஆட்டோவுக்காகக் காத்திருக்கிறார்கள்--ராணி,
 செங்கமலத்தைப் பார்த்து.....--)
 ராணி - சோலை அம்மாதானே நீங்க..... என்னைத் தெரியுதா?
 செங்கமலம் - தெரியுமே!..... ஆட்டோக்காரர் தனபால் மனைவிதானே நீங்க?....அவருக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்...இன்னிக்கு அவரு வரலியா? நேரமாயிடுச்சே.., நானும், அவரும் இன்னும் அஞ்சு நிமிஷத்திலே வேலைக்குக் கிளம்பணும்...வரமாட்டாரா....ஏன்?....
 ராணி - தெரியலே.... நீங்க குழந்தையை என்கூட அனுப்புங்க...நான் சைக்கிளில் அழைச்சிக்கிட்டுப் போறேன்.... பள்ளி விட்டதும் திரும்பக் கொண்டு வந்தும் விடறேன்....எனக்கு ஒரு குழந்தை இருந்தா செய்ய மாட்டேனா!...
 வேலப்பன் - நல்ல குணம்மா உங்களுக்கு!...உங்க வீட்டுக்காரருக்கு வாடகை பாக்கி....அதனாலே வரலியோ.... ஏய், சோலை....இங்கே வா!....இன்னிக்கு சைக்கிள்ளே போறியா?....
 சோலை - சரிப்பா!...
 (வேலப்பன் குழந்தையை சைக்கிளில் ஏற்றி விடுகிறார்...ராணி குழந்தையை ஏற்றிச் செல்கிறாள்....--(சோலை மழலை மொழியில் பேசிக்கொண்டே செல்கிறாள்)--...பள்ளி விட்டதும் ராணி திரும்ப கொண்டு வந்தும் விடுகிறாள்.)
 
 காட்சி - 3,
 இடம் - தனபால் வீடு,
 மாந்தர் - தனபால், ராணி.
 தனபால் - ராணி,.... சைக்கிள்லே குழந்தையை ஸ்கூலுக்கு அழைச்சிக்கிட்டு போனியா,.... கடைத்தெருவிலே உன்னைப் பார்த்தேன்....
 ராணி - ஆமாங்க,....ஒங்க கிட்டே சொல்லலே....காலையிலேதான் யோசிச்சேன்.... நீங்க போயிட்டீங்க.... நான் சைக்கிள்லே அவங்க வீட்டுக்குப் போனேன்.... நீங்க சொன்னா மாதிரியே செஞ்சுட்டீங்க.... பாவங்க... அவங்க உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருந்தாங்க... குடிசை வீடு!....ஏழ்மை.... எல்லோரையும்போல இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்காங்க....ஆசை!....நம்மாலே வேறே எதுவும் உதவி செய்ய முடியாது.... இதையாவது நான் செய்யறேங்க....
 தனபால் - எதோ செய்!....உனக்கு இது சரின்னா செய்...ஆனா நான் ஓட்டமாட்டேன்... ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் கட்டறாங்களே....எனக்கு வாடகை குடுக்க முடியலியா....
 ராணி - அதை விடுங்க.... நான் தினமும்
 கொண்டுபோய் விட்டுட்டு அழைச்சிக்கிட்டு வரலாம்னு நெளைக்கிறேன்!....
 தனபால் - ஏதோ செய்!
 ராணி - இதுக்கு ஒத்துக்கிட்டீங்களே அது போதும்!....
 
 காட்சி - 4,
 இடம் - செங்கமலத்தின் வீடு,
 மாந்தர் - சோலை, செங்கமலம்,
 வேலப்பன், ராணி.
 ராணி - (சைக்கிள் பெல்லை அடிக்கிறாள்)....ட்ரிங்....ட்ரிங்!...
 செங்கமலம் - வந்துட்டீங்களாம்மா!....வாங்க...
 இனிமே அவரு வரமாட்டாரா?....
 ராணி- தெரியலே!....அதிருக்கட்டும்!... நீங்க சோலையை அனுப்புங்க....ரெடியாயிட்டாளா?...
 வேலப்பன் - அவ எப்பவோ ரெடியாயிட்டா!....தனபாலுக்கு எங்க மேலே கோபம்னு நினைக்கிறேன்.... பணம் வந்ததும் அவரோட பாக்கி வாடகையைத் தந்துடறோம்....
 ராணி - அதெல்லாம் சரியாயிடும்!....கவலைப்படாதீங்க....சீக்கிரம் குழந்தையை அனுப்புங்க....நான் அவளை விட்டுட்டு மார்க்கெட்டுக்குப் போகணும்....
 செங்கமலம் - உங்களை அவரு கோவிச்சுக்க மாட்டாரா?
 ராணி - அவரு அனுமதி தந்துட்டார்... நீங்க சோலையை அனுப்புங்க...
 சோலை - ஹை!.... ராணிம்மா!... இன்னிக்கும் எனக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கணும்!
 ராணி - சரி!... வா!
 (ராணி குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று .... திரும்பவும் வீட்டில் சேர்த்து
 விடுகிறாள்)
 
