அரங்கம்: விசுவாசம்

ரோஜா, நான் நாளைக்கு நாகர்கோவில்லே இருக்கும் என் நண்பர் சோமு என்பவரை வரச் சொல்லியிருக்கிறேன்.... நம்ம் ஜிம்மியை அவரிடம் கொடுத்துடலாம்னு நெனைக்கிறேன்....
அரங்கம்: விசுவாசம்

காட்சி -1,
இடம் - ராஜசேகர் வீடு,   மாந்தர் - ராஜசேகர், ரோஜா, ரவி, விமலா.

ராஜசேகர் : ரோஜா, நான் நாளைக்கு நாகர்கோவில்லே இருக்கும் என் நண்பர் சோமு என்பவரை வரச் சொல்லியிருக்கிறேன்.... நம்ம் ஜிம்மியை அவரிடம் கொடுத்துடலாம்னு நெனைக்கிறேன்....
ரோஜா : உங்க பழைய நண்பர் சோமுவா?....ரொம்ப நல்லவர்தான்!...ஆனா,  " ஏன்?....உங்களுக்கு இப்படி தீடீர்னு ஒரு யோசனை வந்தது?... நாம இருக்கிற மதுரையிலேர்ந்து 200  கிலோ மீட்டருக்கும் மேலே இருக்குமே!...ரொம்ப தூரமாச்சேங்க.....பிள்ளைகள் ரெண்டு பேரும் ஜிம்மி மேலே உயிரையே வெச்சிருக்காங்க.... ஜிம்மியும் குழந்தைகளோட பாசமா பழகுது!... ஜிம்மி ஏங்கிப் போயிடுங்க!....
ரவி : அப்பா!.... வேணாம்ப்பா... இந்த யோசனையை விட்டுடுங்க....ஜிம்மி காலையில் எழுந்ததும்  எங்க கூடவே இருக்கிறது!.... நாங்க கொடுக்கிற பிஸ்கட்டை அருமையா சாப்பிடுகிறது!.... நாங்க படிக்க உட்கார்ந்தா கேட்டருகில் போய் உட்கார்ந்து கொள்கிறது..... படிக்கும்போது எங்களை டிஸ்டர்ப் பண்றதே இல்லை!.... அத்தனை  அறிவுப்பா!..... பள்ளிக்கூடம் புறப்பட்ட வுடன் பள்ளி வரை வருகிறது. அதனாலே எந்தத் தொல்லையும் இல்லையேப்பா!.... அதுவும் ரொம்ப தூரமா அனுப்பறேஙகளேப்பா!.....
விமலா : இந்த யோசனை வேண்டாம்ப்பா!.... எவ்வளவு அழகா இருக்கிறது!.... கண்களைப் பாருங்க.... எவ்வளவு பளபளப்பு!....மூக்கு எவ்வளவு சிவப்பு!.... செம்பழுப்பு உடம்பு! பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு!.... எங்களுக்கும் நல்ல பாதுகாப்பு!.... 
ரவி : ஸ்கூல் கிட்டேயே இருக்கறதாலே சாயங்காலம் பள்ளி விட்டதும் நாங்க திரும்பி வீடு வர வரைக்கும் துணையா இருக்கிறது!....வீட்டுக்கும் காவல்தானே அப்பா!.... ஜிம்மிக்கும் ஏக்கமாயிடும்ப்பா!....
ராஜசேகர் : நீங்க சொல்றது எல்லாம் ரொம்பச்சரி!.... நானும் அதைக் கவனிச்சிக்கிட்டுத்தானே இருக்கேன்!.... எனக்கு நாய் மேலே பிரியம் இல்லாமலா என் நண்பன் கிட்டே கேட்டு வாங்கி வந்தேன்?.... 
விமலா : பின்னே என்னப்பா பிராப்ளம்?..... 
ராஜசேகர் : நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கும், எதிர் வீட்டுக் காரருக்கும் ஜிம்மியைக் கண்டா பிடிக்கலே..... அன்னைக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே ஜிம்மியை அடித்து அதன் காலை முடக்கினார்!..... ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு நாள் அலைஞ்சோம்!.... ஒரு வழியா காயம் ஆறிப்போச்சு!....இரண்டு நாள் முன்னாலே எதிர்வீட்டுக்காரர் கட்டையால் அடிக்க நாயைத் துரத்தினார்!.....நல்ல காலம்!....ஜிம்மி தப்பித்துவிட்டது!... அடி பட்டிருந்தால் ஜிம்மி இறந்து போயிருக்கும்!.... அதனால்தான் இந்த யோசனை.....
ரோஜா : ஏன் இப்படி இரக்கமே இல்லாம இருக்காங்க....... நம்ம ஜிம்மி எவ்வளவு அமைதியா இருக்கு!..... 
(யாரும் இதற்குப் பிறகு பேசவில்லை.... 
தூங்கிப் போனார்கள்...)

