அரங்கம்: சிலை!

(அங்கே வந்து) ஐயா,  தாங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் கிடைத்தது.
அரங்கம்: சிலை!


காட்சி : 1
இடம் : அமைச்சரின் இல்லம் / தோட்டம். 
நேரம் : மாலை 
மாந்தர் : அமைச்சர், வயிரவர்.
(அமைச்சர், தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்.)

வயிரவர் : (அங்கே வந்து) ஐயா,  தாங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் கிடைத்தது.
அமைச்சர் : வாருங்கள், வயிரவரே .. சிறப்பான சிலைகள் தேவை என்றால் உங்களைத் தவிர வேறு யார் நினைவுக்கு வருவார்கள்?
வயிரவர் : ( நாணத்துடன்)  தங்கள் புகழுரைக்கு நன்றி,  ஐயா!   இந்த நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் நான் தொடர்ந்து செயல்புரிய கடவுள் எனக்கு அருள்புரிவாராக ..
அமைச்சர் : ம்ம்ம்.. சிற்பி வயிரவரே,  இளவரசரின் பிறப்பையொட்டி நாடு முழுவதிலும் கொண்டாட்டங்கள் நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார் நம்  மன்னர்.
வயிரவர் : ஆஹா .. இதைக் கேட்கும்பொழுதே என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறதே ..
அமைச்சர் : நன்று ! மேலும் , அண்டை நாட்டு மன்னர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டு அரண்மனையில் சிறப்பு விருந்தும்  நடைபெறப் போகிறது .. விழா. வருகின்ற பெüர்ணமியில்!....  இன்னும் பத்து நாட்களே உள்ளன....இவ்விழாவைச் சிறப்பிக்கத்தான் நீங்கள் ஆயிரம் சிலைகள் செய்துதர வேண்டும் ..
வயிரவர் : ( அதிர்ந்து ) ஐயோ .. என்ன சொல்லுகிறீர்கள் .. பத்து நாள்களுக்குள் ஆயிரம் சிலைகள் வேண்டுமா?  அது முடியாதே ..
அமைச்சர் : இது மன்னரின் கட்டளை ...மீற முடியாது ..
(வயிரவர் உறைந்து போய் நிற்கிறார்!) 

காட்சி : 2
இடம் : வயிரவரின் இல்லத்துச் சிற்பக்கூடம்.
மாந்தர் : வயிரவர்,  மதியழகன்.
(இரவு பகலாக சிலையைச் செதுக்குகிறார்! கண்கள் சிவந்திருக்கின்றன. அதிகாலை : வயிரவர் கையில் உளியுடன் தூங்கிக்கொண்டிருக்கிறார். வயிரவர் சூரியவொளி முகத்தில்பட்டு கண்விழிக்கிறார்!)

வயிரவர் :  (பதறி) ஐயோ!
(சிதைந்த முகத்துடன்  இருக்கும் உருவத்தைப் பார்த்து அதிர்கிறார்)
வயிரவர் : என்ன காரியம் செய்துவிட்டேன்!  ஒரு சிலையாவது செதுக்கிவிடலாம் என்று நினைத்திருந்தேனே .. அதுவும் மோசம் போயிற்றே!
(வயிரவர் அழத்தொடங்குகிறார்.)
மதியழகன : ஐயா, அழாதீர்கள்.  ஐயா, நான் சிலையல்ல... உங்களுக்கு உதவி செய்கிறேன்.  ஆயிரம் சிலைகளை நான் செய்து தருகிறேன். .
(வயிரவர் நிமிர்ந்து பார்க்கிறார்)
வயிரவர் : உண்மையாகவா ?  உன்னால் இயலுமா?
மதியழகன் : இயலும். என் தந்தையும் ஒரு சிற்பக் கலைஞர்தான். சிறுபருவத்திலிருந்தே  எனக்குச் சிற்பக் கலையைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்..அதுவும் அதிவிரைவான முறையில் ..
வயிரவர் : ஆனால்,  உன்னைப் பார்த்தால் .. ( சொல்லத் தயங்குகிறார்)
மதியழகன் : என் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயங்களை வைத்துச் சந்தேகப்படுகிறீர்களா .. இவை நான் போர்
வீரனாக இருந்த போது ஒரு மன்னனால் ஏற்படுத்தப்பட்டவை .. அதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.. நான் சிலைகள் செய்துதர வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை ...
வயிரவர் : சொல்.. எதுவாக இருந்தாலும் சொல் ..
மதியழகன்  நிபந்தனையைச் சொல்கிறார். வயிரவரின் கண்கள் அகல விரிகின்றன. 

