அரங்கம்: ஓசோன்

இப்போ என்ன பண்றது,  போலாமா வேண்டாமா? 
அரங்கம்: ஓசோன்


காட்சி : 1
நேரம் :  அதிகாலை 
இடம் : ஓசோன் படலம்  / பாதுகாப்பு நிலைய வாசல் 
பாத்திரங்கள்  : ஓன், சோன்,  ரோமோன்.
(மூவரும் உள்ளே பார்க்கிறார்கள்.)

ஓன் : இப்போ என்ன பண்றது,  போலாமா வேண்டாமா? 
சோன் : இங்கயும் வந்து ஆரம்பிச்சுட்டியா?  எப்பப் பாரு ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கே..  நீ ஒரு கேள்விக்குறி . 
ரோமோன் : இப்ப இது ரொம்ப முக்கியமா?  அங்க போனா நிச்சயமா நம்மள போர்முனைக்கு அனுப்பிருவாங்க. 
ஓன் : போர் முனைக்குப் போனா என்ன ஆகும்? 
சோன் : ம்ஸ்ஸ்..  எடுத்த ஒடனே போர்முனைக்கு அனுப்ப மாட்டாங்க..  ஒருநாள் முழுக்க வகுப்பெடுப்பாங்க.. 
ரோமோன் : சரி..  எது எப்படி நடக்குமோ..  நம்ம கடமை எதிரியை எதிர்த்துச் சண்டை போடுறது..  வா,  போய் என்னதான் நடக்கும்னு பார்க்கலாம்.
(மூவரும் உள்ளே நுழைகிறார்கள்)

காட்சி : 2 
நேரம் :  காலை 
இடம் : ஓசோன் படலம்  / பாதுகாப்பு நிலையம் 
பாத்திரங்கள்  :  முதன்மை அதிகாரி, ஓன்,
சோன்,  ரோமோன்.

(முதன்மை அதிகாரி  அறைக்குள் வருகிறார்) 
முதன்மை அதிகாரி  :  போர்க்களத்தில் கால் வைக்க வந்திருக்கும் உங்களை நான் வரவேற்கிறேன்..
ஓன் : இதைத் தவிர எங்களுக்கு வேற என்ன வேலை இருக்கு,  சார்? 
சோன் : ஏய்,  கேள்விக்குறி, ரொம்பக் கேட்க ஆரம்பிச்சுடாத ..  பயிற்சியே இல்லாம போருக்கு அனுப்பிடப் போறாங்க.. 
ரோமோன் : சார்,  இவனுங்க இப்படித்தான் நீங்க சொல்லுங்க.. 
முதன்மை அதிகாரி :  உங்களுக்கான வேலை சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில் இருக்கும் எதிரியை அழிப்பதுதான்..  
ஓன் : அது எப்படி ?
முதன்மை அதிகாரி :  சொல்றேன்.. கவனிங்க..
(மூவரும் நிமிர்ந்து உட்காருகிறார்கள்)

காட்சி : 3 
நேரம் :  காலை 
இடம் : பாதுகாப்பு நிலையம் / பயிற்சி அறை 
பாத்திரங்கள்  :  முதன்மை அதிகாரி, ஓன்,
சோன்,  ரோமோன்.

முதன்மை அதிகாரி :  சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில்  "புறஊதா' னு ஒரு கதிர் இருக்கு..
புவிவாசிகளுக்கு அது கேடு விளைவிக்கும்..                                          
ரோமோன்  :  தோல் வியாதி மாதிரினு என் ஃபிரெண்ட் ஒருத்தன் சொல்லுவான்.         முதன்மை அதிகாரி :  ஆமாம்..  அதுவும் ஒன்னு..  அப்படிப்பட்ட புறஊதா கதிரை நாம் நேருக்கு நேர் மோதி அழிச்சு பூலோக மக்களைக் காப்பாத்தணும்.. 
ஓன் : நேருக்கு நேரா?                                                                                                           
சோன் : அப்போ எங்களுக்கும் எதாவது ஆகும்ல..                                                              
முதன்மை அதிகாரி :  ஆகும்தான்.. உங்களோட ஒரு தலை பிரிஞ்சுடும்.. யாரோட தலை அந்த மீதி ரெட்டைத் தலைகிட்ட போகுதோ,  அவங்களோட தலை அதுகூட ஒட்டிக்கும்..  புரிஞ்சுதா?                                                                                                                 
சோன் : சுத்தம்!
 
