கருவூலம்: ஜார்க்கண்ட் மாநிலம்!

கருவூலம்: ஜார்க்கண்ட் மாநிலம்!



சென்ற இதழ் தொடர்ச்சி....
பைத்யநாத் தாம்! - தியோகர்
 தியோகரில் பல குன்றுகள் உள்ளன. இவ்வூரின் வழியே "யமுனாஜோர்' மற்றும் "தருவா' நதிகள் ஓடுகின்றன. இங்குள்ள பைத்யநாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. பிரதான கோயில் வளாகம் 22 கோயில்களை உள்ளடக்கியது. இங்குள்ள சிவலிங்கம் இறைவனே ராவணனுக்குக் கொடுத்தது எனக் கூறப்படுகிறது. இப்போதுள்ள கோயில் 1596 - இல் உருவாக்கப்பட்டது. 
 தியோகரில் ராமகிருஷ்ண வித்யா பீடம், த்ரிகுத், சத்சங் ஆசிரமம், நவ்லகா கோயில், ஷிவ்கங்கா குளம், தேவகங்கா மடம், போன்ற அவசியம் பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளன. மேலும், நந்தன் பஹார் என்ற புகழ் பெற்ற மலைவாசஸ்தலமும் இப்பகுதியில் உள்ளது. 


சிம்தேகா நகரம்!
 சிம்தேகா மாவட்டத்தின் தலைநகரம் இது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றி நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் காண வேண்டிய இடம் இது! இயற்கையுடன் இழைந்த ஆதிவாசிகளும், நாட்டுப்புற வாசிகளும் வசிக்கும் இடம்! 


கேலாக் ஹக் அணை! - சிம்தேகா
 இந்த அணையைச் சுற்றிலும் மலைத் தொடர்கள், பூங்காக்கள் உள்ளன. படகு சவாரி மற்றும் பாரா செய்லிங் வசதிகளும் உள்ளன. இப்பகுதியில் "ராம்ரேக்கா தாம்' என்ற கோயில் உள்ளது. வனவாசத்தின்போது ராமரும், சீதையும் வனவாசம் செய்த இடம் இது எனக் கூறப்படுகிறது. 


சத்ரா!
 இவ்வூர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நுழைவாயில் என வர்ணிக்கப்படுகிறது. அருவிகள், நீரூற்றுகள், பசுமையான காடுகள்போன்றவற்றால் நிறைந்து காணப்படுகிறது. சத்ராவிற்கு அருகில் பிசிஹில்யா, துராய், கேரிடஹ், மாலோடஹ், டுமெர் சமேரியா, கோவா, பெளருரா, ஷெரீப், பஹீடுளீ மற்றும் கோக்ரி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் பால்பால் துராய் என்ற வெந்நீர் ஊற்றும் உள்ளது. 


கிரிடிஹ் நகரம்!
 கிரிடிஹ் மாவட்டத்தின் தலைநகரம்! ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுரங்க நகரம் இது. இம்மாவட்டத்தின் பெரும்பகுதி காடாக உள்ளது. 


கண்டோலி அணை! - 
கிரிடிஹ்புகழ் பெற்ற சுற்றுலாத் தலம்! படகு சவாரி, பாறையேற்றம் போன்றவை உள்ளன. 


ஹரிஹர்தாம்!
 இக்கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய 65 அடி உயர சிவலிங்கம் உள்ளது. 


நேதர்ஹட் மலை வாசஸ்தலம்!
லடேகர் மாவட்டத்தில் உள்ளது! 6.4 மீ நீளமும், 4 கி.மீ அகலமும் கொண்ட சிறிய பீடபூமி. சாட்னி அருவி, கோயல் காட்சி முனை, மாக்னோலியா காட்சி முனை, "அப்பர் காக்ரி அருவி' மற்றும் லோயர் காக்ரி அருவி' என சுற்றுலாச் சிறப்பு மிகுந்த இடம்!


"பலமு' புலிகள் சரணாலயம்! 
 நம் நாட்டின் முக்கிய புலிகள் சரணாலயங்களில் ஒன்று! 1014 ச.கி.மீ. அளவிற்குப் பரந்து விரிந்து உள்ளது. புலிகளைத் தவிர்த்து, யானை, சிறுத்தை, காட்டெருமை, சாம்பார் மற்றும் பல வன விலங்குகள் இங்குள்ளன. இச்சரணாலயத்திற்குள், ராமன் டாக், லட்டூ, குகுரும் போன்ற சில வனகிராமங்களும் இருக்கின்றன. இப்பகுதியில் முர்ஹீ, ஹீலுக், குல்குல் போன்ற மலைகளும் உள்ளன. மனதைக் கவரும் இயற்கை எழில் நிறைந்த இடம்! பலமு கோட்டைகள்! 
தற்பொழுது அழிவின் விளிம்பில் இருக்கும் இரண்டு கம்பீரமான கோட்டைகள் பலமுவில் உள்ளன. இக்கோட்டைகள் செஹெரோ வம்சத்தவர்களுக்கு உரியது. 


பெட்லா தேசிய பூங்கா - பலமு
 இது ஒரு பழமையான வனப்பூங்காவாகும். புலி. சிறுத்தை, சம்பார் மான்கள், நீல்கை மான்கள், கக்கர் மான்கள், சுட்டி மான்கள், ஸ்லோத் கரடி, காட்டுக் கரடி, போன்ற வனவிலங்குகள் இங்கு காணப்படுகின்றன. இவ்வனப்பகுதிக்குள் சில வரலாற்று நினைவிடங்களும், "பிட்லா கோட்டை' என்ற பழமை வாய்ந்த கோட்டையும் உண்டு. காட்சிக் கோபுரங்களும் இங்கு இருக்கிறது. விடுதி வசதிகளும் உள்ளன. 