காட்சி : 3
இடம் : அரண்மனை
மாந்தர் : மன்னர் சித்திரவர்மர்,  அமைச்சர்.

சித்திரவர்மர் : (கோபமாக) என்ன? துணியால் மூடிய  சிலையை விழாவின்போது நடுசபையில் வைக்க வேண்டுமா? அந்தச் சிற்பி விளையாடுகிறாரா? பிற நாட்டு மன்னர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?
அமைச்சர் : எனக்கும் புரிகிறது,  மன்னா. ஆனால்,  இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரம் அழகான சிலைகளைச் செய்திருக்கிறாரே..  அப்படிப்பட்ட செயலுக்காக அவரது ஒரே ஒரு நிபந்தனையை நாம் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். .
(சித்திரவர்மர் சிறிது நேரம் சிந்திக்கிறார்)
சித்திரவர்மர் : சரிதான்,  அமைச்சரே .. ஆனால், எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது வம்பிழுக்கும் அண்டை நாட்டு மன்னர் மணிமாறன்,  நம்மை அனைவர் முன்னிலையிலும் இதைக் காட்டி இகழ்ந்து பேசினால் ..?
அமைச்சர் : மன்னா, இதில் ஏதோ விஷயம் இருக்கிறது!...சிற்பி சொன்னதுபோல் செய்து விடுவோம்!
மன்னர் : ம்ம்ம்.... சரி உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்!....

காட்சி : 4
இடம் : அரண்மனை,  நேரம் : முற்பகல் 
மாந்தர் : சித்திரவர்மர், சந்திரமந்திரர், கவிராயப்பர் ,  மணிமாறன்.

சித்திரவர்மர் : (உரக்க) வாருங்கள்,  வேந்தர்களே.. உடலும் உள்ளமும் உற்சாகம் பெறும் இந்த விழாவிற்கு வாருங்கள் .. இளவரசனுக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள் ..
சந்திரமந்திரர் : தாரளாமாக வழங்குகிறோம்,  சித்திரவர்மரே .. அதற்குத்தானே வந்திருக்கிறோம் ..
கவிராயப்பர்  : ஆஹா .. எத்தனை வண்ண மலர்கள்! எவ்வளவு பரவசமூட்டும் திரவியங்கள்! வரும் வழியெல்லாம் என்னே அழகான சிலைகள் .. கலைப் படைப்புகளில் உம் நாட்டிற்கு ஈடு இணையே கிடையாது..
சித்திரவர்மர் : நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் இது என்னைப் புகழ்ந்து பேசுவதற்கான வேளை அல்ல. . இருப்பினும் இதைப்  பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் ..
(மணிமாறன் வருகிறார்)
மணிமாறன் : ஏன் , மன்னா ? எங்களுக்கு  அழைப்பு விடுத்ததே இவற்றை எல்லாம்  காண்பித்து வீண் புகழ்ச்சி வாங்கத்தானே ..இப்போது  ஏன் மறுக்கிறீர்கள்..?
சித்திரவர்மர் : மணிமாறா,  இன்று ஒருநாள் என்னை விட்டுவிடு.. விருந்தினரைக் கவனிக்க வேண்டும்.
மணிமாறன் : (ஏளனமாக)  என்னைப் பார்த்தால்,  ஏன்தான் தன்னடக்கம் கொள்கிறீர்களோ !
(சித்திரவர்மர் அமைதியாக இருக்கிறார்.) 

காட்சி : 5
இடம் : அரண்மனை 
மாந்தர் : விழா கலைஞர்கள் மற்றும் பிறநாட்டு மன்னர்கள்.

(பகல் : விழா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மன்னர்கள் அனைவரும் ரசிக்கிறார்கள்.
பிற்பகல் : விருந்து நடைபெறுகிறது.  மன்னர்கள் அனைவரும் உணவருந்துகிறார்கள்.
மாலை : மன்னர்கள் ஒவ்வொருவராக வந்து பரிசுகளைக் கொடுக்கிறார்கள்.)

