அதிர்ஷ்டம்

ஓ.. எதுக்கு சிரிச்சேன்னு தெரியலை-ம்மா.. ஆனா, வழக்கம்போல நான் அந்த சிவப்புப் புள்ளிமீன் கூட விளையாடற மாதிரி ஒரு கனவு வந்துச்சு
அதிர்ஷ்டம்

அரங்கம்
 காட்சி : 1

 இடம் : கியாரா தீவு / கொடிமலரின் வீடு
 நேரம் : காலை 7.55
 மாந்தர் : கொடிமலர் மற்றும் நிறைமொழி.
 
 (கொடிமலர் தூக்கக் கலக்கத்துடன் நடந்து வருகிறாள்.)
 கொடிமலர் : ம்மா.. அதுக்குள்ள மீன் புடிச்சுட்டு வந்துட்டீங்களா.. இன்னிக்கி எத்தனை மீன் கெடச்சுது?
 நிறைமொழி : (எழுதியபடி தலைநிமிராமல்) ஆறு.. அஞ்சு பெரிய மீன்.. ஒரு சின்ன மீன்..
 கொடிமலர் : எல்லாத்தையும் வித்தாச்சா?
 நிறைமொழி : (எழுதியபடி தலைநிமிராமல்) ம்ம்ம்.. அதிசயமா ஆறு மணிக்கே ஒரு சுற்றுலாப் பயணிகள் படகு வந்துச்சு ..அவங்களே அத்தனையையும் வாங்கிட்டாங்க..
 கொடிமலர் : சரிங்கம்மா.. நான் போய்க் குளிச்சிட்டு வகுப்புக்குப் புறப்படறேன்..
 நிறைமொழி : (தலை நிமிர்ந்து) ஏய் மலர், நில்லு.. விடியகாலையில நான் புறப்படுறப்போ நீ தூக்கத்துல சிரிச்சிட்டிருந்தப் பார்த்தேன்.. அழகாயிருந்துச்சு .. என்ன கனவுன்னு எதாவது ஞாபகம் இருக்குதா?
 கொடிமலர் : ஓ.. எதுக்கு சிரிச்சேன்னு தெரியலை-ம்மா.. ஆனா, வழக்கம்போல நான் அந்த சிவப்புப் புள்ளிமீன் கூட விளையாடற மாதிரி ஒரு கனவு வந்துச்சு ..
 (கொடிமலர் திரும்பி நடக்கிறாள்)
 நிறைமொழி : சீக்கிரமா வா, சாப்பாடு ஆறிடப்போகுது..
 (நிறைமொழி, வாயில் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் சிவப்புப் புள்ளி மீனின் படத்தைப் பார்க்கிறார்)
 
 காட்சி : 2
 இடம் : கியாரா தீவு / கடற்கரை இளநீர்
 நேரம் : மதியம் 1 மணி
 மாந்தர் : நிறைமொழி மற்றும் கனகமாலை.
 கனகமாலை : கொடிமலருக்கு அந்தச் சிவப்பு மீனைப் பத்தி எப்படித் தெரியும்? அந்தப் படம் எங்கிருந்து கிடைச்சுது?
 நிறைமொழி : போன வருஷம் வந்த ஒரு டூரிஸ்ட் பையன் கொடுத்தது.. ஏதோ புத்தகத்திலிருந்து வெட்டிக் கொடுத்திருக்கான்.. அவன்தான் அந்த மீனைப் பத்தியும் சொல்லியிருக்கணும்..... ம்ம்ம்.. டூரிஸ்ட் பையன் சொல்லிட்டுப் போய்ட்டான்.. சிவப்புப் புள்ளி மீனைப் பார்க்கறதுனா என்ன, சுலபமா ? அம்பது வருஷமா கடல்நீரே கதின்னு கிடக்கறவங்களே ரெண்டு மூனு தடவதான் பார்த்திருப்பாங்க..
 நிறைமொழி : கொடிமலருக்கும் இதெல்லாம் தெரியும்.. இருந்தாலும் அவளுக்கு அப்படியொரு ஆசை..
 கனகமாலை : கடற்கரையில ஒரு தொப்பிக்கடை போடணும்னு ரொம்ப மாசங்களா காசு சேர்த்துட்டிருக்கியே.. எவ்வளவு ஆயிருக்கு ?
 நிறைமொழி : அது இருக்கு.. மீதியை இன்னும் எட்டு மாசத்துல சேர்த்திர்லாம்.. அடுத்த வருஷமே கடை .. டூரிஸ்ட்டுங்க கூட்டம்.. தொப்பிங்களுக்கு கிராக்கி... சீக்கிரமே நடக்கத்தான் போகுது..
 கனகமாலை : கேக்கவே சந்தோஷமா இருக்கு .. இன்னொரு இளநீர் குடிக்கிறியா?
 நிறைமொழி : இல்ல, போதும்.. மலருக்கு மட்டும் ரெண்டு தனியா சீவிக் கொடு..

