கண்ணா, கண்ணா வாராயோ!

கண்ணா கண்ணா வாராயோகவலை தீர்க்க மாட்டாயோஉன்னால்தானே மணிவண்ணா 
கண்ணா, கண்ணா வாராயோ!

கண்ணா கண்ணா வாராயோ
கவலை தீர்க்க மாட்டாயோ
உன்னால்தானே மணிவண்ணா 
உலகில் எல்லாம் நடக்கிறது!

மலையைக் குடையாய்ப் பிடித்தவனே!
மாய லீலைகள் செய்பவனே!
ஆலிலை மேலே கிடப்பவனே!
ஆநிரை மேய்த்து ரசிப்பவனே!

குழலில் கீதம் இசைக்கிறாய்!
குறும்புகள் செய்து களிக்கிறாய்!
வெண்ணெய் அள்ளும் கைகளினாலே 
வேண்டியதெல்லாம் கொடுக்கிறாய்!

பாம்புத் தலைமேல் ஆடுகிறாய்!
சகடனைச் சிதைக்க ஓடுகிறாய்!
தாம்புக் கயிற்றில் அடங்காமல் 
தாவிய கால்கள் உனதல்லவா?

அந்தக் கால்களைப் பற்றுகிறேன்
அனந்தனே உன்னை மெச்சுகின்றேன்!
தேவகி மெச்சிய நாயகனே!
தேவைகள் தீர்த்திடும் மாலவனே!

கோகுலாஷ்டமி நன்னாளில் 
குழந்தை வடிவில் நீ வருவாய்!
வண்ணச் சீரடி வரைந்திடுவோம்!
வந்திடு அதன்மேல் நடந்தபடி!

சீடை முறுக்கு எள்ளுருண்டை
சீனியில் செய்த தின்பண்டம்!
ஆடை மிதக்கும் பசும்பாலும்
ஆயிரமிருக்கு உனக்காக!

வேண்டுவதெல்லாம் உன்னருளே
வேய்ங்குழல் ஊதும் கோபாலா!
காணத் துடிக்கும் எங்களை நீ 
காண வருவாய் மணி வண்ணா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com