காட்சி - 2, 
 இடம் - வீடு,   நேரம் - காலை நேரம்,   மாந்தர் - ராஜசேகர், ரோஜா, ரவி, விமலா. 

(வாசலில் ராஜசேகரனின் நண்பர் சோமு 
ஜிம்மியை வாங்கிக்கொள்ள வருகிறார். 
எல்லோரும் நின்று கொண்டிருந்தனர். )

ரோஜா : வேண்டாங்க!.... கொடுக்க வேண்டாம்!....பிள்ளைங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.... 
ரவி : அப்பா!...(அழுகிறான்)....வேண்டாம்ப்பா!... எங்களுக்கு நண்பன் போல மாத்திரமில்லே நல்ல துணையாவும் இருக்குதுப்பா ஜிம்மி!....
விமலா : ப்ளீஸ் வேணாம்ப்பா!.... பள்ளிக்கூடத்துக்கு துணையா வருமேப்பா!.... இனிமே யார் எங்களுக்குத் துணையா வருவாங்க?... அதை விட்டுட்டு எங்களால இருக்க முடியாதுப்பா!...
ராஜசேகர் : நான்  என்ன செய்யறது? .... எனக்கு இங்கே இருக்கட்டும்னுதான்  தோணுது! ஆனா....எதிர் வீட்டுக்காரங்களுக்கு நாய்ன்னா பிடிக்கவே இல்லே!..... என்றைக்காவது அதை அடித்துக் குற்றுயிரும் குலை உயிருமா ஆக்கி விட்டால்?..... நாம அதைப் பார்க்க முடியுமா?,..... தாங்கிக்க முடியுமா?.... சோமு அங்கள்கிட்டே இருந்தால் அது பத்திரமா இருக்கும்!....கொஞ்சம் தூரம்தான்! இருந்தாலும்  நாமும் அதை மாசத்துக்கு ஒருமுறை  போய்ப் பார்த்துக்கலாம்!.... 
(ஒருவரும்  பேசவில்லை..... சோமு நாயை 
வாங்கிக் கொள்ளக் கை நீட்டுகிறார்....
ஜிம்மி அவரோடு போக விரும்பவில்லை.... 
அதைத் தடவிக் கொடுத்து சமாதானப்படுத்தி சோமுவின் வண்டியில் ஏற்றிவிடுகிறார்கள்.... )

காட்சி - 3,
இடம் - ராஜசேகரின் வீடு,   மாந்தர் - ராஜசேகர், ரோஜா, ரவி, விமலா.

(ராஜசேகர் வேலையிலிருந்து சீக்கிரமே 
வீடு திரும்பிவிடுகிறார்....மாலை மணி 4.00...
ஆபீஸ் பையை வைத்துவிட்டு 
சோபாவில் சாய்கிறார்)

ராஜசேகர் : ரோஜா!... ரவியும், விமலாவும் ஏன் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை?.... 
ரோஜா : பள்ளிக்கும் போகலே,......இருவரும் இன்னும் சாப்பிடவும் இல்லே....எவ்வளவோ சொல்லிட்டேன் இருவரும் சமாதானம் ஆகலே....
ராஜசேகர் : என்னப்பா!,..... ஜிம்மி இங்கே இருந்தால் அடித்தே அதைக் கொன்று விடுவார்கள்..... ஜிம்மியின் நல்லதுக்குத்தானே செய்திருக்கிறோம்!.... நீங்க ஜிம்மியை ரொம்ப நேசிப்பவர்களாக இருந்தால் இதில் நீங்கள் சந்தோஷப்படணும்!..... எனக்கும் ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு!.... சாப்பாடு இறங்கலே....திருப்பிக் கொண்டு வந்துட்டேன்!...  என்ன செய்யறது?....
ரோஜா : என்னங்க நீங்களும் இப்படி இருக்கீங்க?.... அவங்கதான் குழந்தைங்க....நீங்களும் இப்படியா?.... நீங்க ஜிம்மிக்கு நல்லதுதானே செஞ்சிருக்கீங்க?.... எல்லோருக்கும் வருத்தமாத்தான் இருக்கு!.... நம்மளை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!.... ம்.... வாங்க சாப்பிடலாம்....
(எல்லோரும் வருத்தத்துடனே சாப்பிடுகிறார்கள்)

காட்சி - 4,
இடம் - வீடு,  மாந்தர் - ராஜசேகர், ரோஜா, ரவி, விமலா.