 காட்சி - 5,
 இடம் - தனபால் வீடு, மாந்தர் - ராணி, தனபால்
 தனபால் - இன்னைக்கும் அழைச்சுக்கிட்டுப் போனியா ராணி?...
 ராணி - ஆமாங்க...... போனாப் போவுது உதவி செய்வோங்க....
 தனபால் - சொன்னாக் கேட்க மாட்டே .... எனக்குப் பெட்ரோல் செலவு கொஞ்சம் மிச்சம்!.... உனக்கு என்ன தோணுதோ செய்!....
 (ராணி சோலையை தினமும் அழைத்துக் கொண்டு போவது, கொண்டு வந்து விடுவதுமாக செய்து வருகிறாள். முழுப்பரீட்சை முடிந்து விடுகிறது...பள்ளிக்கு விடுமுறையும் வந்து, பிறகு மறுபடியும் பள்ளியைத் திறக்கிறார்கள்.--
 முதல் நாள்--)
 
 காட்சி - 6,

 இடம் - செங்கமலத்தின் வீடு.
 மாந்தர் - ராணி, செங்கமலம், வேலப்பன்.
 (ராணி ஒரு கடையில் கொஞ்சம் சாக்லேட்
 வாங்கிக்கொள்கிறாள்...பிறகு சைக்கிளில்
 புறப்புடுகிறாள்)
 ராணி - (சைக்கிளில் வந்து...) ட்ரிங்....ட்ரிங்!....
 வேலப்பன் - வாங்கம்மா!....செங்கமலம், வா இங்கே!.... யார் வந்திருக்காங்க பாரு!....
 (செங்கமலம் கையில் கொஞ்சம் பணத்துடன் வெளியில் வருகிறாள்)
 ராணி - எங்கே உன் செல்லக்குட்டி சோலை?...
 செங்கமலம் - அம்மா!,.... சோலையை அரசுப் பள்ளியில் ரெண்டாம் வகுப்பிலே
 சேர்த்துட்டேன்.... கிட்டேதானே இருக்கு!....நானே கொண்டுபோய் விட்டுட்டேன்!.... எங்க குடும்ப சூழ்நிலையையும் பார்க்கணுமில்லே....ஆட்டோவுக்கு இரண்டு மாசம் வாடகைக் காசு தரணும்....இந்தாங்க,....அப்புறம்,....உங்களுக்கு எவ்வளவு தரணும்மா?...
 ராணி - அதெல்லாம் தரவேணாம்.....பரவாயில்லே.... சோலையை நல்லாப் படிக்கச்சொல்லுங்க...நான் ரொம்பக் கேட்டதாச் சொல்லுங்க...இவ்வளவு நாள் பழகி அவளைப் பார்க்காம இருக்க முடியலே...
 வேலப்பன் - தங்கமான மனசும்மா உங்களுக்கு!.... இருந்தாலும் உங்க வீட்டுக்காரர் இன்னும் கோபமாத்தான் இருப்பாருன்னு நெனைக்கிறேன்...மறுக்காம வாங்கிக்குங்க....
 ராணி - அதெல்லாம் வேண்டாம்!...அப்படி அவரு நிச்சயமா கேட்டாருன்னா வந்து வாங்கிக்கறேன்....அப்படியே சோலையையும் பார்ப்பேனில்லே!.... அவளை ரொம்ப கேட்டதாச் சொல்லுங்க.... இந்தாங்க இந்த சாக்லேட்டை அவ வந்தா கொடுத்துடுங்க.... வரேன்!...
 வேலப்பன் - நல்ல மனசும்மா உங்களுக்கு!....
 (ராணி சைக்கிளில் ஏறிக் கிளம்பி விடுகிறாள்....--மனதிற்குள்--....--- "எவ்வளவு நல்ல மனிதர்கள்!...வறுமையிலும் செம்மையாக
 இருக்கிறார்கள்'--- )
 
 காட்சி - 7,

 இடம் - ராணியின் வீடு,
 மாந்தர் - தனபால், ராணி.
 தனபால் - ராணி, என்ன இன்னிக்கு கடைத்தெருவில் உன் சைக்கிளைப் பார்க்கலையே....இன்னிக்கு ஸ்கூல் திறந்துட்டாங்களே.... சோலையைஅழைச்சுக்கிட்டுப் போகலியா?.....
 ராணி - நான் காலையிலே சோலை வீட்டுக்குப் போனேன்....(அங்கு நடந்தவற்றை விளக்குகிறாள்) அவங்களோட நிலைமையிலே நாணயமா உங்க பாக்கியைக் கொடுக்க வந்தாங்க....நான்தான் வேணாம்னுட்டேன்...எனக்கே என்ன உண்டோஅதைக் கொடுக்கிறேன்னும் சொன்னாங்க.... அதையும் நான் மறுத்துட்டேன்...ஆனா அந்த சோலையைத் தான் பார்க்க முடியலே.... அவதான் பள்ளிக்குப் போயிட்டாளே....
 தனபால் - ரொம்ப நேர்மையானவங்கதான்....நான்தான் தப்புப் பண்ணிட்டேன்!....ராணி உனக்கு ரொம்ப நல்ல மனசு!... அவங்களும் எவ்வளவு நாணயமா நடந்துக்கிட்டாங்க.... நீ அந்தப் பணத்தை வாங்கிக்காதே!....உனக்கு இவ்வளவு உதார குணம் இருக்கிறதை நினைச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு! நம்க்கு நல்ல குழந்தையை ஆண்டவன் தருவார்!
 (ராணி சோலையை நினைத்துக் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.)
 திரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com