காட்சி : 3
 இடம் : கியாரா தீவு / வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : கொடிமலர் மற்றும் நிறைமொழி
 
 அதிகாலை : நிறைமொழி கண்ணாடி முகமூடியுடன் கடலுக்குள் குதிக்கிறார்.
 பகல் : கொடிமலர், வகுப்பறையில் அமர்ந்து பாடத்தைக் கவனிக்கிறாள்.
 இரவு : நிறைமொழியும் கொடிமலரும் ஆழ்ந்து உறங்குகிறார்கள்.

காட்சி : 4
 இடம் : கியாரா தீவு / மேகநாதனின் தோட்டம்
 நேரம் : மாலை 5.30
 மாந்தர் : மேகநாதன் , நிறைமொழி மற்றும் கனகமாலை.
 (மேகநாதன் கைகழுவிவிட்டு வருகிறார்.)
 மேகநாதன் : மத்தியானம் சாப்பிட நேரமில்லாம போயிடுச்சு, ஒரே பசி.. இப்போத்தான் சாப்பிட்டேன் .. நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டுடீங்களா.. ?
 கனகமாலை : சாப்டாச்சுங்க, தாத்தா.. நீங்க வர சொன்னதா தகவல் கெடச்சுது... அதான் அப்டியே கையோட கிளம்பி வந்துட்டோம்..
 மேகநாதன் : ம்ம்ம்.. உங்கள்ல யாரு கடலுக்கடியில போய் காத்திருந்து மீன் பிடிக்கறது ?
 நிறைமொழி : நான்தான், தாத்தா.
 மேகநாதன் : அப்போ உங்களோட உதவிதான் தேவைப்படுது.. தென்பக்கம் இருக்கற பவளப்பாறை இடுக்குல ஒரு பெட்டி சிக்கியிருக்கு.. அதை பக்கத்துத் தீவு ஆளுங்க எடுக்கறக்கு முன்னாடி நாம எடுத்துறணும்.. உங்களால முடியுமா?
 (நிறைமொழி எதுவும் சொல்லாமல் விழிக்கிறாள்)
 மேகநாதன் : உங்க தயக்கம் புரியுது.. அதுக்குள்ள ஒரு சின்ன மோதிரம் இருக்கு.. அவ்ளொதான்.. பெட்டியை நீங்க கொண்டு வந்தா.. உங்களோட ஒரு வருஷ வருமானத்துக்கு நிகரான பணத்தை நான் தரேன்.. என்ன சொல்றீங்க?
 நிறைமொழி : (திகைப்பில்) சரிங்க .. ஆனா.. நீங்க சொன்ன மாதிரி.. பணம்.. கண்டிப்பா..
 மேகநாதன் : கண்டிப்பா கொடுத்துறுவேன் .. சந்தேகமே வேண்டாம்..
 நிறைமொழி : சரி, தாத்தா.. நாளைக்கு விடியகாலையிலியே போய்த் தேட ஏற்பாடு பண்றோம் ..
 (மேகநாதனின் முகத்தில் புன்னகை அரும்புகிறது)
 
 காட்சி : 5
 இடம் : கியாரா தீவு / கொடிமலரின் வீடு
 நேரம் : அதிகாலை 2.20
 மாந்தர் : கனகமாலை நிறைமொழி மற்றும் கொடிமலர்.
 