காட்சி : 6
இடம் : அரண்மனை 
நேரம் :  மாலை 
மாந்தர் : சித்திரவர்மர்,  அமைச்சர் , மணிமாறன்,  சிலை ,  மன்னர்கள்.
(சித்திரவர்மரும் அமைச்சரும் தொட்டிலருகே நிற்கிறார்கள்)

அமைச்சர் : ( ரகசியமாக)  இன்னும் மணிமாறன் மட்டும்தான் வாழ்த்திப் பரிசு கொடுக்க வேண்டும். 
(மணிமாறன்  மூடியிருக்கும் சிலையைக் கடந்து வருகிறார்)
மணிமாறன் :  சித்திரவர்மரின் நாட்டுக்காகப் வாழ்த்திப் பரிசளித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்!   ( ஏப்பம் விடுகிறார்)
அப்படியே சித்திரவர்மரின் நாட்டவர் யாராவது  என்னுடன் வாட்போர் செய்து வெற்றி கொண்டால் மட்டுமே நான் பரிசளிப்பேன்....... விழாவும் சிறப்பாக இருக்கும்!....  இல்லையேல்! ..... (சிரிக்கிறார்) -- இதைக்கேட்ட மன்னர் சித்திரவர்மர் முன் செல்ல,  அமைச்சர் அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார்.)
அமைச்சர் : மன்னா,  இப்போது இந்த நல்ல வேளையில் சண்டை வேண்டாம்!....அவன் மூர்க்கத்தனம் பிடித்தவன்!  யாரும் முன்வரவில்லை என்றால் நாம் செல்வோம்!

(சித்திரவர்மர் அமைதியாகிறார்.  மணிமாறன் உரக்கச் சிரிக்கிறான். சுற்றிலும் அமைதி நிலவுகிறது. அப்போது ஒரு குரல்...)
குரல் : நான் வருகிறேன்,  வாட்போர் புரிய..
(அனைவரும் தலையைத் திருப்புகிறார்கள்....துணியால் போர்த்தப்பட்டிருந்த நிலையில் உடைவாளை உருவுகிறது சிலை .....மணிமாறனும் துணியால் மூடப்பட்டிருக்கும் சிலையும் மிகவும் வன்மையாகச் சண்டையிடுகிறார்கள். மன்னர்கள் அனைவரும் கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். நீண்ட நேரம் கழித்து,  மணிமாறனைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் உடைவாளை வைக்கிறது சிலை....)

காட்சி : 7
இடம் : அரண்மனை
நேரம் :  இரவு
மாந்தர் : சித்திரவர்மர்,  அமைச்சர் , மணிமாறன்,  சிலை/மதியழகன்  , மன்னர்கள்.
அமைதி நிலவுகிறது. மணிமாறன் எழுகிறார்.

மணிமாறன் : ( சிலையிடம்)  வீரனே .. உன் வேகம் .. உன் வீச்சு..இவ்வளவு திறமை இருந்தும் ஏன் உன்னைத் துணியால் மறைத்துக்கொண்டிருக்கிறாய்?
சிலை : நான் இல்லை .. என்னை விரும்பாதவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்..
(மணிமாறன் சிலையைக் கட்டியிருக்கும் துணியை இழுக்கிறார்.  கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது)
மணிமாறன் :  யார் நீ?
மதியழகன் : பல ஆண்டுகளுக்கு முன்னால் அரவநதிப் போரில் உங்களால் முகம் சிதைக்கப் பெற்றவன்.. பெயர் மதியழகன்.
மணிமாறன் : ( அதிர்ந்து)  என்னால் நம்பமுடியவில்லை.. ஆனால், இப்போதுதான் உன் வீரம் கண்டு வியந்தேனே .. சித்திரவர்மரே .. என்ன இது .. இப்படிப்பட்ட வீரனை அறிந்துகொள்ளாமல்விட்டது நியாயமா?
(சித்திரவர்மர் அமைதியாக இருக்கிறார்.)
மணிமாறன் :  இந்த விழாவிற்கு மன்னர்களுக்கு மட்டுமே அழைப்பு என்பதால், இப்படிப்பட்ட திறமைசாலிகளுக்கு நீ மதிப்பளிக்கத் தவறிவிட்டாயே ..  இது நியாயமா?
சித்திரவர்மர் : இல்லை.. இல்லை.. இல்லை.. உயர்வு என்பது செல்வத்தில் இல்லை.. செயலில்தான் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் உதவுவதில்தான் இருக்கிறது.. . புரிந்துகொண்டேன். வீரனே,  இனிமேல் என் தலைமைத் தளபதிகளில் நீயும் ஒருவன்.....

(சித்திரவர்மர்,  மதியழகனை ஆரத் தழுவுகிறார். அனைவரும் மகிழ்ச்சியுடன் புறப்படுகிறார்கள்)

-  திரை  -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com