இந்தியாவின் இரும்பு மனிதர்!

மக்களை ஒடுக்க நினைத்த ஆங்கிலேயே அரசு அதிக வரிகளை விதித்தது. மேலும் வரித்தொகையை இரு மடங்காக்கியது.
இந்தியாவின் இரும்பு மனிதர்!

6. படேல் "சர்தார்'ஆனார்.

மக்களை ஒடுக்க நினைத்த ஆங்கிலேயே அரசு அதிக வரிகளை விதித்தது. மேலும் வரித்தொகையை இரு மடங்காக்கியது. இதன்மூலம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவோரை எளிதாக ஒடுக்கலாம் என திட்டம் தீட்டியது.1927-ஆம் ஆண்டு நிலவரியை 22 சதவீதமாக உயர்த்தியது. இதனால் மக்கள் நாடெங்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். "பர்தோலி'என்ற இடத்தில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி படேலின்  உதவியை நாடினர்.  இதை ஒரு வலிமையான போராட்டமாக வேண்டும் அதே நேரத்தில் கட்டாயம் வெற்றியும் பெற வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இருந்தது. எனவே மக்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை கூட்டினார். ஆங்கிலேயர்களிடம் வெற்றி பெற வேண்டுமானால் சத்தியாகிரக போராட்டமே சிறந்தது. தீவிரவாதத்தில் இறங்கினால்  நாம் கட்டாயம் அழிக்கப்  படுவோம்! நமது நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே! ஆங்கிலேயர்களை எதிர்ப்பதோ அழிப்பதோ அல்ல!' என மக்களிடம் தனது கொள்கைகளை தெளிவாக விளக்கினார்.

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி பர்தோலி பகுதியை ஐந்து பிரிவாக பிரித்தார். அவை ஒவ்வொன்றிற்கும் ஒருவரை தலைவராக நியமித்தார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவற்றையும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களும் உலக மக்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். எனவே "சத்தியாகிரகம்' என்ற செய்தி பத்திரிகை ஒன்றை தொடங்கினார். இது முழுக்க முழுக்க இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

இதை அறிந்துகொண்ட ஆங்கிலேய அரசு மக்களை மிரட்ட பல அதிகாரிகளை அந்த பகுதிக்கு அனுப்பியது. தமது போராட்டத்தை சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டே போக வேண்டும் என விரும்பினார் வல்லபாய் பட்டேல்.
முதலில் பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு நிலவரி உயர்வு எப்படி எல்லாம் மக்களை பாதிக்கும் என்பதை விவரித்து விண்ணப்ப கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே விவசாயிகளிடம் அடுத்தகட்ட நடவடிக்கையாக "வரி செலுத்த முடியாது!' என்று அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றார்.

கட்டாய வரி வசூலிப்பில் ஆங்கிலேய அரசு இறங்கியது. பிரத்தியேகமாக வரி வசூல் அதிகாரிகளை நியமித்தது. அக்காலங்களில் இந்திய கிராமப்புறங்களுக்கு செல்ல முறையான சாலைகள் கிடையாது. அடர்ந்த வனப்பகுதிகளை தாண்டித்தான் வரி வசூலிப்பவர்கள் செல்ல வேண்டும்.மேலும் நகர்ப்புறங்களில் இருப்பதுபோல் உணவு விடுதிகள் எதுவும் கிராமப்புறங்களில் இருக்காது. மின்சார வசதியும் இல்லை என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் மக்களின் நடமாட்டம் குறைந்துவிடும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட பட்டேல் மக்களிடம் ரகசியமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். வரிவசூலிக்கும் அதிகாரிகளுக்கு யாரும் உணவு அளிக்க கூடாது என்பதுதான் அது. இந்த விஷயம் பிரிட்டிஷ் அரசுக்கு தெரியவில்லை.  பிரிட்டிஷ் அரசு வரி வசூலிக்கும் அதிகாரிகள் பலரை ஒவ்வொரு கிராமத்திற்கும் அனுப்பியது. மிகவும் தீவிரத்தோடு வந்த அதிகாரிகள் விரைவிலேயே சோர்ந்து போனார்கள். அரசிடம் தமக்கு நேர்ந்த அவலத்தை முறையிட்டனர்.

