பாராட்டுப் பாமாலை!  49: நாணயம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்புசிறந்த கல்வி கற்பதற்கு"கென்யா' நாட்டு ரிச்சர்டு
பாராட்டுப் பாமாலை!  49: நாணயம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு
சிறந்த கல்வி கற்பதற்கு
"கென்யா' நாட்டு ரிச்சர்டு
கிளம்பி "அவுரங்கா பாத்'வந்தார்.

அவுரங்காபாத் பகுதியொன்றில் 
அமைந்துள்ள "வாங்கடே' நகரத்தில் 
கவுரவமாக மளிகைக் கடை
"காசிநாத் காவ்லி' நடத்தி வந்தார்.

கனிந்த அன்புடன் நட்பாகக் 
காவ்லியோடு, ரிச்சர்டு 
இனிய முறையில் பழகி வந்தார்!
இருவரும் இனிய நண்பர்கள்!

ஒரு நாள், ரிச்சர்டு டோங்கி,
உரிமையோடு காவ்லியிடம்,
""இருநூறு ரூபாய் கடனாக
எனக்குக் கொடுங்கள்!'' எனக் கேட்டார்!

தந்தார் காவ்லி அத்தொகையை
சற்றும் தயக்கம் இல்லாமல்
அந்தப் பணத்தை ரிச்சர்டு
அளவிலா மகிழ்வுடன் பெற்றிட்டார்.

படித்து முடித்ததும் ரிச்சர்டு
பறந்து கென்யா போய்விட்டார்.
முப்பது ஆண்டுகள் முடிந்தனவே!
முன்பெற்ற கடனைத் திருப்பவில்லை!

கென்யா நாடாளு மன்றத்தில்
கீர்த்தியுடனே உறுப்பினராய் 
இன்று மிக்க வசதியுடன் 
இருக்கிறார் அந்த ரிச்சர்டு!

அவருக்கிப்போது வயதெழுபது! - அவர்
அன்பு நண்பர் காசிநாத் காவ்லி 
இருக்குமிடம் தேடி இம்மாதம் 
இந்தியா வந்தார் ரிச்சர்டு

நண்பரைக் கண்ட காவ்லிக்கு 
நம்ப முடியாப் பெருவியப்பு!
உண்மை நாணயம் உள்ளவர்கள்
உலகில் உள்ளார் என நெகிழ்ந்தார்!

என்றோ வாங்கிய கடனடைக்க 
இன்று வந்த ரிச்சர்டை
கட்டிப் பிடித்துக் கொண்டாரே
காவ்லி கண்களில் நீர் மல்க!

நன்றி மறவா ரிச்சர்டு 
நானிலம் போற்றும் மனிதர்தான்!
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!
அழகுத்தமிழால் வாழ்த்துவமே!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com