காட்சி : 4
நேரம் :  முற்பகல் 
இடம் : ஓசோன் படலம்  / எல்லைப் பிரிவு
பாத்திரங்கள்  :  ஓன்,  சோன் .


(சூரியக்கதிர்கள் புறஊதாக் கதிர் கலந்து  வருகின்றன)
ஓன் :  ரெடியா இருக்கியா?  
சோன் :  அப்டினுதான் நினைக்கிறேன்.  நீயும் தயாரா இரு.. இன்னிக்கு இதுக்கு நாம யாருன்னு காட்றோம் !
ஒரு புறஊதாக் கதிர் ஓன் மீது படுகிறது. ஓனுடைய ஒரு தலை பிரிகிறது.
சோன் : கொஞ்சம் பொறு..  வர்றேன்..  
(ஒரு புறஊதாக் கதிர் சோன் மீது படுகிறது.
சோனுடைய ஒரு தலை பிரிகிறது. )
சோன் : என்னோட ரெட்டை தலைக்கிட்ட வா..
(ஓனுடைய பிரிந்த தலை சோனுடைய ரெட்டைத் தலையிடம் வருகிறது.)
ஓன் : ஒட்டிக்கவா?
(ஓனுடைய பிரிந்த தலை சோனுடைய ரெட்டைத் தலையுடன் இணைகிறது.)
சோன் : யெஸ் !  மறுபடியும் மூனு தலை ஆயிடுச்சு.
ஓன் :  அவ்ளோதானா? 
சோன் : அவ்ளோதான்!

காட்சி : 5
நேரம் :  வெவ்வேறு பொழுதுகள் 
இடம் : ஓசோன் படலம்  / எல்லைப் பிரிவு
பாத்திரங்கள்  :  ஓன்,  சோன்,  ரோமோன்.


முற்பகல் : ஓனுடைய பிரிந்த தலை  ரோமோனுடைய ரெட்டைத் தலையுடன் இணைகிறது.
பகல் : சோனுடைய பிரிந்த தலை ஓனுடைய ரெட்டைத் தலையுடன் இணைகிறது.
பிற்பகல் :  ரோமோனுடைய பிரிந்த தலை  ஓனுடைய ரெட்டைத் தலையுடன் இணைகிறது.

காட்சி : 6
நேரம் :  பிற்பகல்  
இடம் : ஓசோன் படலம்  / எல்லைப் பிரிவு
பாத்திரங்கள்  :  ஓன்,  சோன்,  ரோமோன்,பச்சை மிருகம்.

ஓன் :  நாம ஓசோன் மூலக்கூறா இருக்கிறது ஒரு வரம்,  இல்லையா? 
சோன் : சரியா சொன்ன,  கேள்விக்குறி..  கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இத்தனை கோடி பேரைக் காப்பாத்தறோம்னு நெனெச்சா பெருமையாத்தான் இருக்கு.. 
ரோமோன் : ஏய்..  அங்க பாரு என்னமோ ஒன்னு வருது..
(நான்கு தலைகளையுடைய ஒரு உருவம் வருகிறது.)
ஓன் : நான் கிட்ட போய்ப் பார்க்கட்டுமா? 
சோன் : ம்ஸ்ஸ்ஸ்..  சும்மா இரு.. அது என்னனே தெரியலை..
ரோமோன் : நம்மகிட்டதான் வருது.. 
(அந்த உருவம் ஓனிடம் வருகிறது. )
ஓன் : என்னை இது விட்டுடுமா?
சட்டென்று ஓனுடைய ஒரு தலை பிரிகிறது.
ஓன் : ஏய்..  ஏய்..  சோன்,  என்னைக் காப்பாத்திருவியா ?
(அந்த உருவத்தின் ஒரு தலை பிரிந்து ஓனுடைய தலையுடன் ஒட்டி எங்கோ சென்று மறைகிறது. )
சோன் : ஐயோ! ஓன்ன்ன்ன்ன்ன்ன்! 
ஓனுடைய ரெட்டைத் தலை  புதிய உருவத்தைத் துரத்திச்செல்கிறது.  

காட்சி : 7
நேரம் :  இரவு 
இடம் : ஓசோன் படலம்  / பாதுகாப்பு நிலையம் 
பாத்திரங்கள்  : சோன்,  ரோமோன்,முதன்மை அதிகாரி.


