அகில்குட்டியின் டைரி!: பிள்ளையார் எறும்பு!

காகாலையில் வாசலுக்கு வந்தேன்..... காலுக்குக் கீழே ஏதோ ஊர்வது போல் இருந்தது!.... கீழே பார்த்தேன். அட! பிள்ளையார் எறும்பு!.... "கிடுகிடு' வென்று நிறைய ஏறி விட்டது. எனக்குக்கு "குறுகுறு' வென்று இருந்தது.


காகாலையில் வாசலுக்கு வந்தேன்..... காலுக்குக் கீழே ஏதோ ஊர்வது போல் இருந்தது!.... கீழே பார்த்தேன். அட! பிள்ளையார் எறும்பு!.... "கிடுகிடு' வென்று நிறைய ஏறி விட்டது. எனக்குக்கு "குறுகுறு' வென்று இருந்தது. ""அம்மா!.... இங்க பாருங்க!'' ன்னு கத்தினேன்.  அரிசி மாவில் கோலம் போட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பிள்ளையார் எறும்புகள் வந்திருந்தது!

அம்மா முகத்திலே புன்னகை!.... ""பிள்ளையார் சதுர்த்தி வருது இல்லே!.... அதான் பூர்ணகொழுக்கட்டையைக் கேட்கிறார் போலிருக்கு!.... அந்த எறும்புகளை ஒன்றும் செய்துவிடாதே!.... பாவம்! '' என்றார் அம்மா. 

அதற்குள்ளே ரகுவும் வந்து விட்டான். ""பார்த்துடா!.... இங்கே பிள்ளையார் எறும்பு வந்திருக்கு!'' அப்படீன்னேன்.

ஜானகி சித்திகிட்டே, "" இந்த எறும்புகளுக்குப் பிள்ளையார் எறும்புன்னு பேர் வந்தது?....'' என்று கேட்டான் ரகு. 

ஜானகி சித்தி எங்களைப் பார்த்து, "" அது ஒரு சுவாரசியமான கதை!. உட்காருங்க!..... சொல்றேன்!...... விநாயகருக்கு நெய்யும், பருப்பும் போட்டு ஒரு பெரிய உருண்டை சாதத்தைக் கொடுத்தாள் அன்னை பார்வதி!.... அப்போது பார்வதி தேவிக்கு பரமேஸ்வரர் மேலே ஒரு சந்தேகம் வந்தது!.... இவர் உண்மையிலேயே எல்லா உயிரினங்களுக்கும் படி அளக்கிறாரா என்று!....

பார்வதி தேவி சின்னச் சின்னக் கறுப்பு  எறும்புகளைப் பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி விட்டார்..... எப்படி இந்த எறும்புகளுக்கு பரமேஸ்வரர் படி அளக்கிறார்னு பார்க்கலாம்னு நெனைச்சாங்க.... 

மறுநாள்.... பார்வதி ஈசனைப் பார்த்து, "நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளந்தீரா?' ன்னு  கேட்டாங்க.... அவரும் சிரித்துக் கொண்டே, "அதிலென்ன சந்தேகம்!' னு கேட்டார். 

பார்வதி தான் மூடி வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தார். அதில்!.... ஒரு உருண்டை அளவு சாதம் இருந்தது!.... அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன!.... "இதென்ன விந்தை!' ன்னு நெனச்சாங்க.... 

பரமேஸ்வரர் சிரித்துக்கொண்டே, "என்ன ஆச்சரியமா இருக்கிறதா?.... நீ விநாயகரைப் போய்ப் பார்!....உன் சந்தேகம் எல்லாம் தெளிந்து விடும்!' என்றார். 

விநாயகரைப் பார்த்த பார்வதி அதிர்ந்து போனார்!.... அவருக்கு வயிறு ஒட்டியிருந்தது! தொப்பையும் தொந்தியுமாய் இருக்கும் செல்ல மகன் இப்படி ஒட்டிய வயிறோடு இருக்கிறானே என்று அவருக்கு ஒரே வருத்தமாகிவிட்டது!....

"என்ன ஆயிற்று விநாயகா!' ன்னு பார்வதியம்மா கேட்டாங்க.

""எல்லாம் உங்களாலேதான்!.... நீங்க அப்பா, தன் கடமையைச் செய்யறாரான்னு சந்தேகத்தோடு பார்த்தீங்க.... அது முதல் தவறு!..... உங்க சந்தேகத்துக்காக அப்பாவி எறும்புகளைப் பட்டினி போடலாம்னு நினைச்சீங்க!.... அது இரண்டாவது தவறு!.... அதுக்கு மேலை அந்த எறும்புகளை மூடி சிறைப்படுத்தினீங்க.... அது மூணாவது தவறு!... தாயின் பழி தனயனைத்தானே சாரும்?.... எனக்கு அந்த எறும்புகளைப் பார்த்தா பாவமா இருந்தது!.... அதனாலே எறும்புகளின் பசியை நான் ஏற்றுக்கொண்டு என்னுடைய உணவை முழுசா அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்! '' என்றார் பிள்ளையார். 

பிள்ளையின் செயலைக் கண்ட பார்வதி நெகிழ்ந்து போனார்!.... கண்களின் ஆனந்தக் கண்ணீர்!...பிறகு, எறும்புகள்  தின்றது போக மீதமிருந்த உணவை பிள்ளையாருக்குக் கொடுக்கச் சொல்லிக் கட்டளையிட்டார் பரமேஸ்வரர்! 

பார்வதியும் அது போலவே செய்தார்!..... விநாயகரின் வயிறும் முன்போல் தொப்பையாக ஆனது!.... அது மட்டுமில்லே!.... இந்த எறும்புகள் யாரையும் துன்புறுத்தாது!.... இவை சுத்த சைவம்!.... அரிசியையோ, வெல்லத்தையோ கண்டால் அங்கே கூடிவிடும்! அந்த சம்பவம் நடந்ததிலேயிருந்து இந்தச் சின்னச் சின்ன கறுப்பு  எறும்புகளைப் பிள்ளையார் எறும்புகள்னு சொல்றாங்க.... அது மட்டுமில்லே!... சில வீடுகளில் இந்த எறும்புகளைப் பார்த்து விட்டால் போதும்! , உடனே பிள்ளையாருக்கென்று கொழுக்கட்டை செய்யணும்னு முடிவெடுத்துடுவாங்க!.... இந்தப் பிள்ளையார் எறும்புகள் சாப்பிட்ட மீதத்தைத்தானே விநாயகர் அன்று  உண்டார்!.... பிள்ளையாருக்கு எவ்வளவு அடக்கமான மனசு!....'' அப்படீன்னு கதையை முடிச்சாங்க ஜானகி சித்தி!

பிள்ளையார் சதுர்த்திக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு!.... இருந்தாலும் சமையல் கட்டிலே தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை வாசனை வருது!.... ஏலக்காய் மணத்தோடு!.... அம்மா பிள்ளையார் எறும்புகளைப் பார்த்தா உடனே செஞ்சுடுவாங்க!.... அது அவங்க நம்பிக்கை! எனக்கும் ரகுவுக்கும் சிறிது நேரத்தில் கொழுக்கட்டை வந்தது!.... நாங்க அதிலே கொஞ்சம் கிள்ளி அந்த எறும்புகளுக்குப் போட்டோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com