பெரியவர் எங்கே?

"அக்கா!....எப்போதும் நாங்களே ஏதாவது சொல்கிறோம்....இன்று நீ சொல்ல வேண்டும்!....''

ஞானக்கிளி! 27
ஞானம் வந்ததும் எல்லோரும் குரல் கொடுத்தார்கள்!
 "அக்கா!....எப்போதும் நாங்களே ஏதாவது சொல்கிறோம்....இன்று நீ சொல்ல வேண்டும்!....''
 "ஓ!.....தங்கமணி ஐயா எவ்வளவோ சொல்லியிருக்கிறாரே!....ஒன்றைச் சொல்கிறேன்!....''
 அவர்கள் கேட்கத் தயாரானாராகள்.
 "அவருடைய இளம் பருவத்திலே நடந்தது!..... அவருடைய அப்பா ஒரு செய்தியைச் சொன்னார்!....''
 "என்ன செய்தி?''
 "அவருடைய பிள்ளைகளில் மூத்தவர் தங்கமணி.... இளைவன் வேலுமணி. அவர் அவர்களிடமும் தன் மனைவியிடமும் சொன்னார்...."இன்றைக்கு நம் வீட்டுக்கு ஒரு முக்கியமான மனிதர் வருகிறார். நம் குடும்பம் இன்றைக்கு நல்ல நிலையில் இருப்பதற்கும்.... அண்ணன் படித்து ஒரு வேலையில் இருப்பதற்கும் அவர்தான் காரணம்!....அவர் உரிய நேரத்தில் நமக்கு உதவி செய்தார். அவர் இல்லாவிட்டால் நடுக்கடலில் துடுப்பில்லாத படகாக நம் வாழ்க்கை ஆகியிருக்கும்!....பெரிய மனிதர்!....ஆனால் பார்ப்பதற்கு மிகவும் எளியவர்!....அவர் சரியாக மாலை 6.00 மணிக்கு நம் வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்து அவருடைய வாழ்த்தை நீங்கள் பெற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் இதை மறக்கக் கூடாது!....''
 "இதைவிட வேறு என்ன வேலை?....யாராவது மறப்பார்களா?...''
 அப்பா அந்தப் பெரியருடைய அருமையைச் சொன்னதும் தங்கமணி வீட்டிலேயே இருந்தார்.....இளையவன் வேலுமணி, "அம்மா,....ஒரு அவசர வேலை....சரியாக மணி ஆறுக்கு வீட்டில் இருப்பேன்!....'' என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினான்.
 பிள்ளைகள் பரபரப்புக்கு
 உள்ளானார்கள்.
 வேலுமணி ஆறரை மணிக்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான்.
 "அம்மா......மறந்தே போயிட்டேன்மா!.... அவர் வந்தாரா?...,...அவர் எங்கேம்மா?''
 "அவர் சற்று முன்தான் புறப்பட்டுப் போனார். உனக்கு என்ன அப்படி அவசர வேலை?....அவர் வடக்கே பயணமாகப் போகிறார்....வர வெகு நாளாகும்!....வந்தாலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே!....''
 ""வேலுமணி எங்கே போனான் தெரியுமா?.... அவனுக்குப் பிடித்த நடிகருடைய படம் நாளை வெளியாகுதாம்!....அதற்காக அந்த நடிகரே இந்தத் தெரு வழியாக ஊர்வல்ம் வர்றார்னு சொன்னதும் அவரைப் பார்க்க ஓடிட்டான்!...பெரியவரை மறந்திட்டான்!...''
 பிள்ளைகள் எல்லோருக்கும் எரிச்சலாக இருந்தது.
 "அப்பா அவனை அழைத்தார். உன்னுடைய மறதிக்கு என்ன காரணம் தெரியுமா?....அலட்சியம்!....எதைக் கொண்டாடி மதிக்க வேண்டும்....எதைத் தூரத்தில் வைக்க வேண்டும் என்று சிந்திக்கத் தெரியாததும் ஒரு காரணம்!....''
 வேலுமணி கண் கலங்கினான்.
 "அக்கா!....இந்தச் செய்தியை எங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் பதித்துக் கொள்வோம்!...அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்வோம்!....முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மறதியை நீக்கிக் கொள்வோம்!
 கிளி வரும்...
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com