இஸ்கோ கிராமம்! - ஹசாரிபாக்
 பாறைச் சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற இந்த இடம் கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. 10.000 வருடப் பழமையான ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 


ஹஜாரிபாக் தேசியப் பூங்கா! 
- ஹஜாரிபாக்

 இந்தப் பூங்காவிலும் பல வகையான விலங்குகளும், தாவர வகைகளும் உள்ளன. 


சூரஜ்குண்ட் வெந்நீர் ஊற்று! 
- ஹஜாரிபாக்

 இங்கு சூர்யா, ராம், லட்சுமணர், சீதா, பிரம்மா என ஐந்து வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இந்த வெந்நீர் ஊற்றில் குளிப்பது பல நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகிறது. 


சின்ன மஸ்தா கோயில் 
- ராஜரப்பா, - ஹஜாரிபாக்!

 ஹஜாரிபாக்கின் முக்கிய யாத்திரைத் தலம் இது! இங்குள்ள சின்ன மஸ்தா 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அருகில் ஒரு அருவியும் உள்ளது. இயற்கை அழகு நிறைந்த இடம்!
கெளதம புத்தா வனவிலங்கு சரணாலயம்!
 இந்த சரணாலயம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது. 1976 - இல் நிறுவப்பட்ட இந்த சரணாலயம், ஆரம்பத்தில் ஒரு தனியார் வேட்டை இடமாக இருந்தது. இந்த சரணாலயம் கீழ் கங்கை சம்வெளியின் ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் சோட்டா நாக்பூரின் வறண்ட இலையுதிர் காடுகளை உள்ளடக்கியது. புலிகள், சிறுத்தைகள், ஓநாய்கள், கரடிகள் உட்பட பல வனவிலங்குகள் இங்குள்ளன. 


டால்மா வனவிலங்கு சரணாலயம்!
இது ஜாம்ஷெட்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 195 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே ஒரு சிவன் கோயிலும் உள்ளது. மலைகள் சூழ்ந்த இடம். பல்வேறு மிருகங்களுடன் காணப்படுகிறது.
இவற்றைத் தவிர பால்கோட் வனவிலங்கு சரணாலயம், பிர்சா மான்கள் சரணாலயம், இச்சாகர் பறவைகள் சரணாலயம், உத்வா பறவைகள் சரணாலயம் உட்பட பல சரணாலயங்களும், விலங்கியல் தோட்டங்களும் இங்குள்ளன. 


சோட்டா நாக்பூர் பீடபூமி!
 பொதுவாக கடல் மட்டத்தை விட நன்கு உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி எனப்படுகிறது. சோட்டா நாக்பூர் பீடபூமி என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு பீடபூமி ஆகும். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், மேற்கு வங்காளம், ஒரிசா (இன்றைய ஒடிசா), பீகார், சட்டீஸ்கர், ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது.
 சோட்டா நாக்பூர் பீடபூமியின் மொத்தப் பரப்பளவு சுமார் 65,000 ச.கி.மீ. ஆகும்! அவை ராஞ்சி, ஹசரிபாக், கோடர்மா என்பனவாகும். சிந்து, கங்கைச் சமவெளிப் பகுதி இப்பீடபூமியின் வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளது. மகாநதி ஆற்றின் நீரேற்றுப் பகுதி தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அருவிகள், காடுகள், வன விலங்குகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் இந்தப் பீடபூமி.


 ஜாம்ஷெட்பூர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கியத் தொழில் நகரம்! ஜாம்ஷெட்ஜி டாடா என்பவரால் நிறுவப்பட்டது. சாக்சி என்று முன்னால் அழைக்கப்பட்டது. 1919 - ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி நினைவாக ஜாம்ஷெட்பூர் என்று அழைக்கப்படுகிறது. டாடாவின் பல பெரிய நிறுவனங்களும், சிறு, குறு, தொழிற்கூடங்களும் நிறைந்துள்ள இடம் இது. "அதியபூர்' என்னும் பெரிய தொழில் பகுதி இங்கு உள்ளது. இந்நகரின் பெரும்பகுதி டாடா இரும்பாலை நிர்வாகத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. 


பொகாரோ எஃகு நகரம்!
 இதுவும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மற்றொரு பெரிய தொழில் நகரம். 200 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய எஃகு உருக்காலை இங்குள்ளது! மேலும், பொக்காரோ அனல் மின் நிலையம், சந்திப்புரா அனல் மின் நிலையம், தெனுக்காட் அனல்மின் நிலையம், எலக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்ஸ் மற்றும் பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளன.  நன்கு நிர்மாணிக்கப்பட்டு, நிர்வாகம் செய்யப்படும் நகரம் இது!
தன்பாத் ஜார்க்கண்டின் புகழ் பெற்ற நகரம் தன்பாத்! நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டது! இங்கு நிலக்கரி அகழ்ந்தெடுத்தல், கழுவுதல், சூளைக்கரி தயாரித்தல், ஆகியன முதன்மையான தொழிலாகும். தன்பாதில் கோயில்கள், அணைகள், நீர்வீழ்ச்சி என பல சுற்றுலா இடங்களும் உள்ளன. 
மேலும் ஒரு முக்கியத் தகவல்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 112 நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன! இவை மூலம் சுமார் 7000 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம்! 
வனங்கள், அருவிகள், ஆறுகள், கிராமிய ஓவியச் சிற்பக் கலைகள், அமைதி நிறைந்த ஆதிவாசிகளின் வாழ்க்கை, மலைகள், கோயில்கள், தொழில் சிறப்பு, கனிம வளம் எனத் தன் புகழை பறைசாற்றுகிறது ஜார்க்கண்ட் மாநிலம்!
நிறைவு


தொகுப்பு : கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com