இதை சற்றும் எதிர்பாராத அரசு கடும் கோபம் கொண்டது. தனது கெளரவ பிரச்சனையாக எண்ணத்தொடங்கியது. எனவே அடுத்த அதிரடி நடவடிக்கையில் உடனடியாக இறங்கியது.

விவசாயிகளின் நிலங்கள், உழவுக் கருவிகள், ஆடு மாடுகள் ,கோழிகள் என பலவற்றையும் ஜப்தி செய்தது. இவை அனைத்தையும் ஏலம் போடுவதன் மூலம் அரசுக்கு தேவையான நிதியை வசூல் செய்து விடலாம் என நினைத்தது. படேல் தம் பக்கம் இருக்கும் வரை மக்கள் இதுபோன்ற எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பயப்படவில்லை.

மறுநாள் ஜப்தி செய்யப்பட்ட அத்தனை பொருட்களையும் விலங்குகளையும் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் ஒரு பெரிய மைதானத்தில் கூடினர். ஏலத்தொகையை அறிவித்தனர்.அத்தனை பொருட்களும் வெகுவிரைவில் ஏலம் ஆகிவிடும் என நம்பினர். ஆனால் யாராவது  ஏலம் எடுக்க முன்வந்தால் தானே?

அதிகாரிகளும் பிரிட்டிஷ் அரசும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போயினர். பிரிட்டிஷ் கவர்னர் பர்தோலி மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

"இனி உங்களுக்கு எந்த ஊரிலும் எந்த தொழிலும் செய்ய அனுமதி கிடைக்காது!'என்றார். மக்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் கூடி நின்றனர். பர்தோலியின் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் சத்தியாகிரகம் பத்திரிகையில் செய்தியாக வெளியானது. நாட்டின் பிற பகுதிகள், மற்றும்,உலகின் பிற நாடுகளும் இவை யாவற்றையும் அறிந்து கொண்டன.

பர்தோலி  மக்களுக்கு நிதி உதவி வேண்டுமென சத்தியாகிரகம் பத்திரிகையில் அறிவித்தார் வல்லபாய் பட்டேல். "பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதிராய் முதல்முறையாக உதவித்தொகையை பர்தோலி சத்யாகிரகத்துக்கு அனுப்பி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் பிற தலைவர்களும் தமது ஆதரவையும் நிதி உதவியையும் அளித்தனர். பெல்ஜியம்,பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளும் நிதி உதவி அளிக்கத் தொடங்கின.

இப் போராட்டத்தின் எதிரொலியாக வல்லபாய் சகோதரர் வித்தல் பாய் படேல் தாம் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மகாத்மா காந்தி மக்களிடம் "பர்தோலி தினம்' அனுசரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உலக அரங்கில் தனக்கு அவப் பெயர் ஏற்படுவதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்துகொண்டது. இதை மேலும் கடுமையாக்கினால் அது இந்திய சுதந்திர போராட்டமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதையும் புரிந்து கொண்டது.

எனவே ஓராண்டுக்குப் பிறகு நிலவரி உயர்வு சட்டத்தை ரத்து செய்தது. மேலும் இப்போராட்டத்தில் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்தது. ஜப்தி செய்யப்பட்ட விவசாயிகளின் நிலங்கள்,ஆடுமாடுகள், கோழிகள் போன்ற யாவும் மீண்டும் உரியவர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ந்த காந்தியடிகள் வல்லபாய் பட்டேலை "சர்தார்' என அடைமொழியில் அழைத்தார். அன்று முதல் உலக மக்கள் அனைவரும் அவரை "சர்தார்' என்று அழைக்க தொடங்கினர்.

ஒருவேளை படேல் பின்னாட்களில் அரசியலில் ஈடுபடாமல் விலகி இருந்தாலும் கூட ""பர்தோலி சத்தியாகிரகம்' என்ற இந்த போராட்டத்திற்காகவே வரலாறும் மக்களும் அவரை நினைவில் வைத்திருப்பார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com