முதன்மை அதிகாரி :  என்ன நடந்துச்சு ? 
சோன் : (தேம்பி அழுதவாறு)  அந்த .. அந்த மிருகம்..  ஓனோட ஒரு தலையைப் பிச்சு எடுத்துட்டுப் போயிடுச்சு.. 
முதன்மை அதிகாரி :  அந்த மிருகம் பார்க்க எப்படி இருந்துச்சு..?
ரோமோன் : மூனு பச்சைத் தலை. ஒரு சின்ன நீலத் தலை.. 
சோன் : (அழுதபடி) அது என்ன?  ஓன் எங்க?  கிடைச்சுருவானா? 
(முதன்மை அதிகாரி  அமைதியாக இருக்கிறார்) 

காட்சி : 8
நேரம் :  நள்ளிரவு  
இடம் : பாதுகாப்பு நிலையம்/ கண்காணிப்பாளர் அறை. 

பாத்திரங்கள்  : சோன்,  ரோமோன்,  முதன்மை அதிகாரி,  கண்காணிப்பாளர்.
கண்காணிப்பாளர் :  இது ஓசோன் படலத்தோட பல இடங்கள்ல நடக்குற பிரச்சனை..  இதை நாம் எதுவும் பண்ண முடியாது..
முதன்மை அதிகாரி  : வந்த மிருகத்தோட பேர் என்ன?  அது நம்மள என்ன பண்ணுது? 
கண்காணிப்பாளர் :  நாமதான் ஓசோன் மூலக்கூறுகள்.  நம்மகிட்ட இருக்கிற மூனு தலைகள் மூனு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது.  சூரியனோட புற ஊதாக் கதிரை அழிக்க நம்மாலதான் முடியும்.. 
(அனைவரும் கவனிக்கிறார்கள். )
கண்காணிப்பாளர் :  நேத்து நீங்க பார்த்த மிருகத்தோட பேர் இஊஇ.  பூமியிலிருந்து வந்தது..
ரோமோன் : (அதிர்ந்து) பூமியிலிருந்தா?
கண்காணிப்பாளர் :  ஆமா..  அவங்க பயன்படுத்தும் குளிர்சாதனங்கள்,  எரிபொருள் போன்றதிலிருந்து வருது.. 
சோன் : அது நம்மள என்ன பண்ணுது?
கண்காணிப்பாளர் : புற ஊதா கதிரால் தாக்கப்படும்
இஊஇயிலிருந்து க்ளோரின் அணு பிரியுது.. அப்படிப் பிரிஞ்ச அணுதான் ஓனோட ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துச் சேர்த்துக்கிட்டு அவனை அழிச்சிடுச்சு..
(அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.  )

 காட்சி : 9
நேரம் :  காலை 
இடம் : ஓசோன் படலம்  / எல்லைப் பிரிவு 
பாத்திரங்கள்  : சோன்,  ரோமோன்.

சோன் :  நாம ஏன் இஊஇகளை முதல்ல அழிச்சுடக்கூடாது? 
ரோமோன் : அவர் சொன்னார்ல..  நம்மால புறஊதா கதிர்களைத்தான் அழிக்கமுடியும்..  இஊஇயை இல்ல.. 
சோன் :  இது என்ன நியாயம்?  நாம பூமி மக்களைக் காப்பாத்தப் போராடிக்கிட்டு இருக்கறப்போ அவங்க ஏன் நம்மளை அழிக்கனும்னு நினைக்கிறாங்க? 
ரோமோன் : நீ இப்போ ஓன் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டேயிருக்கே.
(சோன் அமைதியாக இருக்கிறான்)
 
ரோமோன் : எது எப்படினாலும் நாம பூமியைப் பாதுகாக்கப் போராடுவோம். 
சோன் :  ஆமா..  ஓனும் இதைத்தான் சொல்லியிருப்பான்,  இல்லியா?
(இருவரும்  சோகமாகச் சிரிக்கிறார்கள்)

காட்சி : 10
நேரம் :  பகல் 
இடம் :  பூமி / வெவ்வேறு இடங்கள் 
பாத்திரங்கள் : CFC

(CFC-கள் கூட்டம் கூட்டமாக ஓசோன் படலத்தை நோக்கி வருகின்றன) 

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com