(ஒரு வாரம் கழிகிறது. ஒரு நாள் காலை 6.00 மணி..... --வாசற்கதவை யாரோ தட்டுகிறார்கள்!....கதவை ரோஜா திறக்கிறாள்!.... அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது!.... சந்தோஷத்தில் அனைவரையும் 
சத்தம் போட்டு எழுப்புகிறாள்!!......
---ஜிம்மி வாசலில் உட்கார்ந்து கொண்டு 
இவளைப் பார்த்து வாலை வேகமாக 
ஆட்டுகிறது!....ராஜசேகர் 
ஜிம்மியைப் பார்த்து அசந்து போகிறார்! )

ராஜசேகர் : அடேயப்பா!....ஆச்சரியமா இருக்கு!.... நாகர்கோவில் இங்கேர்ந்து 235 மைல்!....சாப்பிட்டுதா இல்லியான்னு தெரியலே!....மழை வேறே!....எப்படி இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்குது!....வழி எப்படித் தெரிஞ்சுது?...ஆச்சரியமா இருக்கு!.... என்ன விசுவாசம்!....
(ரவியும், விமலாவும்  ""ஜிம்மி! ஜிம்மி!...'' என்று 
கூவிக்கொண்டே  தூக்குவதற்கு ஓடுகிறார்கள்!)

ராஜசேகர் : இப்போ தூக்காதீங்க... அதன் காலெல்லாம் சேறு!....நனைஞ்சிருக்கு!.....பசி இருக்கும் முதல்லே உங்க கிட்டே இருக்கிற பிஸ்கெட்டை அதுக்குக் குடுங்க....அப்புறம் குளிப்பாட்டுங்க....அப்புறம் தூக்குங்க,....கொஞ்சுங்க....
விமலா : ரவி, அந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துக்கிட்டு வா!....
(ஜிம்மிக்கு இரைக்கிறது!...கண்களில் நீர்....நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டே  வாலை வேகமாக ஆட்டுகிறது!....விமலா நெற்றியைத் தடவுகிறாள்.... ஈரம்.... -ரவி பிஸ்கெட் பாக்கெட்டோடு வருகிறான்... பிஸ்கெட்டைக் கொடுத்துத் தண்ணீரும் கொடுக்கிறார்கள்.... ராஜசேகர் அதைத் தூக்கிக்கொண்டுபோய் நாய் சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டுகிறார்.....துடைத்து விடுகிறார்கள்.... ஜிம்மி விமலாவின் மீது தாவுகிறது!.... தன்னுடைய பிரிவாற்றாமையை எல்லோரிடமும் காட்டுகிறது!.... --- சோமுவிடமிருந்து நாயைக் காணவில்லை என்று போன் வருகிறது. ராஜசேகர் சிரித்துக்கொண்டு அது பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது எனக்கூறுகிறார்---)

காட்சி - 5,
இடம் - வீடு,   மாந்தர் - ராஜசேகர், ரோஜா, ரவி, விமலா.

ராஜசேகர் : ரோஜா, ரவி, விமலா!.... எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி!.... நாம் எல்லோரும் வேறு வீட்டுக்குப் போகிறோம்!.... வீடு பார்த்துவிட்டேன்.....நாளைக்கே கிளம்புகிறோம்!.... நம் வீட்டை வாடகைக்கு விட்டுவிடலாம்!.... ஜிம்மி நம்மை விட்டு எங்கேயும், எப்பவும் பிரியவேண்டியதில்லை!.... 
(ரவி, விமலா இருவரும் அப்பாவைக் கட்டிக் கொள்கிறார்கள்.  அப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறார்கள். ஜிம்மியும் வாலை ஆட்டிக்கொண்டு பக்கத்தில் வந்து நிற்கிறது. 
அடுத்த நாளே புதிய வீட்டிற்குச் செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது!)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com