 கனகமாலை : என்ன, கிளம்பியாச்சா ?
 நிறைமொழி : ம்ம்ம்.. எல்லாம் தயார்.. நேரா போய் கடலுக்குள்ள குதிக்கிறதுதான்..ஸ்ஸ்ஸ், மலருக்கு சாப்பிட ஒன்னும் பண்ணி வெக்கல.. அவ எந்திரிச்சதும் ஏதாவது செஞ்சு கொடுத்திரு..
 கனகமாலை : அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. கவலைப்படாதே..
 நிறைமொழி : ஒன்னு கேக்கட்டுமா.. (தயக்கமாக) உனக்கு, இந்த விஷயத்துல என்ன நடக்கும்னு தோனுது..?
 (கனகமாலை அமைதியாகப் பார்க்கிறார்)
 கனகமாலை : அடுத்த வாரம் நீ தொப்பிக்கடையில வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியிருக்கும்னு தோனுது ..
 நிறைமொழி சிரிக்கிறார்.
 (கொடிமலர் புரண்டு படுத்துத் தூங்குகிறாள்)
 
 காட்சி : 6
 இடம் : கியாரா தீவு / கடல்
 நேரம் : அதிகாலை 4 மணி
 மாந்தர் : நிறைமொழி
 மணி 2.55 : நிறைமொழி கடலுக்குள் குதித்து கீழே நீந்துகிறார்.
 மணி 3. 30 : நிறைமொழி பவளப்பாறையின் இடுக்கில் தேடுகிறார்.
 மணி 5. 15 : நிறைமொழி பவளப்பாறையில் தேடுவதை நிறுத்தி நேர்க்கோட்டில் விரைவாக நீந்துகிறார்.
 
 காட்சி : 7
 இடம் : கியாரா தீவு / கொடிமலரின் வீடு
 நேரம் : காலை 7.55
 மாந்தர் : நிறைமொழி , கனகமாலை மற்றும் கொடிமலர்.
 
 (நிறைமொழி அமைதியாக இருக்கிறாள்)
 
 கனகமாலை : நீ என்ன பண்ணியிருக்கேனு தெரியுமா? சுலபமா கெடைக்க இருந்த ஒரு வருஷ வருமானத்தை இழந்திருக்க .. உனக்குப் பின்னாடி வந்த பக்கத்துத்தீவு ஆளுங்க அந்தப் பொட்டியைக் கண்டுபிடிச்சு எடுத்துட்டுப் போய்ட்டாங்க ... ஆனா, நீ..
 நிறைமொழி : ( இடைமறித்து) சரி.. சரி.. போதும்.. அதையே சொல்லிட்டிருக்காத .. என்ன பண்றது.. திடீர்னு அந்த சிவப்புப் புள்ளி மீன் என்னைத் தாண்டிப் போச்சு.. மனசுல வேறெதுவுமே ஓடல.. அதைத் துரத்திட்டுப் போய்ட்டேன் ..
 கனகமாலை : ஒரு வருஷப் பணம்.. இப்படி அதிர்ஷ்டத்தைக் கோட்டைவிட்டுட்டியே ..
 நிறைமொழி : அன்னிக்கு நீதானே சொன்னே, கடல்லியே அம்பது வருஷமா இருக்கறவங்களே அந்த மீனை ரெண்டு மூனு வாட்டித்தான் பார்த்திருக்காங்கனு .. ஞாபகம் இருக்கா?
 (கனகமாலை தலையசைக்கிறார்.)
 நிறைமொழி : ம்ம்ம்.. இப்பப் பாரு.. எம் பொண்ணு.. பதினாலு வயசுதான்.. அந்தச் சிவப்புப் புள்ளி மீன்கூட விளையாடிட்டிருக்கா ..
 (கொடிமலர் மீன்தொட்டிக்குள் சிவப்புப் புள்ளி மீனைப் பார்த்தபடி நிற்கிறாள்)
 நிறைமொழி : இது அதிர்ஷ்டம் இல்லியா.. ? தொப்பிக்கடை போனா போகுது.. இன்னும் எட்டே மாசம்.. பணம் சேர்த்தா ஆரம்பிச்சுடலாம்.. ஆனா, இந்த மீன்? கொடிமலரோட சந்தோஷம்? அப்ப விட்டுருந்தா கிடைச்சிருக்குமா?
 (கனகமாலை சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்.)
 கனகமாலை : ம்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. ஆனா, அதிர்ஷ்டம் கொடிமலருக்குத்தான் .. உன்னை மாதிரி ஒரு அம்மா கிடைச்சதுக்கு ..
 
 (நிறைமொழி கனகமாலையைப் பார்த்துச் சிரிக்கிறார்.
 கொடிமலர் சிவப்புப் புள்ளி மீனைப் பார்த்துச் சிரிக்கிறாள்.)
 (திரை )
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com